திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை புனித 10ஆம் பயஸ்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நேயர்களே! நாம் கடந்த வாரம் நோக்கிய திருத்தந்தை 13ஆம் லியோவுடன் 19ஆம் நூற்றாண்டு திருத்தந்தையர் வரலாறு நிறைவுக்கு வந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் திருத்தந்தை 10ஆம் பயஸ் ஒரு புனிதர். ஐரோப்பாவின் அமைதிக்கான அச்சுறுத்தலின் ஒரு காலக்கட்டத்தில், மதவிரோத மற்றும் மதத்தலைவர்களுக்கான எதிர்ப்பு பரவி வந்த ஒரு காலக்கட்டத்தில் பொறுப்பேற்றவர் திருத்தந்தை 10ஆம் பயஸ். இலத்தீன் கலாச்சாரம் ஒரு பக்கம் பிரான்சின் மக்களாட்சிக்கு வழிகாட்ட, மறுபக்கமோ போர்த்துகல்லிலும் இஸ்பெயினிலும் சர்வாதிகார ஆட்சிகள் தலைதூக்கத் தொடங்கின. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கிய காலக்கட்டம் 20ஆம் நூற்றாண்டு. ஜெர்மனியில் நாத்ஸியமும் இரஷ்யாவில் கம்யூனிசமும் ஆட்சி செய்த காலம் இருபதாம் நூற்றாண்டு. ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி என இரும்புக்கரங்கள் மக்களை அடக்கி ஆண்ட நூற்றாண்டில் திருத்தந்தையாக பொறுப்பேற்றார் பாப்பிறை 10ஆம் பயஸ். ஒரு பக்கம் இரஷ்யாவும் அதன் பிடியிலிருந்த ஐரோப்பிய பகுதிகள், இன்னொரு பக்கமோ ஆப்ரிக்க ஆசிய நாடுகள் இணைந்த “அணிசேரா நாடுகள்” அமைப்பு. இவர்களுக்கிடையில் உண்மை எது பொய் எது என்று அறிய உதவும் ஒரு மனச்சான்று தேவைப்பட்டது. இந்த மனச்சான்றின் பாதுகாவலராக இருக்கவேண்டிய தேவை திருத்தந்தையர்களுக்கு ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நூற்றாண்டில் திருத்தந்தையாகிறார் 10ஆம் பயஸ்.
1903ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் லியோ இறந்தபோது கர்தினால்கள் அவை ஒன்றிணைந்து தேர்ந்தெடுத்தவர்தான் வெனிசின் கர்தினால் Giuseppe Melchiorre Sarto. இவர் 10ஆம் பயஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். இத்தாலியின் Treviso மறைமாவட்டத்தின் Riese என்னுமிடத்தில் 1835ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி ஓர் ஏழைக்குடும்பத்தில் தபால்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்த இவர், 1858ஆம் ஆண்டு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
Treviso உயர் குருமடத்தின் ஆன்மீகத்தந்தையாக பணியாற்றியுள்ள இவர், 1884 நவம்பரில் Mantua ஆயராக நியமிக்கப்பட்டார். 1893ல் வெனிஸ் தலத்திருஅவையின் முதுபெரும் தந்தையாக நியமனம் பெற்றார். 10 ஆண்டுகள் வெனிஸ் பெருமறைமாவட்டத்தின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தார். திருஅவையின் வளர்ச்சி தவிர இவர் வாழ்வில் வேறு எந்த ஆசையும் இருந்ததில்லை. 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள மிகவும் தயங்கினார். கர்தினால்கள் முன்னிலையில் மறுத்தும் அவர்கள் இவரைத் தேர்ந்தெடுத்தபோது, அதுவே இறைவிருப்பம் என ஏற்றுக் கொண்டார். இளவயதிலேயே சிறார்களை திருநற்கருணைப் பெற தயாரிக்க வேண்டும் என பங்கு குருக்களை விண்ணப்பித்து, ஏழு வயதிலேயே திவ்ய நற்கருணை பெறலாம் என அறிவித்தார். திவ்ய நற்கருணைமீது கொண்ட அளவற்ற பக்தியாலேயே 1905ஆம் ஆண்டு உரோம் நகரில் திருநற்கருணை மாநாட்டை கூட்டினார் பாப்பிறை 10ஆம் பயஸ்.
