தேடுதல்

நிகழ்வில் இலங்கை பேராயர் மால்கம் இரஞ்சித் நிகழ்வில் இலங்கை பேராயர் மால்கம் இரஞ்சித்  (ANSA)

இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்பு நான்காம் ஆண்டு நினைவு

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு, தாக்குதல்களில் உண்மை மற்றும் நீதிக்கான கத்தோலிக்கத் திருஅவையின் வேண்டுகோள்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமை, அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கைகோர்த்து இரண்டு நிமிட மௌனத்தை அனுசரித்தனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

2019 ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் நான்காம் ஆண்டு நிறைவு மனித சங்கிலியானது, "நீதி கிடைக்கும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்ற கருப்பொருளில் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களால் வழிநடத்தப்பட்டது.

அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் இணைந்து  இலங்கையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் முதல் நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் வரை 30 கிலோமீட்டர் ஒன்றிணைக்கும் அடையாளமாக மனிதச் சங்கிலியை உருவாக்கினர்.

இது குறித்து வத்திக்கான் வானொலிக்கு செய்தி அளித்த கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள்,  இலங்கை அரசு, பாதுகாப்பு அதிகாரிகள், உளவுத்துறையினர் ஆகிய அனைவரும், இந்த விடயத்தில் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றும், மாறாக, முதலில் இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்தி அவர்களே அதற்குக் காரணம் என்று கூற முயற்சித்தனர் என்றும் எடுத்துரைத்தார்.

நிகழ்வில் இலங்கை மக்கள்
நிகழ்வில் இலங்கை மக்கள்

நாட்டில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை மக்களிடத்தில் உருவாக்குவதற்காக தீவிரவாதிகளால் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான சான்றுகள் தங்களிடம் உள்ளன என்றும், இதற்காகவே, குண்டுவெடிப்பிற்கான புதிய விசாரணை, மற்றும் வெளிப்படையான விசாரணையை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் கர்தினால் இரஞ்சித் கூறினார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கோபத்தைத் தூண்டுவதன் வழியாக சிங்கள சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதே இதற்குக் காரணம் என்று கூறிய கர்தினால் இரஞ்சித், மனித சங்கிலி குறித்து அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், சில இஸ்லாமிய மசூதிகள் தாக்குதல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்ற திசைதிருப்பல்களை உருவாக்குவதன் வழியாக இதை நிறுத்த முயற்சித்ததாகவும் எடுத்துரைத்தார்.

இவைகள் வழக்கமாகப் பயன்படுத்தும் தந்திரங்கள் மற்றும், தவறான உத்திகள் என்பதை இலங்கையில் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத இதுபோன்ற செயல்களை ஒருபோதும் செய்ய முடியாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் கர்தினால் ரஞ்சித் கூறினார்.

மனித சங்கிலி
மனித சங்கிலி

கிறிஸ்தவர்களுடன் இஸ்லாமியர்கள் உடன்இருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்கள், அதற்கான உறுதியை உயர்த்திக் காட்டுவதே இந்த மனிதச் சங்கிலியின் நோக்கம் என்றும், இந்தத் தாக்குதல்கள் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டவை அவர்களுக்குப் பின்னால் "நாம் அடையாளம் காண விரும்பும் ஒரு அரசியல் சக்தி உள்ளது" என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் இரஞ்சித்.

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறன்று, 370 பேர் இறப்பு மற்றும் 500 பேர் படுகாயம் அடைந்த தாக்குதல்களில் உண்மை மற்றும் நீதிக்கான கத்தோலிக்கத் திருஅவையின் வேண்டுகோள்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமை, அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கைகோர்த்து இரண்டு நிமிட மௌனத்தை அனுசரித்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2023, 13:31