புனித பூமியின் அமைதிக்காக உழைப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாலஸ்தீனிய அல்-நக்பாவை (al-Nakba) நினைவுகூரும் வேளை, எருசலேமிலுள்ள முதுபெரும் தந்தையர்களும் தலத்திருஅவைத் தலைவர்களும் அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படையில் புனித பூமியில் நிரந்தர மற்றும் நியாயமான அமைதிக்காகப் பாடுபடவேண்டுமென அறிக்கை ஒன்றில் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
பேரழிவு என்று அழைக்கப்படும் அல்-நக்பாவின் 75-வது ஆண்டு நிறைவை மே 15, இத்திங்களன்று, பாலஸ்தீனியர்கள் நினைவுகூர்ந்த நிலையில், இத்தகையதொரு அழைப்பை எருசலேமின் தலத்திருஅவைத் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.
மனிதநேயத்தில் நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள் என்பதையும், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நீதியை அடைய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் நமது நம்பிக்கை நமக்குக் கற்பிக்கிறது என்று மே 15, திங்களன்று வெளியிட்ட அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அன்பு, இரக்கம், ஒருவருக்கொருவர் மீதான மரியாதை ஆகியவை உலகில் அமைதியை அடைவதற்கான பாதைகள் என்று கிறிஸ்தவம் நமக்குக் கற்பித்துள்ளது என்றும், இது குறிப்பாக, நமது அன்பான புனித பூமிக்குப் பொருந்தும் என்றும் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளனர் தலத்திருஅவைத் தலைவர்கள்.
நீதியும் அமைதியும் புனிதப் பூமியில் நிலைத்தன்மை மற்றும் வளமைக்கான திறவுகோல்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும், இந்த உன்னத இலக்குகளை அடைய சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
1948-இல் 7,00,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய அல்லது கட்டாயப்படுத்தப்பட்டவர்களை al-Nakba நினைவுகூர்கிறது. இந்தப் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சந்ததியினரின் மொத்த எண்ணிக்கை மத்திய கிழக்கு முழுவதும் தற்போது 50 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதைய அரபு-இஸ்ரேல் மோதலில் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே உள்ளது. நீண்டகாலமாகத் தாங்கள் இழந்த வீடுகளுக்கு மீண்டும் திரும்பவேண்டும் என்ற அப்புலம்பெயர்ந்தோரின் கோரிக்கையை இஸ்ரயேல் அரசுத் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்