அன்னை மரியா அன்னை மரியா 

வாரம் ஓர் அலசல் - உயிர்ப்பை அறிவித்த பெண் சீடர்கள்

தொடக்க கால கிறிஸ்தவத்தை கட்டி எழுப்பிய பெண் அன்னை மரியா. கிறிஸ்துவினுடைய பாடுகள் மற்றும் மரணத்தைக் கண்டு பயந்து மறைந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர் இயேசுவின் சீடர்கள். இந்த நிலையில் கிறிஸ்துவைப் பின்பற்றிய அத்தனை பேருக்கும் துணிவு அளிக்கும் ஒரு புரட்சிப் பெண்ணாக அன்னை மரியா அனைவரையும் ஒன்றிணைத்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருஅவையும் இல்லை, கிறிஸ்தவமும் இல்லை. அவருடைய உயிர்ப்பில்தான் நம் நம்பிக்கை நங்கூரமிடப்பட்டிருக்கிறது: திருஅவைப் பிறந்திருக்கிறது: கிறிஸ்தவம் தழைத்திருக்கின்றது. இதுவரை வரலாற்றில் நாசரேத்தூர் இயேசுவாக அறியப்பட்டவர், இன்று கிறிஸ்துவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். கல்லறை கருவறையாகியது. அவருடைய உயிர்ப்பிலே தான் உயிருக்கு பயந்து மூடப்பட்ட திருத்தூதர்களின் அறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன. எதிரிகள் வீழ்த்தப்படுகின்றனர். அவரது உயிர்ப்பு, உயிர்ப்பின் மகிழ்வு இன்று நமது இதயக்கதவுகளைத் திறந்து நமது பலவீனம் என்கின்ற எதிரிகளை வீழ்த்தட்டும். இயேசுவின் இத்தகைய உயிர்ப்பின் மக்ழ்வை முதன் முதலில் உலகிற்கு அறிவித்தவர்கள் மகதலா மரியா உள்ளடக்கிய பெண்கள் குழு. இன்றைய நாளில் உயிர்ப்பை அறிவித்த பெண்சீடர்கள் என்ற தலைப்பில் இன்று நம்முடன் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்பவர் மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர் ஆ. அமல்ராஜ். சிவகங்கை மறைமாவட்டம், சூரியன்குடியில் பிறந்த அருள்தந்தை அவர்கள், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைபட்டம், இளங்கலை கல்வியியல் பட்டம் மற்றும் ஆவண காப்பக அறிவியலில் பட்டயப் படிப்பையும் பெற்றவர், தற்போது உரோமையில் உள்ள மரியின் ஊழியர் சபையின் பொது ஆவண காப்பக பொறுப்பாளராகவும், மரியின் ஊழியர் சபை தொடர்பான வரலாற்று ஆய்வாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். 

வாரம் ஓர் அலசல் 100423 - உயிர்ப்பை அறிவித்த பெண் சீடர்கள்

அருள்பணி அமல்ராஜ் ம. ஊ. ச. - உரோம்

“உயிர்ப்பை அறிவித்த பெண் சீடர்கள்” என்ற சிந்தனைக்கு மூலமாக இருப்பது மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா  உயிர்த்த இயேசுவைக் கண்டதும், உயிர்ப்பின் செய்தியை அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க இயேசுவால் நேரடியாக அனுப்பப்பட்டதும் தான் (லூக்கா 24:10). இந்த உயிர்ப்பின் செய்தி என்பது உலக மீட்பிற்கான செய்தி மட்டுமல்ல பெண்களின் விடுதலைக்கான செய்தியும் ஆகும். அதாவது, பெண்களுடனான இயேசுவின் சந்திப்பானது அவர் ஏற்கனவே போதித்த நற்செய்திப் புதுவாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது என்று Mulieris Dignitatem அதாவது பெண்களின் மாண்பு என்கின்ற தனது திருமடலில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கூறுகின்றார்.

