உலக ஆயர் மாமன்றத்தில் துறவறத்தார், பொதுநிலையினர்...
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருஅவையின் செயல்பாடுகள் குறித்து முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பெண்களின் அதிக மற்றும் ஆர்வமிக்கப் பங்கேற்பை வரவேற்க உலகளாவிய திருஅவையும், தலத்திருஅவைகளும் தங்கள் கதவுகளைத் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இறையியல் பேராசிரியரான அருள்தந்தை Joseph Ho Thu.
ஏப்ரல் 26, புதனன்று, திருப்பீடம் வெளியிட்ட அறிக்கையொன்றில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயரல்லாதவர்கள், அதாவது, அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் வாக்களிக்கும் தகுதி பெறுகிறார்கள் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இவ்வாறு உரைத்துள்ளார் அருள்தந்தை Joseph Ho Thu.
நமதாண்டவர் இயேசு, சில பெண்களைத் திருத்தூதுப் பணிகளில் பங்கு கொள்ள அனுமதித்ததால், பெண்களுக்கு எதிராக எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை உறுதி செய்ய திருஅவை அதன் இயல்புக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் அருள்தந்தை Joseph Ho Thu.
இந்த மாற்றும் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Pablo Virgilio S. David, ஆணாதிக்கம் நிறைந்த நிறுவனத்தில் இருந்து, விளிம்புநிலையை நோக்கிச் சென்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், இதன் வழியாக, விளிம்புநிலையில் உள்ளவர்களைத் தாங்களே முடிவெடுக்க அனுமத்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
உண்மையில் தான் இம்மாற்றத்தை எதிர்பார்த்ததாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வுலக ஆயர் மாமன்றத்தில் பெண் துறவறத்தாரை மட்டுமன்றி, பொதுநிலையினரையும் வாக்களிக்க அனுமதித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் ஆயர் David
மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இது ஒரு வித்தியாசமான ஆயர்கள் மாமன்றம் என்று தொடக்கத்திலிருந்தே தெளிவுபடுத்தினார் என்றும், இது ஆயர்களுக்கான மாமன்றம் மட்டுமல்ல, மாறாக, ‘ஒருங்கிணைந்த பயணம்’ என்ற தலைப்பில் முழுத் திருஅவைக்குமான ஆயர்கள் மாமன்றம் என்றும் தெரிவித்துள்ளார் ஆயர் David.
தனது நாட்டில், ஏற்கனவே நடைபெற்ற தேசிய மற்றும் கண்டங்கள் அளவிலான synod கூடத்தில் இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினர் பிரதிநிதிகளாக முழுமையாகப் பங்கேற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார் ஆயர் David (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்