தேடுதல்

பாடுகளின் குருத்து ஞாயிறு பாடுகளின் குருத்து ஞாயிறு  

பாடுகளின் குருத்து ஞாயிறு : இலட்சிய மரணம் ஏற்போம்!

அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயம் படைக்க விரும்பிய இயேசுவின் இலட்சிய வழியில் நாமும் இலட்சிய மரணமேற்போம்.
ஞாயிறு சிந்தனை 01042023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I. எசா 50: 4-7         II.  பிலி  2: 6-11       III.  மத் 26: 14 -27: 66)        

ஆண்டவரது பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடி இன்று நாம் புனித வாரத்திற்குள் நுழைகின்றோம். ஆகவே, இவ்வாரம் முழுவதும் நமது ஆண்டவரின் இலட்சியப் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பைக் கொண்டாட அன்னையாம் திருஅவை நம்மை அழைக்கின்றது. குருத்தோலை வெற்றியின் அடையாளமாக அமைகின்றது. இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார். “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி மக்கள் ஆர்பரிக்கும்போது, எருசலேம் நகர் முழுதும் பரபரப்படைகிறது. அங்கிருப்பவர்கள் இவர் யார் என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர். (காண்க மத் 21:9-11). இதுவரை இப்படியொரு நிகழ்வை எருசலேமில் யாருமே நிகழ்த்திக் காட்டியிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்நிகழ்வு அமைகிறது. கல்வாரியில் வீர மரணம் ஏற்கப்போகும் இயேசுவுக்கு இதுவொரு தொடக்கப் புள்ளியாகவும் அமைகிறது. இயேசுவின் இந்தக் கோவில் நுழைவு ஆட்சியில் இருப்போரையும், ஆதிக்க மனப்பான்மை கொண்ட யூதர்களையும், உரோமை ஆட்சியாளர்களின் அடிவருடிகளையும் ஆட்டம் காணச்செய்கிறது. ஆனால் அதேவேளையில், யூத சமுதாயத்தில் பிரிவினைவாதங்களால் கட்டுண்டு கிடந்த ஏழை எளியோருக்கு இந்நிகழ்வு விடுதலை தரும் நம்பிக்கையாக அமைகிறது. இதனைத்தான் சிமியோன் குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தியவாறு, இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் (காண்க லூக் 2:34) என்று கூறினார். இதே எருசலேம் ஆலயத்தில் அவர் அன்று கூறிய வார்த்தை, இன்று அதே இடத்தில் நிறைவேறுகிறது. ஆக, இன்றைய குருத்தோலை ஞாயிறு, வேறுபாடுகளற்ற சமத்துவ சமுதாயம் படைக்கவும் அதற்காக இலட்சிய மரணமேற்கவும் நம்மை அழைக்கிறது.   

1980-களில் எல்சால்வதோர் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளை நாம் அறிவோம். அமெரிக்காவின் துணையுடன் அட்டகாசங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தது அந்நாடு. கிறிஸ்தவர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் இராணுவ வீரர்களின் தங்குமிடங்களாகின. அங்குள்ள புனிதப் பொருள்கள் அவசங்கை படுத்தப்பட்டன. அப்போது அம்மக்களின் விடுதலைக்காக அவர்களுடன் இணைந்து போராடியதுடன் அவர்களுடன் இணைந்து துயருற்றார் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. 1980-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி தனது மரணத்திற்கு முதல்நாள் தான் வழங்கிய உரையில், “இராணுவத்தினரே, நீங்கள் ஒவ்வொருவரும் எங்களில் ஒருவர். நாம் அனைவரும் ஒரே மக்கள். நீங்கள் படுகொலை செய்யும் யாவரும் உங்கள் சகோதரர் சகோதரிகள். கொலை செய்யாதிருப்பாயாக! என்ற ஆண்டவரின் கட்டளையை மீற எந்த இராணுவ வீரருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. எனவே, கடவுளின் பெயராலும், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பெயராலும் உங்களை வேண்டுகிறேன். உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். அடக்குமுறையை நிறுத்துங்கள்" என்று கர்ஜித்தார்.  இந்த உரை நிகழ்த்திய மறுநாள் அதாவது, மார்ச் 24-ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார் பேராயர் ரொமேரோ. இவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு ருத்திலியோ கிராந்தே என்ற இயேசு சபை அருள்பணியாளர் அந்நாட்டு இராணுவத்தினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவரது மரணம்தான் பேராயரை மனமாற்றி இலட்சிய மரணமேற்க வைத்தது. இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் நினைவுகூர வேண்டும். பேராயர் ரொமேரோ படுகொலை செய்யப்பட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து அதாவது, 1989-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி இரவு, சான் சால்வதோரில் உள்ள இயேசு சபையினரின் மத்திய அமெரிக்க பல்கலைக் கழக (UCA) வளாகத்தில் சால்வதோர் ஆயுதப்படையின் தலைவர் மற்றும் வீரர்களால் ஆறு இயேசு சபை அருள்பணியாளர்கள் படுக்கையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அறுவரும் FMLN (Farabundo Martí National Liberation Front) என்ற புரட்சிக் குழுவை ஆதரித்ததாகப்  பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதில் இன்னொரு துயரம் என்னவென்றால், இவர்களின் உடன்பணியாளரான Elba Ramos என்ற பெண்ணையும் 16 வயது நிரம்பிய அவரது மகளையும் இச்சம்பவத்தின்போது சுட்டுக் கொன்றனர் என்பதுதான். இவர்கள் அனைவரும் இயேசுவின் வழியில் இயேசுவுக்காக இலட்சிய மரணம் ஏற்றவர்கள். இயேசு சபைக் குருக்களின் இந்த உயிர்த் தியாகம்தான் அந்நாட்டில் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார்
இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைகிறார்