இயேசுவின் உயிர்ப்பை விவரிக்கும் நற்செய்தியாளர் புனித மத்தேயு, ஓய்வுநாளுக்குப் பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, “நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, ‘இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ எனச் சீடருக்குக் கூறுங்கள்” (மத்தேயு 28: 1, 5-7) என்று பதிவு செய்துள்ளார். இது இயேசு கிறிஸ்துவினுடைய பூவுலக வாழ்வில் மட்டுமல்ல அவருடைய உயிர்ப்புக்குப் பிறகும் கூட அவர் எந்த அளவுக்குத் தன்னுடைய நற்செய்தி அறிவிப்புப் பணியிலும், அப்பணியைச் செய்வதற்காக அவரால் ஏற்படுத்தப்பட்ட திருஅவையிலும் பெண்களுடைய பங்களிப்பை அவர் ஊக்குவித்தார் என்பதை நாம் அறியலாம். 

பெண் விடுதலை மற்றும் பெண்ணியச் சிந்தனைகளும் விவாதங்களும் மேலோங்கியிருக்கும் நவீன காலத்தில் கூட (Modern age) மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற பெயரில் பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுவதை மற்றும் பாலின சமத்துவமின்மையை நம்மால் அன்றாடம் காண முடிகிறது என்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யூத பெண்களின் நிலை எத்தகைய இழிநிலையில் இருந்திருக்க கூடும் என்று சற்று சிந்தித்தால் நமக்கு புலனாகும். ஆம், யூத இனம், பெண்ணாக பிறப்பதை பாவம் என்று கருதியது. அந்த இனத்தின் ஆண்கள் தினந்தோறும் தங்களின் ஜெபத்தில் பெண்களாய் பிறவாமைக்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்கு பிற்போக்குச் சமூகமாக இருந்தது (cfr. S. Singer, tr., The Authorized Daily Prayer Book, pp. 5-6). இயேசு தனது பிறப்பு, பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு வழியாக அவர் வாழ்ந்த கால கட்டத்தில் தன்னுடைய சமுதாயத்தில் ஏற்படுத்திய அமைதிப் புரட்சியை நாம் காணலாம். இயேசுவின் சொல்லும் செயலும் பெண்களின் மீதான உலகினரின் மதிப்பற்ற பார்வையை மாற்றியமைக்கும் விதமாக இருந்துள்ளதை அவருடைய வாழ்வை விவரிக்கும் திருவிவிலியத்திலிருந்து நாம் அறியலாம். எடுத்துக்காட்டாக, இயேசு தனது பூவுலக வாழ்விலும், தன்னுடைய சீடர்கள் குழுவிலும் மற்றும் பணி வாழ்விலும் அனைவரையும் இணைத்தே பயணித்தார் என்பதற்கு விவிலியத்தில் பல உதாரணங்கள் உள்ளன.

யூத மத குருக்களான ரபீக்கள் பெண்களுடன் பொது வெளியில் பேசக் கூடாது மற்றும் அவர்களைச் சீடர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பது யூத சமயச் சட்டம். எனவேதான், சமாரியப் பெண்ணும் இயேசுவும் கிணற்றருகில் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட சீடர்கள் வியப்புற்றனர் என்று நற்செய்தியாளர் யோவான் தனது நற்செய்தியில் பதிவு செய்துள்ளார் (யோவான் 4, 27). ஆனால் இயேசு இந்த சமூகக் கட்டமைப்பையும் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிகின்றார். அவர் தன்னுடைய சீடர்களாகப் பல பெண்களை அழைத்து அவர்களை சமய மற்றும் சமூகப் பணிக்காகத் தயாரித்தார் (லூக்கா 8:1-3). சில பெண்களைத் தன் மீதான விசுவாசத்தில், நம்பிக்கையில் மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்களாக சுட்டிக்காட்டுகின்றார் (லூக்கா 7:11-7, லூக்கா 21:1-4, லூக்கா 18:1-7, மத்தேயு 26: 6-13). இயேசு தன்னுடைய சொல்லிலும் செயலிலும் எந்தவொரு தருணத்திலும் பெண்களை மரியாதை குறைவாகப் பேசியதோ அல்லது நடத்தியதோ இல்லை. அவர்களை உயர்த்திப் பேசியிருக்கின்றார் மற்றும் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தன்னுடைய பூவுலக வாழ்வின் இறுதியில் அவருடைய பணியைத் தொடர்வதற்காகப் பெண்களையும் தனது உயிர்ப்பின் சாட்சிகளாய் மற்றும் இறையரசின் பணியாளர்களாய் அனுப்புகின்றார். சில பெண்கள் இயேசுவின் பணித்தளங்களில் நேரடியாக பங்கு பெறவில்லை எனினும் மறைமுகமாக எல்லா சூழலிலும் இயேசுவிற்கு பக்க பலமாக இருந்து உதவினார்கள். இன்னும் சில பெண்கள் இயேசுவின் வாழ்க்கை பயணத்தில் கல்வாரி பாதை வரை உடன் பயணித்து, அவருக்கு நம்பிக்கையளித்து, தந்தையின் திருவுளம் நிறைவேற்ற உடன் நின்று உறுதி தந்தார்கள் (யோவான் 19: 25).

