பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு: உள்ளம் கலங்காதிருப்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. திப 6: 1-7 II. 1 பேது 2: 4-9 III. யோவா 14: 1-12)
இன்றைய வாசகங்கள் உள்ளம் கலங்கவேண்டாம், இதுவும் கடந்துபோகும் என்ற உயரிய படிப்பினையைத் தருகின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, முதல்பகுதியில், தானே உண்மையும், வழியும், வாழ்வும் என்று எடுத்துரைக்கின்றார் இயேசு. இரண்டாம் பகுதியில் சீடர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக, தந்தையின் செயல்களைச் செய்யும் தன்னை கண்டு அறிந்துகொண்டாலே போதும், அது இறைத்தந்தையை அறிந்துகொண்டதற்குச் சமம் என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார் இயேசு. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்றும், “நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்” என்றும் இயேசு கூறும் வார்த்தைகள் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையக்கருத்தாக அமைகின்றன.
எதற்காக இயேசு தன் சீடர்களிடம், ‘நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்’ என்று கூறுகிறார் என்பதையும் இயேசுவின் எம்மாதிரியான செயல்கள் சீடர்களின் உள்ளங்களில் கலக்கத்தை ஏற்படுத்தின என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். இயேசு இன்று நமக்கு வழங்கும் இயேசுவின் வார்த்தைகள் யோவான் நற்செய்தியில் 14-ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 13-ஆம் அதிகாரத்தில் என்ன நிகழ்கிறது என்பதை நாம் அறிய நேர்ந்தால் மேற்கண்ட இயேசுவின் வார்த்தைகளுக்குப் பொருள்புரியும். யோவான் நற்செய்தியின் 13-ஆம் அதிகாரத்தில் சீடரின் காலடிகளைக் கழுவுதல், இயேசுவும் அவரைக் காட்டிக் கொடுப்பவனும், புதிய கட்டளை, பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் என நான்கு தலைப்புகளின் கீழ் இயேசுவின் செயல்களைப் பட்டியலிடுகின்றார் யோவான் நற்செய்தியாளர். முதலாவதாக, இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியபோதே அவர்களின் உள்ளங்களில் கலக்கம் ஏற்பட்டுவிட்டது. காரணம், யூத பாரம்பரியத்தில் எந்தயொரு போதகரும் செய்யத் துணியாத காரியத்தை இயேசு செய்தார். அதனால்தான், பேதுரு, “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்றும், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” (காண்க யோவா 13: 6,8) என்றும் கூறி இயேசுவின் புரட்சிகரமான செயலுக்குத் தடைபோடுவதைப் பார்க்கின்றோம். மேலும், ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் (காண்க யோவா 18:14) என்ற இயேசுவின் வார்த்தைகளும் சீடர்களின் உள்ளத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறி (வசனம் 21) தன்னைக் காட்டிக்கொடுக்கவிருக்கும் யூதாசின் சதித்திட்டத்தை பற்றி எடுத்துரைக்கிறார் இயேசு. இதனால் இயேசுவுக்கும், அவர் பின்னால் இருக்கும் தங்களுக்கும் என்ன நிகழப்போகிறதோ என்றும் அவர்கள் கலக்கம் கொண்டிருக்கலாம். மூன்றாவதாக, "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்ற புதிய கட்டளையை இயேசு கொடுக்கிறார். அப்படியெனில், இந்தப் புதியகட்டளையின் பொருள் என்ன? இதனை எப்படி வாழ்ந்து கட்டுவது? இதனை வாழ்ந்துகாட்டுவதன் வழியாக மிகப்பெரும் சவால்களைச் சந்திக்கவேண்டி இருக்குமோ என்று அவர்கள் கலங்கி இருக்கலாம். நான்காவதாக, நெருக்கடியான வேளையில் தன்னை மறுதலிக்கவிருக்கும் பேதுருவைப் பற்றியும் கூறுகிறார். “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” (வச.38) என்று இயேசு பேதுருவைப் பார்த்து சொல்கின்றார். ஆகவே, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (காண்க மத் 16:16) என்றெல்லாம் கூறி இயேசுவிடம் நற்பெயர் பெற்ற பேதுருவா இந்தச் செயலைச் செய்யவிருக்கிறார் என்றும் அவர்கள் மேலும் கலக்கமடைந்திருக்கலாம்.
ஆக, சீடர்களுடைய உள்ளத்து எண்ணங்களை இயேசு நன்கு அறிந்திருந்தபடியால்தான், “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறி அவர்களைத் தேற்றுகின்றார் இயேசு. இதனைத் தொடர்ந்து கூறும் இயேசுவின் வார்த்தைகள் இறைத்தந்தையுடனான அவரின் புனிதமான உறவைப் பறைசாற்றுகின்றன. "நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்" என்று கூறுவதன் வழியாகப் பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வுலகை மீட்கும் செயலில் தந்தையின் புனிதமிக்கத் தியாகத்தையும் எடுத்துக்காட்டுகின்றார். எனவே உண்மையும் வாழ்வும் வழியுமாய் இருக்கின்ற தன்னைப் பின்பற்றினால், எல்லாத் துயரங்களையும் அனுபவிக்க வேண்டியிருப்பினும், அவற்றிக்கு ஈடாகவும், பரிசாகவும் இறைத்தந்தைத் தரும் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ளலாம் என்றும் நம்பிக்கைத் தருகின்றார் இயேசு.
