திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தையர் 9ஆம் பயஸ், 13ஆம் லியோ.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தையின் படையில் இணைய விரும்பி, அதற்கு தகுதியில்லாதவராக நிராகரிக்கப்பட்டு, காக்கா வலிப்பு நோயின் காரணமாக குருவாகவும் முடியாமல், பின்னர் அந்நோய் குணம் பெற்றபின் குருவாகி, திருப்பீடப்பிரதிநிதியாகி, கர்தினாலாக உயர்ந்து, திருத்தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பிறை 9ஆம் பயஸின் துவக்ககாலத்தை கடந்த வாரத்தில் கண்டோம். உரோம் நகரில் திருப்பீடத்திற்கு எதிராக எழுந்த கிளர்ச்சிகள் பிரெஞ்ச் படையால் அடக்கப்பட்டபின் 1850ஆம் ஆண்டு வத்திக்கானுக்குத் திரும்பிய திருத்தந்தை 9ஆம் பயஸின் காலத்தில்தான் இத்தாலிய அரசியலிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இடம் பெறத் துவங்கியது. மன்னர் விக்டர் எம்மானுவேலின் பிரதமராக இருந்த கவூரின் ஆலொசனையின் பேரில் உரோம் நகரை தலைமையிடமாகக் கொண்டு இத்தாலியை ஒரே நாடாக ஒன்றிணைக்கும் திட்டம் முளைவிடத் தொடங்கியது. முதலில் மன்னர் விக்டர் இம்மானுவேலின் படைகளும் பிரெஞ்ச் துருப்புகளும் ஒன்றிணைந்து ஆஸ்திரியாவை தோற்கடித்தன. தனக்கு ஆதரவளித்த ஆஸ்திரியா தோற்றதால்(Magentaவில் 1859 ஜூலை 4) திருத்தந்தை, விக்டர் எம்மானுவேலின் அரசை சார்ந்து நிற்கவேண்டியதாகியது. 1860ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி உரோம் நகரை கைப்பற்றிய மன்னர் எம்மானுவேலின் இராணுவம், அந்நகரை இத்தாலிய தலைநகராக அறிவித்தது. தலைநகரை விட்டுத்தரவும் அங்கீகரிக்கவும் சொல்லி, திருத்தந்தைக்கு பல சலுகைகளை அளிக்க முன்வந்தார் மன்னர். ஆனால் திருத்தந்தை 9ஆம் பயஸ் அச்சலுகைகளை ஏற்க மறுத்துவிட்டார். பல்வேறு துன்பங்களை திருஅவை இதனால் அனுபவிக்க வேண்டியிருந்தது.
இத்திருத்தந்தையின் ஆன்மீக நடவடிக்கைகளைப் பார்த்தோமானால், இவர்தான் 1854ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, 200க்கும் மேற்பட்ட ஆயர்களின் முன்னிலையில், அன்னைமரியின் அமல உற்பவத்தை திருஅவையின் விசுவாச கோட்பாடாக அறிவித்தார். 1856ல் இயேசுவின் திரு இருதய விழாவை அகில உலக விழாவாக அறிவித்தார். 1869 டிசம்பர் 8ஆம் தேதி, முதல் வத்திக்கான் பொது அவையை 700 ஆயர்களுடன் கூட்டினார் திருத்தந்தை 9ம் பயஸ். இந்த பொது அவை 1870 ஜூலை 18ஆம் தேதி “திருத்தந்தையின் தவறாவரத்தை” திருஅவைக் கோட்பாடாக அறிவித்தது. இத்திருத்தந்தையே இங்கிலாந்திலும் ஹாலந்திலும் தலத் திருஅவைகளின் தலைமைப்பீடங்களை உருவாக்கினார். வடஅமெரிக்காவில் 46 புதிய மறைமாவட்டங்களை ஏற்படுத்தினார். உரோமை நகரில் இலத்தீன் அமெரிக்க கல்லூரியையும், அமெரிக்க கல்லூரியையும் நிறவியவர் இவரே. இத்திருத்தந்தை 9ஆம் பயஸ் 1878ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி காலமானார். எந்த திருத்தந்தைக்கும் இல்லாத ஒரு புகழ் இவருக்கு உண்டு. ஆம். திருஅவையை, புனித பேதுருவுக்குப்பின் அதிக காலம் வழிநடத்திச் சென்றவர் இத்திருத்தந்தையே. இவரின் ஆட்சி காலம் 32 அண்டுகள்.