இங்கு குறிப்பாக இயேசு கிறிஸ்து எவ்வாறு சில பெண்களைத் தனது உயிர்ப்பின் சாட்சியாகவும் அவருடைய உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும் அவர் அனுப்புகின்றார் என்பதை சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதாவது, எந்தப் பெண்களை சமயச் சடங்குகளிலிருந்தும் முடிவெடுக்கும் அதிகார மையத்திலிருந்தும் விலக்கி வைத்ததோ, அதே பெண்களை தனது உயிர்ப்பில் உதயமாகவிருக்கும் திருஅவையின் மிக முக்கியமான உறுப்பினர்களாக ஆக்குகின்றார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர் இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்பதேயாகும். இக்கருத்தை புனித சின்னப்பர் அவர்கள் மிக அழகாக, “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” (1 கொரிந்தியர் 15:14) என்று கூறுகின்றார். எந்தச் சமூகம் பெண்களைப் புறக்கணித்ததோ அந்தப் பெண்களில் ஒருவரைத் தனது உயிர்ப்பின் முக்கியமானதொரு சாட்சியாக அவர் ஏற்படுத்துகின்றார். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய வரலாற்றுச் செய்தி என்னவென்றால், யூத சமுதாயத்தில் பெண்களுடைய சாட்சியமானது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அப்படிப்பட்ட சமூகச் சூழலில் புறக்கணிக்கப்பட்ட அதே பெண்களை தனது உயிர்ப்பின் சாட்சியாக அனுப்பி, தன்னுடைய சீடர்கள் குழுவில் முதன்மைப்படுத்துகின்றார். அதாவது “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்திற்கு மூலைக்கல்லாயிற்று” (திருப்பாடல் 118:22) என்பதற்கிணங்க, சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்டு, ஒதுக்கப்பட்டு, ஒரு இழிவான பிறவியாக கருதப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட இனமாகிய பெண்ணினமே (ஒரு பெண்ணினுடைய சாட்சி) கிறிஸ்தவ விசுவாசத்தின், கிறிஸ்தவ சமுதாயத்தின் ஆணிவேராய், அஸ்திவாரமாய், அச்சாணியாய், முதுகெலும்பாய் இருக்கிறது என்பது இயேசு அன்றே யூதர்களிடையே ஏற்படுத்திய ஒரு சமூகப் புரட்சியாகும். இதன் காரணமாகவே, கிழக்கத்தியத் திருஅவையானது மதலேன் மரியாவை Apostola Apostolorum அதாவது திருத்தூதர்களின் திருத்தூதர் என்ற பெருமைக்குரிய பட்டத்தோடு கொண்டாடுகின்றது (Cfr. Rabanus Maurus, De vita beatae Mariae Magdalenae, XXVII; St. Thomas Aquinas, In Ioannem Evangelistam Expositio, c. XX, L. III 6 [“Sancti Thomae Aquinatis Comment. In Matthaeum et Ioannem Evangelistas”], Ed. Parmen. X, 629). இயேசுவினுடைய உயிர்ப்பின் நிகழ்வு அனைத்திலும் பெண்களுக்கே முதலிடம். ஆம், விடியற்காலையில் பெண்களே முதலில் கல்லறைக்குச் சென்றார்கள், வெறுமையான கல்லறையை பெண்களே முதலில் கண்டார்கள், இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை வானதூதர்கள் சொல்ல முதலில் கேட்டவர்கள் பெண்களே (மத்தேயு 28:6), உயிர்த்த இயேசுவின் பாதத்தை முதலில் பற்றிக்கொண்டவர்கள் பெண்களே (மத்தேயு 28:9), மற்றும் அவருடைய உயிர்ப்பின் செய்தியை அப்போஸ்தலர்களுக்கு அறிவிக்க அவரால் முதலில் அனுப்பப்பட்டவர்களும் பெண்களே (மத்தேயு 28:1-10 லூக்கா 24: 8-11).

