தேடுதல்

நீர்க்குமிழிகள் நீர்க்குமிழிகள்  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 39-2, நீர்க்குமிழியாய் மானிடர் வாழ்வு

வாழும்வரை பாவத்தை விளைவிக்கும் ஆசைகளைத் தவிர்த்து மற்றவர்களின் அன்பை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மானிடர் வாழ்வு நிலையற்றது!’ என்ற தலைப்பில் 39-வது திருப்பாடலில் 01 முதல் 04 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 05, 06 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்து நாம் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அந்த இறைவார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். “என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார்” (வசனம் 5-6)

தன் வாழ்நாளின் அளவு மிகக் குறுகியது என்றும், தான் எத்துணை நிலையற்றவன் என்றும் இத்திருப்பாடலின் தொடக்கத்தில் தாவீது தனது சிந்தனைகளை வெளிப்படுத்தினார் என்று கண்டோம். இப்போது அதனைத் தொடர்ந்து வரும் இறைவார்த்தைகளிலும் நிலையற்ற வாழ்வைக் குறித்தே பேசுகின்றார். நாம் தியானிக்கும் இந்த இரண்டு இறைவசனங்களிலும் மூன்று முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றார் தாவீது அரசர்.  

01. விறற்கடை அளவான வாழ்வு

நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆள்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும். அதாவது, பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட தூரம் சற்று அதிகம். ஆனால், ஆள்காட்டிவிரல் முதல் சுண்டுவிரல் வரையுள்ள நன்கு விரல்களுக்கும் இடையேயுள்ள தூரம் மிக மிகக் குறைவு. இந்த விரல்களின் தூரங்களுக்கு ஒப்பானதுதான் மனித வாழ்வு. இந்த உண்மையை அறிந்த காரணத்தினாலேயே, ‘என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை' என்கிறார் தாவீது

02. மானிடர் நீர்க்குமிழி போன்றவர்

நீரின் கீழ்பரப்பிலிருந்து வாயு வெளியேறும் போது, நீர்மத்தின் மேற்புறத்தில் தோன்றும் நிலைமாற்றம், நீர்க்குமிழி என்று அழைக்கப்படுகிறது. நாம் ஒவ்வருவருமே இக்காட்சியை நமது வாழ்வில் கண்டிப்பாகக் கண்டிருப்போம். நீரின் அடியிலிருந்து வெளியேறும் நீர்க்குமிழிகள் நீரின் மேல்மட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும். இதனைத்தான், 'நீர்க்குமிழி போல் தோன்றி உடனே அழியக் கூடிய பிறவியாகிய கடலில் நான் விழலாமோ? விழுந்து துன்புறலாமோ?' என்கிறார் மாணிக்கவாசகர். மேலும், படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்- தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல் (நாலடியார் 27) என்ற நாலடியார் பாடலானது, மழை பொழியும்போது நீரில் தோன்றும் குமிழி போல் மறைவதுதான் உடம்பு என்று எண்ணித் தெளிந்தவர், மனம் தடுமாற்றம் இல்லாதோர்க்கு ஒப்பானவர் என்கிறது. ஆக, தாவீதும் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தபடியால்தான், உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர் என்கின்றார்.

03. வருந்தி உழைப்பது வீண்

இந்த வார்த்தையைக் கேட்ட உடனேயே நாம் இதனைத் தவறுதலாகப் புரிந்துகொள்ள கூடாது. அதாவது, வருந்தி உழைப்பது வீண் என்று எண்ணக்கூடாது. காரணம், அடுத்தவரை சுரண்டி, அநியாயமாக வட்டி வசூலித்து, ஏழைகளை வதைத்தொழித்து சுயநலத்துடன் சேமிக்கும் எதுவும் நிலைபெறுவதில்லை என்ற அர்த்தத்தில் நாம் இதனைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். இயேசு கூறும் அறிவற்ற செல்வனின் உவமையில், ‘கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார் (காண்க. லூக் 12:20) என்று எடுத்துரைக்கின்றார். மேலும், வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? (காண்க. சஉ 1:2-3) என்று கூறப்படுவது இதன் அடிப்படையில்தான். ஆகவே, பகிரப்படாத செல்வத்தால் பயன் ஒன்றும் இல்லை என்பதையும், அச்செல்வம் சம்மந்தம் இல்லமால் வேறு யாருக்கோ போய்ச்சேர்ந்துவிடும் என்பதையும் நன்கு அறிந்த நிலையில்தான், “அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால், அதை அனுபவிப்பது யாரென அறியார்” என்கிறார் தாவீது.