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் இலட்சிய மரணத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. எப்போதும் உண்மையான அன்புதான் அனைத்துத் தியாகச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது. உண்மை அன்பிலிருந்துதான் தியாகம் ஊற்றெடுக்கின்றது. அந்தத் தியாகத்திலிருந்தான் இலட்சிய மரணம் பிறக்கிறது. ஆனால், இன்றைய உலகில் அன்பு என்பது வர்த்தகப் பொருளாகிவிட்டது. 'அன்பைக் குறிக்க, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் 'Love' என்ற சொல், வர்த்தக, விளம்பர உலகிற்கு மிகவும் பிடித்தமான ஒரு சொல்லாக மாறிவிட்டது. இச்சொல், மிக எளிதாக, மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், அதன் உண்மைப் பொருள் காணாமல் போய்விட்டது. I love ice cream, I love fruits, I love games, I love my dog, I love going for a long walk… என்று அனைத்தையும் 'Love' என்ற சொல்லால் குறிக்கும்போது, அவற்றில் கூடுதலான கலப்படங்களும், போலிகளும் உருவாகி விடுகின்றன. இதனால், நம் உலகின் ஆணிவேராக, அடித்தளமாக இருக்கவேண்டிய உண்மையான அன்பு என்ற உணர்வு, அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்ட, போலியான, கடை சரக்காக விற்கப்படுகிறது. 'I love you' என்பதெல்லாம் தற்போது வெறும் வார்த்தைகளின் சேர்மானமாகவே இருக்கின்றது. இன்றைய காலகட்டங்களில் நட்பாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், குடும்ப உறவுகளாக இருங்தாலும், அங்கே அன்பு என்பது தேவையைப் பூர்த்தி செய்யும் ஒன்றாக அமைந்துவிட்டது. அதற்கு காரணம், அன்பில் சுயநலம் இருப்பதுதான்.

“நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" என்று கூறும் இயேசு, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை"  என்ற வார்த்தைகள் வழியாக அதனை வாழ்ந்து காட்டுகின்றார் (காண்க யோவா 15:12-13). மேலும், இயேசு தனது சீடர்களின் பதங்களைக் கழுவி முடித்த பிறகு, "ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" (காண்க யோவா 13:14:15) என்று கூறுவதன் வழியாகப் பணிவையும், துணிவையும், தியாக அன்பையும் இலட்சிய வாழ்வின் ஆணிவேர்களாக எடுத்துக்காட்டி அதனையே வாழ்வாக்கவும் அழைப்புவிடுகின்றார் இயேசு.

மக்கள் ஓசன்னா முழங்க, எருசலேம் ஆலயத்திற்குள் நுழையும் இயேசு
மக்கள் ஓசன்னா முழங்க, எருசலேம் ஆலயத்திற்குள் நுழையும் இயேசு

இறைத்தந்தையின் தியாகமிக்க அன்பு

இயேசுவின் திருமுழுக்கின்போதும், உருமாற்றத்தின்போதும் இறைத்தந்தையின் குரலைக் கேட்கின்றோம். அதனைத் தொடர்ந்து இயேசுவின் பணிவாழ்வு முழுவதும் இறைத்தந்தையின் உடனிருப்பைக் பார்க்கின்றோம். யூதத் தலைவர்களில் ஒருவரான நிக்கதேம் தன்னை சந்திக்க வந்தபோது, தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் என்றும் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார் (காண்க யோவா 3:16) என்றும் கூறி இறைத்தந்தையின் தியாகமிக்க அன்பை வெளிப்படுத்துகிறார் இயேசு.

