தேடுதல்

மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்   (AFP or licensors)

சூடான் மோதலில் 200 பேர் வரை இறந்துள்ளனர்

சூடான் பணியாளர்கள் பலர் வெளியே வந்து சேவையாற்ற முடியாத நிலையில் பள்ளிகளிலும், நலமையங்களிலும் கோவில்களிலும் அடைக்கலம் தேடியுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சூடான் நாட்டில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே திடீரென எழுந்த மோதல்களால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது WCC என்னும் உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.

சூடான் நாட்டில் இராணுவம், துணை இராணுவம் இடையே ஏப்ரல் 15 முதல் நடந்து வரும் மோதலில், இதுவரை 200 பேர் பலியாகியும், மேலும் 2000 பேர் காயமுற்றும் உள்ள நிலையில், இது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட WCCயின் பொதுச்செயலர் கிறிஸ்தவப் போதகர் Jerry Pillay அவர்கள், மூன்று ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, WFP என்னும் உலக உணவுத் திட்டம் உட்பட பல மனிதாபிமானப் பணிகள் மூடப்பட்டுள்ளதாகவும் வருத்தத்தைத் தெரிவித்தார்.

சூடான் நாட்டு கிறிஸ்தவ சபைகளின் பணியாளர்கள் உட்பட எண்ணற்றோர் வெளியே வந்து சேவையாற்ற முடியாத நிலையில் பள்ளிகளிலும், நலமையங்களிலும் கோவில்களிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும் தெரிவித்தார் Pillay.

மனிதாபிமான தேவைகள் நிறைவேற்றப்படாமலும், அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டும், பணவீக்கத்தின் விளைவுகளை அனுபவித்தும், ஏழ்மையில் வாடியும், காலநிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி குறைந்தும் காணப்படும் சூடான் நாட்டில் இந்த மோதல்கள் பெரும் அழிவுகளையேக் கொணரும் என்ற துயரையும் வெளியிட்டுள்ளார் WCCயின் Pillay. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2023, 14:32