தேடுதல்

கென்யாவில் வன்முறை கென்யாவில் வன்முறை   (AFP or licensors)

கென்யா, வன்முறைக்குள் தள்ளப்படும் பேராபத்து உள்ளது

எந்தவொரு தலைவரும், அவருடைய பதவி அல்லது அதிகாரம் எதுவாக இருந்தாலும், நம்மை வெறுப்பு மற்றும் வன்முறையின் குழிக்குள் தள்ளிவிடக்கூடாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கென்யாவில், போர் நிறுத்தம் ஏற்படுத்தவும், அனைத்து விதமான அரசியல் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி வைக்கவும் அரசு மற்றும் எதிர்கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது அந்நாட்டு ஆயர்  (KCCB) பேரவை.

கென்ய ஆயர் பேரவை அறிக்கையின் சிறப்பம்சங்களைப் பத்திரிகைகளுக்கு வாசித்த அதன் தலைவரும் மொம்பாசாவின் பேராயருமான Martin Kivuva Musonde அவர்கள், வெறுப்பையும் வன்முறையையும் அகற்றி, அன்பு மற்றும் மன்னிப்பின் வழியில் அமைதியான பாதைகளைக் கண்டறியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

"என் மக்கள் எழுப்பும் அழுகுரலை நான் கேட்டேன்" (விப 3:7) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், நாடு வன்முறைக்குள் தள்ளப்படும் பேராபத்து உள்ளது என்றும், எதிர்ப்புகளால் நாடு பேரிழப்பைச் சந்திக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ள ஆயர்கள், கென்ய அரசியல் தலைவர்கள் அதன் தீவிர பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மறுப்பதையும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீர்வுகளைத் தேடுவதற்குப் பதிலாக, வெறுப்பு, பழிவாங்கல் மற்றும் வன்முறையை அதிகரிக்கும் பாதையை நமது அரசியல் தலைவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும்,  அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற அச்சுறுத்தல்கள், குடிமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள், கடுமையான அலட்சியம், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படல் ஆகியவற்றால் நாடு தவறானப் பாதையில் நடத்தப்படுவதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர் கென்ய ஆயர்கள்.

நமது பிரச்சனைகளுக்காக நாம் எப்பொழுதும் புலம்பிக்கொண்டே இருக்க முடியாது என்றும், அதேவேளையில், அவைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துத் தீர்வுகாணவும் முடியாது  என்றும் கூறியுள்ள ஆயர்கள், எந்தவொரு தலைவரும், அவருடைய பதவி அல்லது அதிகாரம் எதுவாக இருந்தாலும், நம்மை வெறுப்பு மற்றும் வன்முறையின் குழிக்குள் தள்ளிவிடக்கூடாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.

நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நெருக்கடி குறித்து கென்ய ஆயர்கள் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ள வேளை,  வறுமையின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய 2022-ஆண்டுத் தேர்தல்கள் தொடர்பான அரசு எதிர்ப்பு போராட்டங்களை நிறுத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் Raila Odinga.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2023, 13:50