தேடுதல்

பேராயர் ஆல்வாரெஸ் விடுதலைக்காக போராடும் மக்கள். பேராயர் ஆல்வாரெஸ் விடுதலைக்காக போராடும் மக்கள்.   (ANSA)

தொடரும் கத்தோலிக்க திருஅவை மீதான அடக்குமுறைகள்

நிக்கராகுவா அரசிற்கும் தலத்திரு அவைக்கும் இடையிலான உறவுகள் 2018 ஏப்ரல் முதல், அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டு சீர்குலைந்த நிலையில் சர்ச்சைக்குரிய 2021ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மேலும் மோசமடைந்துள்ளது,

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஐ.நா., திருஅவை மற்றும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகள் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, நிக்கராகுவா அரசுத் தலைவர் டேனியல் ஒர்தேகாவின் சர்வாதிகார ஆட்சியானது அந்நாட்டில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவைக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் தாக்குதல்களைத் தொடர்கின்றது என்று அமெரிக்க ஆயர் பேரவையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மனாகுவாவில் உள்ள வத்திக்கான் தூதரகத்தையும், நிக்கராகுவா தூதரகத்தையும் மூடிய  நிலையில், சமீபத்தில் இரண்டு அருள்சகோதரிகள் மற்றும் பனாமாவின் கிளரீஷியன் மறைப்பணியாளரையும் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது அமெரிக்க ஆயர் பேரவை.

நிக்கராகுவாவில் நடந்து வரும் கத்தோலிக்க எதிர்ப்பு அடக்குமுறை, அமெரிக்காவின் ஆயர்களுக்குப் பெரும் கவலையைத் தருவதாகவும், அதிகமான துன்பங்கள் இருந்தபோதிலும், நிக்கராகுவா மக்கள் தங்கள் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன் இணைந்து, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமைக்கு உறுதியுடன் சாட்சியம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார் அமெரிக்கக் கத்தோலிக்க ஆயர்பேரவையின் தலைவரான ஆயர் டேவிட் ஜே. மல்லாய்.

போராட்டத்தில் மக்கள்
போராட்டத்தில் மக்கள்

நிக்கராகுவாவில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் எதிர்ப்புகள் நடந்து வரும் நிலையில், அமெரிக்க ஆயர்கள் அத்தலத்திருஅவையுடன் தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலத்தீன் அமெரிக்க நாட்டில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து பணியாற்றுமாறு பன்னாட்டு சமூகத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிக்கராகுவா அரசிற்கும் தலத்திருஅவைக்கும் இடையிலான உறவுகள் 2018 ஏப்ரல் முதல், அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டு சீர்குலைந்த நிலையில் சர்ச்சைக்குரிய 2021ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மேலும் மோசமடைந்துள்ளது. அரசுத்தலைவர் ஒர்தேகாவிற்கு எதிராகக் கத்தோலிக்க ஆயர்கள் பணியாற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டும், நாடுகடத்தப்பட்டும் தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டில், மனகுவாவின் துணை ஆயர் சில்வியோ ஜோஸ் பேஸ், 2022, மார்ச் இல், நிக்கராகுவாவிற்கான திருப்பீடத்தூதர் பேராயர் வால்டெமர் ஸ்டானிஸ்லா, ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டது, பிப்ரவரி மாதம், மதகல்பாவின் ஆயர் ரோலண்டோ அல்வாரெஸ் தேசத்துரோகம், தேசிய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல், தவறான செய்திகளைப் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அனைத்துலக  நீதி மற்றும் அமைதிக்கான, நிக்கராகுவா தலத்திருஅவையுடன் உறுதியான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தி, ஆயர் அல்வாரெஸின் விடுதலைக்காகவும், நாட்டில் அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதற்காகவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் அமெரிக்க ஆயர் பேரவையின் அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.  

Monitoreo Azul y Blanco என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் ஏப்ரல் 21 வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் நிக்கராகுவா காவல்துறையினரால் 39 பேர் கைது செய்யப்பட்டு தனிக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2023, 12:58