தடம் தந்த தகைமை – போவாசின் பணியாள்களுள் ஒருவரான ரூத்து
மெரினா ராஜ் – வத்திக்கான்
உணவுவேளையில் போவாசு ரூத்திடம், “இங்கே வந்து இந்த அப்பத்தை எடுத்துப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்துச் சாப்பிடு” என்றார். அவரும் அவ்வாறே போய் அறுவடையாள்களுடன் உட்கார்ந்து கொண்டார். போவாசு அவருக்கு வருத்த பயறும் கொடுத்தார். அவர் பசிதீர உண்டபின்னும் சிறிதளவு உணவு எஞ்சியது. பிறகு அவர் மீண்டும் கதிர் பொறுக்க எழுந்து சென்றார். போவாசு தம் அறுவடையாள்களிடம், “அரிகட்டுகள் கிடக்குமிடத்தில் அவள் கதிர் பொறுக்கட்டும். அவளை யாரும் அதட்ட வேண்டாம். மேலும் கட்டுக்களிலிருந்து சில கதிர்களை உருவிப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கிக்கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம்” என்று கட்டளையிட்டார். அவருடைய வயலில் ரூத்து மாலைவரை கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். அவற்றைத் தட்டிப் புடைத்து நிறுத்தபோது வாற்கோதுமை ஏறத்தாழ இருபதுபடி இருந்தது. அவர் அதை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று தம் மாமியாரிடம் காட்டினார்; அவர் உண்டபின் எடுத்து வைத்திருந்த உணவையும் அவரிடம் கொடுத்தார்.
அவர்தம் மாமியார் அவரிடம், “இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்?” என்று கேட்டுவிட்டு, “உனக்குப் பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக!” என்றார். ரூத்து தம் மாமியாரிடம் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடையது என்பதைத் தெரிவிப்பதற்காக, “நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு” என்றார். நகோமி அவரிடம், “அப்படியா? வாழ்வோருக்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக” என்றார். மேலும் அவர், “போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்; நம்மைக் காப்பாற்றும் கடமையுள்ள முறை உறவினருள் ஒருவர்” என்றார். மோவாபியரான ரூத்து மீண்டும், “அவர் அறுவடை முடியும்வரை தம்முடைய ஆள்களுடன் நான் கதிர் பொறுக்கிக் கொள்ளலாமென்று என்னிடம் சொன்னார்” என்றார். நகோமி தம் மருமகள் ரூத்திடம், “ஆம் மகளே, நீ அவருடைய பணிப்பெண்களோடு இருப்பதுதான் நல்லது. வேறொருவனது வயலுக்கு நீ போனால், அங்குள்ள ஆண்கள் உனக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும்” என்று சொன்னார். அவ்வாறே ரூத்து போவாசின் பணிப்பெண்களை விட்டுப் பிரியாதிருந்து, வாற்கோதுமையும் கோதுமையும் அறுவடையாகும் வரை கதிர் பொறுக்கி வந்தார்; தம் மாமியாருடனேயே தங்கியிருந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்