2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி தென் தமிழகத்தில் நெஞ்சை நொறுக்கும் ஓர் சம்பவம் நிகழ்ந்தது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நம்பியாற்றில் கடந்த பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடந்து வந்திருக்கின்றது. இங்குள்ள மணலைத் திருடி, கேரளாவிற்குக் கொண்டு சென்று கொள்ளை இலாபம் சம்பாதித்து வந்துள்ளது ஒரு கும்பல். இப்படி ஆற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வந்ததால், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குக் குடிநீர் ஆதாரமும் பெருத்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதன் காரணமாக, மிட்டாதார் கிராம மக்கள் இந்த அநியாயச் செயலைக் கண்டித்து வந்தனர். இந்நிலையில் 11.03.2012 அன்று, அதிகாலை 03.30 மணிக்கு நம்பியாற்று படுகையில் மணல் திருடப்படுவதை அறிந்து, அக்கிராம மக்களில் சிலர் மணல் ஏற்றிவந்த அந்த லாரியை மடக்க முயன்றனர். அப்போது சதீஷ்குமார் என்ற இளைஞர் டார்ச் லைட் அடித்துக் கொண்டு தனது இரண்டு கரங்களாலும் அந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர் இடித்து கீழே தள்ளப்பட்டு, அந்த லாரியின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார். இந்தக் கொடிய சம்பவம் அவரது தந்தை எஸ்தாக் வின்சென்ட் கண்முன்னே நடந்தது. இந்தக் கொடுந் துயரைக் கண்ணுற்ற அவரது தந்தை எத்தனை துயரங்களை அனுபவித்திருப்பார். ஆனாலும், ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக தனது மகன் இன்னுயிரைத் தியாகம் செய்ததைக் கண்டு அவரது தந்தை ஆறுதல் அடைந்திருக்கலாம்.

நமது இறைத்தந்தையும் இப்படிப்பட்ட மனநிலையில்தான் இருந்திருப்பார். கெத்சமனித் தோட்டத்தில் நமதாண்டவர் இயேசு கைது செய்யப்பட்டது முதல் கல்வாரியில் தனது இன்னுயிரை ஈந்தது வரை அவர் அனுபவித்த அத்தனை துயரங்களும் இறைத்தந்தையின் கண்முன்பாகத்தான் நிகழ்ந்தன. ஆனாலும், அவை எல்லாவற்றையும் மானிடரின் மீட்புக்காக அமைந்த மனதுடன் இறைத்தந்தை தாங்கிக்கொண்டார் என்பதை நாம் எண்ணிப் பார்ப்போம். ஆகவே, அநீதிகளை அழித்தொழித்து புதிய சமுதாயம் படைக்கத் துடிக்கும் தங்கள் மகன்களின் ஆசைகளுக்குத் தடைபோடும் தந்தையர்களாக இல்லாமல், அவர்களின் இலட்சிய வேட்கைகளுக்கு உரமிடும் உண்மைத் தந்தையர்ககளாக இருப்போம். வெறும் உணர்வால் மட்டுமல்ல, உண்மை அன்பால் மட்டுமே தியாக வாழ்வு ஊற்றெடுக்கும் என்பதையும் இத்தருணத்தில் உணர்ந்துகொள்வோம்.

‘எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்புக் கேட்கிறதோ, அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்’ என்றார் புரட்சியாளர் சே குவேரா. முப்பது வயதில் தொடங்கிய இயேசுவின் பயணம் வெறும் மூன்றே ஆண்டுகளில், அதாவது முப்பது மூன்று வயதில் முடிந்துபோனது. ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நிலைப்பாடு எடுத்ததும், அதை செயலாக்கம் செய்ததும்தான் இயேசுவின் மரணத்திற்கு முக்கிய காரணங்கள். வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன், வாழ்க்கையை முழுவதுமாக வாழ்வில்லை என்று பொருள் என்று சொல்லுவார்கள். இயேசு தனது பணிவாழ்வு முழுவதும் எதிர்ப்புகளைத்தான் அதிகம் சந்தித்தார். அதுவும் தனது சொந்த இனமான யூத இனத்தில் நிலவிய அத்தனை அநியாயங்களையும் அவர் துணிச்சலுடன் தட்டிக்கேட்டார். அவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தார். எதிரிகள் குறித்தோ அல்லது எதிர்ப்புகள் குறித்தோ அவர் ஒருபோதும் மனம் தளர்ந்ததே இல்லை. ‘மனதுக்கு மட்டும் பயந்துவிடு, மானத்தை உடலில் கலந்துவிடு, இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு’ என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகளுக்கேற்ப வாழ்பவர்கள் அனைவருமே இலட்சியத் தெளிவு உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள்தாம் இலட்சிய மரணமேற்கவும் தயாராக இருப்பார்கள். ஆகவே, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ சமுதாயம் படைக்க விரும்பிய இயேசுவின் இலட்சிய வழியில் நாமும் இலட்சிய மரணமேற்போம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2023, 12:59