வாழ்க்கை என்பது நிலையில்லாதது. அது பூவுக்கும் புல்லுக்கும் சமமானது. வாழ்க்கை என்பது ஒரு மாயச்சுடர். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் அந்த மாயச்சுடர் அணைந்து போய்விடும். இருந்தாலும் ஆசை என்னும் மாயவலையில் வீழ்ந்து வாழும் காலத்தைச் சிக்கலாக்கி விடுவதுதான் மனித மனங்களின் இயல்பாகிவிட்டது. மனித வாழ்வில் ஏன் இந்த பொருளற்ற ஆசைகள்!, ஆசைகள் ஆசைகளாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அதுவே!, பேராசை, வெறி, பொறாமை, துரோகம், ஏமாற்றுதல், கொலை செய்தல் என்ற பாவங்களால் நீண்டுகொண்டே போய் நம்மையும் அழித்து பிறரையும் அழித்து விடுகிறது…! பலரது இறப்புகளைக் கண்டபின்னும் கூட, இந்த வாழ்க்கை நிலையானது, நான் நீண்டு வாழ்வேன் என்று கூறிக்கொண்டு மனித மனங்கள் திருந்த மறுக்கின்றன. வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. அதனை ஊதி விட்டால் சட்டென உடைந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இந்த உண்மையைக் கூட உணர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு பலரது மனங்களில் கொழுந்துவிட்டெரியும் ஆசைகள் அவர்தம் அறிவுக்கண்களை மறைத்துவிடுகின்றன. ஓர் நாள் நாம் பெற்றுள்ள அனைத்தும் பொருளற்றுப் போகும்போது, வீடு வாசல் பணம் பதவி எதுவுமே உடன் வரப்போவதில்லை என்பதை உணரும் நாள் எந்நாளோ தெரியவில்லை. மனித வாழ்வில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான் எத்தனை எத்தனை கனவுகள், நனவுகள், ஆசைகள், நிராசைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கோபங்கள், தாபங்கள், சண்டைகள், சச்சரவுகள், சலசலப்புகள், சாபங்கள், சல்லாபங்கள்..இன்னும் எத்தனை..! எத்தனையோ...!! உடலை விட்டு உயிர் போன பின்தான் எல்லாமே மாயை என்பது புரிகிறது...! மாயம் என்று தெரிந்தும் மனம் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்று பொல்லாத் தனமாய் அலைகிறது. இந்தப் பொல்லாத்தனங்கள் எல்லாம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்தான். தண்ணீரில் போடும் கோலம் போல, வாழ்க்கையும் நிலைக்காதது. தரை மீது காணும் எதுவுமே நிலைக்காது. நாம் பிறக்கும் போது தன்னந் தனியாக வெற்றுடம்புடன் பிறக்கிறோம். பிறகு இங்கிருந்து செல்லும்போது வெறும் கையுடன்தான் செல்கின்றோம்.

இதனை மனதில் கொண்டுதான், "உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். (1 திமோ 6:7-10) என்கின்றார் புனித பவுலடியார். ஆகவே, பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று உறுதியாக இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைகிறோம். நாம் வாழும் காலங்களில்  நாம் எதற்கெல்லாம் ஆசைப்பட்டு சேர்த்து வைத்தோமோ அவையெதுவுமே நம்மோடு வருவது இல்லை. விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை, வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிடப் போவதும் இல்லை...! வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை பொருளுள்ளதாக வாழ்ந்து விட்டு போவதில் என்ன தயக்கம். இதனைத்தான் வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்கிறார்கள் பெரியவர்கள். ஆகவே, இறைவன் நமக்குக் கொடுத்துள்ள வாழ்க்கை என்னும் இக்கொடை நிலையில்லாதது. ஆனால், அவ்வாழ்வை நமக்குக் கொடையாக அளித்த இறைவன் மட்டுமே என்றும் நிலையானவர், நிரந்தமானவர் என்பதை உணர்வோம். நீர்க்குமிழிப் போன்ற நமது வாழ்வில், வாழும் காலம் வரை பாவத்தை விளைவிக்கும் ஆசைகளைத்  தவிர்த்து மற்றவர்களின் அன்பை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம். இதுவே இறைவனிடம் நம்மை நிரந்தரமாக வாழ்வதற்கு வழிகாட்டும். இத்தகைய அருள்வரங்களுக்காக இறைவனிடத்தில் இந்நாளில் மன்றாடுவோம்.

ஒரு சிறிய இறைவேண்டலுடன் இவ்வார விவிலியத் தேடல் சிந்தனைகளை நிறைவு செய்வோம். அன்பே உருவான எம் ஆண்டவரே, இந்த நாளிலே எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். இவ்வுலகில் நான் என்றும் நிரந்தமானவன் என்ற ஆணவத்தால் பகையையும் வெறுப்பையும் உண்டாகி சகோதரத்துவத்தை வீழ்த்தும் மதியீனத்தை அறிந்துணரச் செய்தருளும். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது, நீர்க்குமிழி போன்றது, பூவுக்கும் புல்லுக்கும் நிகரானது என்பதையும் உம்மோடு வாழும் பேரின்ப வாழ்வே என்றும் நிலையானது என்பதையும் எங்களுக்குக் கற்றுத் தந்தருளும், ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2023, 14:11