விவிலியத் தேடல்: திருப்பாடல் 38-3, செவிசாய்க்கும் இறைவன்!.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மனித வலிமையை அழிக்கும் பாவம்! என்ற தலைப்பில் 38-வது திருப்பாடலில் 06 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 11 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்தச் சிந்திப்போம். இப்போது அமைந்த மனநிலையில் அவ்வார்த்தைகளை வாசிப்போம்.
என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்; என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர். என் உயிரைப் பறிக்கத்தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர் என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர். நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன். உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர் போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்; ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்; என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும். (வசனம் 10-15)
ஒரு உண்மை நிகழ்வுடன் நமது சிந்தனைகளைத் தொடங்குவோம். ‘கைவிட்ட நெருங்கிய உறவுகள்... வறுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய், மகன்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி அண்மையில் வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியை படிக்கும்போதே, அது நம்மை நெஞ்சை நொறுக்கிப்போடுகின்றது. ஒரு மனிதன் தன் பெற்றோராலும், உற்றார் உறவுகளாலும், நண்பர்களாலும் கைவிடப்படும்போது எத்தகையதொரு மோசமான நிலை அவருக்கு ஏற்படும் என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள விஸ்மடை பகுதியைச் சேர்ந்தவர் இராதாகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தி. இந்தத் தம்பதிக்கு கார்த்திக், இராகுல் என இருமகன்கள். இராதாகிருஷ்ணன் சிறுதொழில் செய்து வருகிறார். ஆனால் அவரதுத் தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அன்றாட வாழ்வை நடத்துவதிலேயே இராதாகிருஷ்ணனின் குடும்பம் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டும் இராதாகிருஷ்ணனுக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள முடிவெடுத்தவர்கள் வீட்டில் சமையலறை பயன்பாட்டிற்காக வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து மேலே ஊற்றி தீவைத்துக் கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து அதிகளவில் புகை வந்ததால் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கே நான்குபேருமே தீயில் எரிந்து கொண்டிருந்தனர். அதில் சாந்தியும், அவரது மூத்த மகனும் உயிரிழந்தனர். மீதமுள்ள இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர் என்று இச்செய்தி முடிகின்றது.
01. உறவுகளாலும் நண்பர்களாலும் ஏற்படும் வலி
இதுபோன்று இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இம்மாதிரியான சம்பவங்கள் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, அதனைப் படிப்பவர்களுக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன. "உள்ளம் அள்ளி எறிந்த வார்த்தைகள் எல்லாம் கல்லாக என்னில்... கல்கொடுத்த வலிகளோ இங்கு வரிகளாக விரிகிறது... நல்ல வேளை, வலிகள் வரிகளாகிறது. இல்லையென்றால், அவை என் உயிரையே குடித்திருக்கும்...” என்று வலிகள் ஏற்படுத்தும் இரணம் குறித்துக் குறிப்பிடுகின்றான் ஒரு கவிஞன். வலிகளிலேயே மிகவும் கொடிய வலி எதுவென்றால், அது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் வலிதான். தாவீதின் வாழ்க்கையிலும் இக்கொடிய நிலை ஏற்படுவதைப் பார்க்கின்றோம். “என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்; என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்” என்று அவர் கூறுவது இதனை உறுதி செய்கிறது. இங்கே தாவீது இரண்டுவிதமான வலிகளை எடுத்துக்காட்டுகின்றார். முதலாவதாக, தான் நல்லவர் என்று நம்பியிருந்த சவுல் மன்னர் தனக்கு எதிராக இழைத்த கொடுந்துயரங்களால் ஏற்பட்ட வலிகளை அவர் நினைவுபடுத்தி இதனைக் கூறியிருக்கலாம். இரண்டாவதாக, உரியாவின் மனைவி பத்சேபாவுடன் புரிந்த பாவத்தின் விளைவாக ஏற்பட்ட வலிகளைக் குறித்தும் கூறியிருக்கலாம். இருப்பினும் இத்திருப்பாடலில் தாவீது அரசர், தான் செய்த பாவம் குறித்தும், அதனால் தனது உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட வலிகள் குறித்தும் அதிகம் பேசுவதால் இரண்டாவது கருத்தை மையப்படுத்தியே நமது சிந்தனைகளைத் தொடர்வோம்.