மரியன்னையின் அமல உற்பவம் குறித்த திருஅவையின் விசுவாச சத்தியம் பிரகடனப்படுத்தப்பட்டதன் 50ஆம் ஆண்டையொட்டி “மரியன்னை மாநாட்டையும்” உரோம் நகரில் கூட்டினார். திருஅவையில் இசையை ஊக்குவித்தவர்களில் முக்கியமானவர் இவர். குறிப்பாக கிரகோரியன் இசையை ஊக்குவித்தார். மதபோதகர்கள், மறைகல்வி வகுப்புகள், சிறார்களுக்கு மட்டும் உரியவை அல்ல, பெரியவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் திருத்தந்தை 10ஆம் பயஸ். இவர் ஆயராக இருந்தபோதும் சரி, திருத்தந்தையான பின்னரும் சரி, குருத்துவப் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி உழைத்தார். குருக்களுக்கான கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் இவர், சிறு சிறு குருமடங்களை மூடிவிட்டு, மாகாண அளவிலான குருமடங்களைத் திறந்தார். சமூக நிறுவனங்களின் உலகு சார்ந்த நிர்வாகப் பொறுப்புகளில் குருக்கள் பதவி வகிப்பதை இவர் தடைச் செய்தார். திருத்தந்தையின் தலைமைத்துவம், திருவருட்சாதனங்கள், இறை வேண்டுதல், விவிலியம் போன்றவை குறித்து நவீனகால இறையியலாளர்கள் எழுப்பிய 65 பரிந்துரைகளை வன்மையாகக் கண்டித்து "Lamentabili" என்ற விதிகளையும், பின்னர் "Pascendi" என்ற மடலையும் வெளியிட்டார். நவீன போக்குகளை இவர் வன்மையாகக் கண்டித்தார். இயேசு சபையினரின் நிர்வாகத்தின் கீழ் “விவிலிய நிறுவனத்தை” உருவாக்கியவர் திருத்தந்தை 10ஆம் பயஸே.
அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் 28 புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார் திருத்தந்தை 10ஆம் பயஸ். பிரான்ஸ் திருஅவையில் அமைதியைக் கொணர மூலகாரணமாக இருந்தவரே இவர்தாம். பக்தியும் நிர்வாகத்திறமையும் நிறைந்த இத்திருத்தந்தையால் அது இயலக்கூடியதாகியது. போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுடன் திருஅவைக்கான உறவை மேலும் மேம்படுத்தினார். இத்தாலியின் கலாபிரியாவில் நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இவரால் 70 இலட்சம் பிராங்கு நிதியை திரட்ட முடிந்தது என்றால், மக்கள் இவர்மீது வைத்திருந்த நம்பிக்கையைப் புரிந்து கொள்ளலாம். 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி இறைபதம் சேர்ந்த இத்திருத்தந்தை, 1954ஆம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டார். இவருக்குப்பின் வந்த திருத்தந்தையர்களுள் 23ஆம் ஜானும், 6ஆம் பவுலும், இரண்டாம் ஜான் பாலும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நேயர்களே! திருத்தந்தை 10ஆம் பயஸைத் தொடர்ந்து திருஅவையை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பாப்பிறை 15ஆம் பெனடிக்ட். முதலாம் உலகப்போர் காலத்தில் திருஅவையை ஏறத்தாழ ஏழரை ஆண்டுகள் வழிநடத்திச் சென்றார். இவரின் பாப்பிறை பணிகாலம் குறித்து வரும் வாரம் நோக்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்