மியான்மாரில் மோச்சா புயலால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மோச்சா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மாரின் இராக்கைன், சின் மற்றும் மாண்டலே பகுதிகளுக்கு உதவிகளை வழங்குமாறு அனைத்துலக காரித்தாஸ் உள்ளிட்ட உதவி நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் கத்தோலிக்க கருணா பாய் (Karuna Pyay) அமைப்பின் இயக்குனர் அருள்பணியாளர் Nereus Tun Min
கருணா பாய் அமைப்பு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இராக்கைன் மாநிலம் மற்றும் வடமேற்கு சின் மாநிலத்திலுள்ள பலேட்வா நகரங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உதவி வருகிறது என்றும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதி, ஆளும் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் கோட்டையாகவும் உள்ளது என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Min.
ஒரு சில தனியார் நன்கொடையாளர்கள் மற்றும் மதக் குழுக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன என்றும், இயேசு சபையினர், இராக்கைனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இல்லங்களின் கூரைகளைச் சீரமைப்பதற்கு உதவியுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் அருள்பணியாளர் Min.
இந்த மோச்சா புயல் கடலோரப் பகுதிகளை அழித்துவிட்டது என்றும், பல்லாயிரக்கணக்கான மக்களின் இல்லங்களின் கூரைகளை சேதப்படுத்தியுள்ளது என்றும், மே 23 அன்று ஜெனீவாவில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார் மியான்மாருக்கான ஐ.நா-வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் திரு.இராமநாதன் பாலகிருஷ்ணன்.
மியான்மாரில் மோச்சா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 16 இலட்சம் மக்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் நிறுவனம் 333 மில்லியன் அமெரிக்க டாலர்களை (33 கோடியே 30 இலட்சம்) கோரியுள்ளது. இவர்களில் பலர் தங்களின் வீடுகளை முற்றிலுமாக இழந்துள்ளனர்.(UCAN )
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்