‘கைவிடப்படல்’ என்பது, நமக்குள் ஏற்படுத்துவது கொடிய மரணத்தின் வலி. இதனை அனுபவிப்பவர்களுத்தான் அது புரியும். 'எல்லாரும் இருந்தும் நம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்களே, யாராலும் நமக்குத் பலனில்லாமல் போய்விட்டதே, பெற்றவர்களும் உற்றார் உறவினர்களும் கூட நம்மைப் புரிந்துகொள்ளவில்லையே, ஆபத்து நேரங்களில் நமக்கு யாரும் உதவவில்லையே, எல்லாரும் இருந்தும் நான் இப்படி அனாதையாகிவிட்டேனே' என்று எண்ணி எண்ணி பலர் புலம்பி அழும் கோரக்காட்சி கண்ணால் காண்பவரையும் இரணப்படுத்தும். “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?” (திபா 22:1) என்று தாவீது அரசர் கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவதைப் பார்க்கின்றோம். ஏன், இதேவார்த்தையைச் சொல்லித்தானே நமதாண்டவரும் இறைத்தந்தையான கடவுளை நோக்கிக் கதறுகின்றார்? (காண்க மத் 27:46). தான் நம்பியிருந்த சீடர்களெல்லாம் ஓடிவிட்டனர். யூதாசு இஸ்காரியோத்து காட்டிக்கொடுத்தார். பேதுரு மறுதலித்தார், மற்றவர்கள் எல்லாம் மாயமாய் மறைந்தனர். ஓசன்னா பாடிய கூட்டம், ‘ஒழிக்க, அவனை சிலுவையில் அறையும்!’ என்று கத்தியது. ஆக, இயேசுவுக்கு ஏற்பட்ட மரண வலிகளைவிட, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட வலிகள்தான் மிகவும் கொடியது. இந்த வலிகளின் துயரத்தில்தான் “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் இறைத்தந்தையை நோக்கி கதறினார் இயேசு.
02. எதிரிகளால் ஏற்படும் வலி
‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று நம் முன்னோர்கள் பழமொழி ஒன்று கூறுவார்கள். அதாவது, எல்லா நிலைகளிலும் ஆதரவு பெற்றிருந்த ஒரு மனிதர், சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் கைவிடப்பட்ட நிலையில் அல்லது தனித்துவிடப்பட்ட நிலையில் அவருடைய எதிரிகளால் அவர் மிகவும் சுலபமாக பழிவாங்கப்பட முடியும். இது உலகியல் நியதிதான். தனது பாவச் சூழல்களால் நொறுக்குண்ட நிலையில், எதிரிகள் தன்னை எளிதில் வெற்றிகொள்ள பார்க்கிறார்கள் என்பதை அறிந்தவராக, “என் உயிரைப் பறிக்கத்தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர் என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்” என்று இறைவனிடத்தில் முறையிடுகின்றார் தாவீது அரசர். எப்படியொரு இக்கட்டான நிலை பாருங்கள் அவருக்கு! காட்டில் இருக்கும் மான் எப்போதும் சாதுவாகத்தான் இருக்கும். அது தன் எதிரிகளை திருப்பித் தாக்கும் அளவிற்கு அதற்கு வலிமை கிடையாது. தான் இரையாக்கப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் மாடு, குதிரை யானை போன்ற விலங்குகள் தன் எதிரிகளைத் திருப்பித் தாக்கும் வலிமை படைத்தவை. குறைந்தபட்சம் எதிர்க்கும் திறன் கொண்டவை. ஆனால், அந்த வலிமைகூட மான்களுக்குக் கிடையாது. சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய் போன்ற விலங்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு மானை துரத்திக்கொண்டு வரும்போது அந்த மானின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் தாவீது அரசருக்கும் இருந்தது என்பதை நாம் எண்ணிக்கொள்ளலாம். இதன் காரணமாகவே, காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரைதேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். என்றும், தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள் (திபா 22:12,13,16) என்ற தாவீதின் வார்த்தைகள் எதிரிகளின் கொடுஞ்செயல்களை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
03. ஆண்டவரிடத்தில் நம்பிக்கை
பொதுவாக, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையிலும், எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் வேளையிலும் பலர் தங்கள் உயிரை மாய்த்துகொள்ளத்தான் விரும்புவர். அதைத்தான் தொடக்கத்தில் வாசித்தோம். ஆனால், சிலர் மட்டுமே இம்மாதிரியான சூழல்களில் அவற்றை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து, அமைதி காப்பர். மேலும் ஆண்டவரிடத்திலே அவர்கள் கொண்டிருக்கின்ற இந்த ஆழமான நம்பிக்கைதான் அவர்களை மீட்கும். இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் தாவீதிடத்தில் காண்கின்றோம். “நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன். உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர் போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன் என்று தாவீது உரைத்தபோதிலும், “ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்; என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும்” என்று கூறி ஆண்டவரிடத்தில் சரணடைகின்றார் தாவீது அரசர்.
ஆகவே, நமது பாவங்களால் நாம் துன்புறும் வேளையிலும், நமது எதிரிகளால் துரத்தப்படும் வேளையிலும், மனம் சோர்ந்துபோகாமல் ஆண்டவரிடத்தில் சரணடைவோம். அவர் நம்மை காக்கும் கடவுள். அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை உணர்ந்திடுவோம். இவ்வருளுக்காக இறைவனிடத்தில் இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்