தேடுதல்

கடவுளிடமிருந்து கட்டளைகளைப் பெறும் மோசே கடவுளிடமிருந்து கட்டளைகளைப் பெறும் மோசே  

தடம் தந்த தகைமை – திருச்சட்டக் கற்பலகைகளை அளித்த ஆண்டவர்

மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிஎடுத்துக்கொண்டார். ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி, அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆண்டவர் மோசேயை நோக்கி, “முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன். முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில். உன்னோடு வேறெவனுமே ஏறிவர வேண்டாம். மலையெங்கிலும் எவனுமே காணப்படலாகாது. அந்த மலைக்கு எதிரே ஆடு மாடுகள் மேயவும் கூடாது” என்றார். அவ்வாறே, மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிஎடுத்துக்கொண்டார். ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி, அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்” என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, “என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2023, 11:02