கடவுளின் விருப்பமான அமைதியைக் கொண்டுவரும் பணி
மெரினா ராஜ் – வத்திக்கான்
உலக கத்தோலிக்க பேரவையின் பணி என்பது அரசியலில் ஈடுபடுவது அல்ல மாறாக உலகில் அமைதியைக் கொண்டுவருவதற்கான கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றும் பணி என்று கூறியுள்ளார் முனைவர் Jerry Pillay
WCC எனப்படும் உலக கத்தோலிக்கப் பேரவையின் பொதுச்செயலரான பேராசிரியர் முனைவர் Jerry Pillay அவர்கள் மாஸ்கோ முதுபெரும்தந்தை கிரில் உடனான தனது சமீபத்திய சந்திப்பின் நோக்கம் பற்றிய கருத்துக்களை வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.
உக்ரைன் போர் மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவை தொடர்புடைய பிரச்சனைகளை விவாதித்த முனைவர் Pillay அவர்கள், நடந்து கொண்டிருக்கும் போர் நிறுத்தப்பட்டு அமைதிக்காக இடைவிடாமல் உழைக்க வேண்டும் என்றும் உக்ரைன் அமைதிக்காக தலத்திருஅவைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
சிக்கலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், உலக கத்தோலிக்கப் பேரவையானது உக்ரைனில் அமைதிப் பாலங்களைக் கட்டுவதற்கான தனது முயற்சிகளைத் தொடர உறுதிபூண்டுள்ளதாகவும், மாஸ்கோவின் முதுபெரும்தந்தை கிரில் உடனான சந்திப்பின் முதன்மையான நோக்கம் போரில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவையின் நிலைப்பாட்டை விவாதிக்கவும், இரண்டு தலத்திருஅவைகளுக்கிடையில் ஆழமடைந்து வரும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதாகவும் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உலகளாவிய ஒன்றிப்பிற்கு சவால் விடும் இச்சூழ்நிலையானது போர் முடிவுக்கு வரல், ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் ஒற்றுமை, ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவைகளுக்கு இடையிலான பிளவுகள், போரைப் பற்றிய அவர்களின் மாறுபட்ட கருத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கவலைகளையும் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார் முனைவர் Pillay.
கடினமான, சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும், கிறிஸ்தவர்களாகவும், பொதுமக்களாகவும், போர் நிறுத்தம் வேண்டும் என்று சொல்வது நமது உரிமை மற்றும் பொறுப்பு என்றும் எடுத்துரைத்தார் Pillay.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்