இப்படிப்பட்ட நிலைவாழ்வு தருபவரும், அவ்வாழ்வுக்கு வழிகாட்டுபவருமான இயேசுவை எடுத்துக்காட்டும் விதமாக, உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக என்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே, உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி என்றும் எடுத்துரைக்கின்றார் புனித பேதுரு. இந்த நிலைவாழ்வு தரும் இறைவார்த்தைகளைப் போதிப்பதற்கு உரிய வழிகளைத் தேடாமல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் கிரேக்க மொழி பேசுவோரையும், எபிரேய மொழி பேசுவோரையும் பன்னிருத் திருத்தூதர்களும் கடிந்துகொள்ளும் விதமாக, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல" என்று கூறுவதை இன்றைய முதல் வாசகம் பதிவு செய்கின்றது.
பங்குத்தந்தை ஒருவர் தனது பங்கில் செபக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். முன்னூறு பேருக்கும் குறையாமல் அவ்வழிபாட்டில் கலந்துகொண்டனர். செபவழிபாட்டை நடத்திய அந்த அருள்பணியாளர் மிகச் சிறப்பாக நற்செய்தியை அறிவித்துப் பாடல்கள் பாடி மிகவும் பொருளுள்ள விதத்தில் அவ்வழிபாட்டை நடத்தினார். எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது. இறுதியாக, கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. உணவருந்திவிட்டு தங்கள் இல்லங்களுக்குத் திரும்பும் வேளையில் பங்குத்தந்தையிடம் வந்த பெண்கள் சிலர், "சாமி சாப்பாடு அருமை, பிரியாணி ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது... ஆமாம் சாமி... எந்தக் கடையில அரிசி வாங்கினீங்க... கொஞ்சம் சொன்னீங்கன்னா நாங்களும் போய் அதே கடையில் அதே அரிசியியை வாங்கி பிரியாணி செய்து சாப்பிடுவோம்" என்று கூறினர். இன்னும் சிலர் வந்து, "சாமி.. சாப்பாடு படு சூப்பர்...ஆனா, நெறைய பேருக்குப் பிரியாணி இரண்டாவது முறை கிடைக்காம போச்சு... இன்னும் கொஞ்சம் கூட சமைச்சிருக்கலாம்" என்று குறைபட்டுக்கொண்டு சென்றனர். இதையெல்லாம் கேட்ட அந்தப் பங்குத் தந்தை மிகவும் வருந்தினார். காரணம், வந்திருந்தவர்களில் யாருமே, செப வழிபாட்டைப் பற்றியோ, அவர்கள் பெற்றுக்கொண்ட ஆன்மிக ஆறுதல் பற்றியோ ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. எல்லா இடங்களிலும் இப்படித்தான் நிகழ்வதாக நாம் குறைபட்டுக்கொள்ள தேவையில்லை. ஆனாலும், இறைநம்பிக்கையாளர்களின் மனநிலையை இந்நிகழ்வு பிரதிபலிக்கின்றது என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
ஆகவே, நமது அன்றாட வாழ்வில் சவால்களைச் சந்திக்கும் வேளை நாம் எப்படிப்பட்ட மனநிலையில் நடந்து கொள்கின்றோம்? அவற்றைத் தகர்த்தெறிந்து கடந்து செல்லவேண்டும் என்று நினைக்கின்றோமா அல்லது, உள்ளம் கலங்கிய நிலையில் அச்சத்தால் உறைந்து போய்விடுகின்றோமா என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோம். வழியும் உண்மையும் வாழ்வும் கொண்ட இயேசுவின் பாதையில் பயணிக்க வேண்டுமெனில் நாம் உடைபட்டுதான் ஆகவேண்டும், இதைத்தான், 'உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்' என்றும், 'மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்' என்கின்றார் கவிஞர் பா.விஜய். நம் முன்னவர்களும், ‘உழப்படாத நிலம் எதுவும் பண்படாது பலனும் தராது’ என்கின்றனர். ஆகவே, உயர்ந்த இலட்சியத்தை அடையும் வழியில் வரும் துயரங்களைத் தாங்காத மனிதர் பண்படவும் முடியாது. பலன் தரவும் முடியாது என்பதை உணர்வோம்.
இந்தச் சிறிய செபத்துடன் நமது மறையுரைச் சிந்தனைகளை முடிவுக்குக் கொணர்வோம். அன்பான இயேசுவே, எங்களை ஆசீர்வதியும். இந்தப் பாஸ்கா நாள்களில் எங்கள் உள்ளங்களை உமது உயிர்ப்பின் வல்லமையால் நிரப்பும். இலட்சியம் என்னும் சிலுவைகளைத் தூக்காது நாங்கள் உயிர்ப்பு என்னும் உன்னத வாழ்வை அடைய முடியாது என்பதை எங்களுக்குக் கற்றுத்தாரும். சவால்களைச் சந்திக்கும் எங்களின் பயணங்களில் நாங்கள் கலங்கும் வேளை, எங்களைத் தேற்றியருளும். நீர் இறைத்தந்தையுன் ஒன்றிணைந்திருந்ததுபோல நாங்களும் உம்மோடு என்றும் இணைந்திருக்க செய்தருளும். இந்த உலகம் தரும் இன்பங்களில் சிக்கிக்கொள்ளாமல், உமது உயிர்ப்பின் நற்செய்தியை உன்னதமான உள்ளத்துடன் அறிவிக்க அருள்தாரும் ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்