இப்போது நாம் காணவிருப்பது 19ஆம் நூற்றாண்டின் கடைசி திருத்தந்தையை. 9ஆம் பயஸ்க்குப்பின் வந்த திருத்தந்தை 13ஆம் லியோ (சிங்கராயர்) திருஅவையை 25 ஆண்டுகள் வழிநடத்திச் சென்றார். Gioacchino Vincenzo Raffaele Luigi என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை, 1810ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி இத்தாலியின் Carpinetoவில் பிறந்து, Viterbo இயேசுசபை பள்ளியில் கல்வி பயின்றார். பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், உரோம் நகரின் sapienza கல்லூரியில் சட்டமும் இறையியலும் பயின்றார். 1832ஆம் ஆண்டு இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார். கர்தினால் Salaவின் அலுவலகத்தில் பணியில் அமர்ந்த இவர், குருவாக திருநிலைப்படுத்துவதற்கான தன் விருப்பத்தை வெளியிட்டு குருவானார் (31 டிச. 1837). இத்தாலியின் பெனெவெந்தொ நகரில் அமைதியைக் கொணர திருப்பீடப் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட இவர், நேப்பிள்ஸ் படைகளின் உதவியுடன், திருட்டுக் கும்பல்களை ஒழித்துக்கட்டி பிரபலமானார். அங்கு சிறப்புப் பணியாற்றி உரோம் நகர் திரும்பிய அருள்பணி Gioacchino பெரூஜியா விலும் சிறிது காலம் சேவையாற்றினார். 1843ல் Brusselsக்கான திருப்பீடத்தூதராகவும், பின்னர் பாரீஸ்க்கு திருப்பீடத் தூதராகவும் அனுப்பப்பட்டார். இவ்வேளையில் பேராயராகவும் திருப்பொழிவுச் செய்யப்பட்டார். பேராயராக இருந்தபோதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இத்தாலியின் பெரூஜியா மக்கள் விரும்பிக்கேட்டுக் கொண்டதன்பேரில் பெரூஜியாவின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அங்கேயே 32ஆண்டுகள் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
பெரூஜியாவின் தந்தை என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், தன் ஆயர் பணிக்காலத்தில் 36 புதிய கோவில்களைக் கட்டியெழுப்பினார். 1853ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 1877ல் திருத்தந்தை 9ஆம் பயஸ், கர்தினால் Gioacchinoவை வத்திக்கானுக்கு அழைத்து அங்கு உயர்பதவியை வழங்கினார். ஓராண்டிற்குப்பின் திருத்தந்தை 9ஆம் பயஸ் உயிரிழந்தபோது, அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுக்க கூடிய 61 ஆயர்களுள் 44பேரின் ஆதரவைப் பெற்று திருத்தந்தையான கர்தினால் Gioacchino, 13ஆம் லியோ என்ற பெயரை எடுத்துக் கொண்டார். இவர் பிரான்ஸ் நாட்டோடு எப்போதும் நட்புணர்வை பேணிக் காத்தார். ஜெர்மனியில் Bismarckடன் பேசி, கத்தோலிக்க விரோத சட்டங்களை நீக்க வைத்தார். இரஸ்யாவிலும், சுவிட்சர்லாந்திலும் அமைதி நிலவ உதவினார். ஆங்கிலிக்கன் சபையிலிருந்து விலகி கத்தோலிக்கத்தை தழுவிய இங்கிலாந்து குரு John Henry Newmanஐ கர்தினாலாக உயர்த்தியது இவரே. 1886ல் 50 இங்கிலாந்து மறைசாட்சிகளை புனிதர்களாக அறிவித்தார். அதே ஆண்டு 6 உயர் மறைமாவட்டங்களையும் 10 மறைமாவட்டங்களையும் உள்ளடக்கி இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை தலைமைப்பீடத்தை உருவாக்கியதும் திருத்தந்தை 13ம் லியோவே. இந்த 6 உயர் மறைமாவட்டங்களில் சென்னை-மயிலை, மற்றும் பாண்டிச்சேரி உயர் மறைமாவட்டங்களும் அடங்கும்.
இவர் காலத்தில், வெளிநாடுகளுடன் ஆன திருப்பீட உறவு மேம்படுத்தப்பட்டது. 1903ல் மன்னர் ஏழாம் எட்வர்ட் வத்திக்கான் வந்து திருத்தந்தையை சந்தித்தார். துருக்கி சுல்தான் மற்றும் ஈரான் ஷாவின் பிரதிநிதிகளை வரவேற்று உரையாடினார் பாப்பிறை 13ஆம் லியோ. சைனா மற்றும் ஜப்பான் பேரரசர்களின் பிரதிநிதிகளும் திருப்பீடம் வந்தனர். இத்தாலி நாட்டிற்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவில் திருப்பீடத்திற்கான எந்த அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை இந்தப் பாப்பிறை. வத்திக்கானின் சுயாட்சி மதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார். உலகம் முழுவதும் 248 புதிய மறைமாவட்டங்களை உருவாக்கினார். வத்திக்கான் நூலகத்தை பொதுமக்களுக்கென திறந்துவைத்தார். வத்திக்கான் வானிலை ஆய்வு கழகத்தை உருவாக்கினார். 1892ல் விவிலிய கழகத்தை ஏற்படுத்தினார். இவர் எழுதிய சுற்றுமடல்களுள் மிகவும் பிரபலமானது "Rerum novarum" (18 May, 1891) என்ற சுற்றுமடலாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வரையறுப்பதாக இது இருந்தது. தன் குருத்துவ பொன்விழா, ஆயர் திருநிலைப்பாடு, மற்றும் திருத்தந்தைப் பணியின் வெள்ளிவிழா ஆகியவைகளைக் கொண்டாடிய இத்திருத்தந்தை 13ம் லியோ, 1903ஆம் ஆண்டு ஜூலை 20ந்தேதி காலமானார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்