ஆம், ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ஒரு பெண்ணால் முதன் முதலாக இந்த உலகிற்கு  அறிவிக்கப்படுகிறது. எப்படியென்றால் அதுவரை முடக்கப்பட்டு, மூலையில் இருந்த பெண் ,வீதிக்கு வருகிறாள். வீதிக்கு வந்ததோடு நில்லாமல் வீர நெஞ்சத்தோடு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை முரசறிவித்து  முழக்கமிட  விரைகிறாள். விரைந்தது அவள் பாதங்கள் மட்டுமல்ல அவளோடு சேர்ந்து ஒட்டு மொத்த பெண் சமுதாயமே வீறு நடை போட உத்வேகம் கொண்டது. அன்று இயேசுவின் உயிர்ப்பு அவரின் கல்லறையை அடைத்து இருந்த கல்லை மட்டும் புரட்டிப் போடவில்லை மாறாக பெண்கள் மீதான உலகினரின் பார்வையையும் புரட்டிப் போட்டது.

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக இருப்பவர் பெண்களுள் பேறுபெற்றவரான இயேசுவின் தாய் மரியா. ஆம், தொடக்க கால  கிறிஸ்தவத்தை கட்டி எழுப்பிய பெண் அன்னை மரியா. கிறிஸ்துவினுடைய பாடுகள் மற்றும் மரணத்தைக் கண்டு பயந்து மறைந்த வாழ்வு வாழ்ந்து வந்தனர் இயேசுவின் சீடர்கள். இந்த நிலையில் கிறிஸ்துவைப் பின்பற்றிய அத்தனை பேருக்கும் துணிவு அளிக்கும் ஒரு புரட்சிப் பெண்ணாக அன்னை மரியா அனைவரையும் ஒன்றிணைத்தார். இவ்வகையில், கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பிறகு சிதறிப்போன சீடர்களை ஒன்றிணைத்து அதை ஒரு நம்பிக்கையாளர்களுடைய குழுமமாகக் கட்டியெழுப்பி, இன்று நாம் காணும்  திருஅவைக்கு அடித்தளம் இட்ட பெண் போராளி அன்னை மரியா.

இவ்வாறாக கிறிஸ்துவை பின்பற்றிய பெண் சீடர்கள், விவிலிய பெண் மாந்தர்கள் மற்றும் அன்னை மரியா மட்டுமல்லாது அவரது வழியில் ஏராளமான புனிதைகளும், இன்னும் பல அருள்சகோதரிகளும், கிறிஸ்தவ பெண்களும் இன்றும் இயேசுவின் உயிர்ப்பை அறிவித்து கிறிஸ்தவத்தை வளர்த்து வருகின்றார்கள் என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு, இயேசு கிறிஸ்துவினுடைய பணியின் தொடக்கம் முதல் இன்றுவரை அவருக்கும் அவருடைய மறையுண்மைக்கும் பெண்மைக்கே உரித்தான வகையில் பெண்கள் தங்களது சிறப்பானதொரு பங்களிப்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள் (Cfr. John Paul II, Mulieris Dignitatem, n. 16) என்பதை உணர்ந்தால் கிறிஸ்துவின் உயிர்ப்பில் தொடங்கப்பட்ட புது வாழ்வும், சமத்துவ சமுதாயமும் அமைவது உறுதி. இதுவே இயேசுவின் கனவு. இதுவே திருஅவையின் இலக்கு. அதை நோக்கி உயிர்ப்பின் ஒளியில் நம் பயணத்தைத் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2023, 15:11