தடம் தந்த தகைமை – சாலமோன் அரசராகத் திருநிலைப்படுத்தப்படுதல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தாவீது அரசர், “குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார். அவ்வாறே, அவர்கள் அரசர்முன் வந்தார்கள். அரசர் அவர்களிடம், “உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின்மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்யட்டும். எக்காளம் முழங்க, ‘சாலமோன் அரசர் வாழ்க!’ என்று வாழ்த்துங்கள். அதன்பின், அவனை இங்கே அழைத்து வாருங்கள். அவன் வந்து என் அரியணைமீது அமர்ந்து, எனக்குப் பதிலாக அரசாள்வான். இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் அவனைத் தலைவனாக நியமிக்கிறேன்” என்றார்.
யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக “அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக! ஆண்டவர் என் தலைவரான அரசருடன் இருந்தது போல் சாலமோனுடனும் இருப்பாராக! அவரது அரியணையை என் தலைவர் தாவீது அரசர் அரியணையைவிட மாண்பு மிக்கதாக ஆக்கியருள்வாராக!” என்றான். அவ்வாறே, குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோர் அங்கிருந்து போய், சாலமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி, கீகோனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே குரு சாதோக்கு கூடாரத்திலிருந்து எண்ணெய்க் கொம்பை எடுத்து வந்து, சாலமோனை திருப்பொழிவு செய்தார். அப்பொழுது எக்காளம் முழங்க எல்லா மக்களும் “சாலமோன் அரசர் வாழ்க!” என்றனர். எல்லா மக்களும் தாரை ஊதிக் கொண்டு மிகுந்த அக்களிப்போடும் ஆர்ப்பரிப்போடும் அவர் பின்னால் சென்றனர். அவர்கள் எழுப்பிய பேரொலியால் நிலமே நடுங்கிற்று.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்