தடம் தந்த தகைமை - சிம்சோனும் திமினாவின் இளம்பெண்ணும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சிம்சோன், திமினாவுக்குச் சென்றார்; திமினாவில் பெலிஸ்தியர் மகளிருள் ஒருத்தியைக் கண்டார். அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், “நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்றார். அவர் தந்தையும் தாயும் அவரிடம், “உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும்?” என்று கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், “அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார். அவர் தந்தையும் தாயும் இது ஆண்டவரின் செயல் என்று அறியவில்லை. ஏனெனில், அந் நாள்களில் இஸ்ரயேல் மீது அதிகாரம் செலுத்தி வந்த பெலிஸ்தியரைத் தண்டிக்க ஆண்டவர் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார். சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர். அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு சிம்சோன் மீது பாய்ந்தது. ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை அவர் வெறுங்கையால் கிழித்தார். அவர் தாம் செய்ததைத் தம் தந்தைக்கும் தாய்க்கும் கூறவில்லை. அவர் சென்று அப்பெண்ணிடம் பேசினார். சிம்சோனுக்கு அவள் பிடித்தவளாகத் தோன்றினாள். சில நாள்கள் கழித்து அவளைக் கூட்டிச் செல்ல அவர் மீண்டும் வந்தார். அவர் சிங்கத்தின் பிணத்தைக் காணத் திரும்பினார். இதோ! சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் காணப்பட்டன. அவர் தேனடையைக் கையில் எடுத்து அருந்திக் கொண்டே தொடர்ந்து நடந்தார்; தம் தந்தை தாயிடம் சென்று அவர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அருந்தினர். அவர் அவர்களிடம் சிங்கத்தின் பிணத்திலிருந்து தேனடையை எடுத்ததாகச் சொல்லவில்லை.
அவர் தந்தை பெண்வீட்டுக்குச் சென்றார். அங்குச் சிம்சோன் விருந்தளித்தார். ஏனெனில், இளைஞர்கள் அவ்வாறு செய்வது வழக்கம். அவர்கள் அவரைப் பார்த்து அவருடைய தோழராய் இருக்குமாறு முப்பது பேரைக் கூட்டி வந்தனர். சிம்சோன் அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை கூறுகின்றேன். நீங்கள் விருந்தின் ஏழு நாள்களுக்குள் அதற்கு விடை கண்டுபிடித்து எனக்குக் கூறினால், நான் உங்களுக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் அளிப்பேன். நீங்கள் எனக்குச் சரியான விடை கூறமுடியாவிடில், எனக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் அளிக்கவேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்கின்றோம்” என்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்