தேடுதல்

செய்தியாளர்களிடம் உரையாற்றும் கர்தினால் மால்கம் இரஞ்சித் செய்தியாளர்களிடம் உரையாற்றும் கர்தினால் மால்கம் இரஞ்சித்   (AFP or licensors)

இலங்கையில் மனித சங்கிலிப் போராட்டம்

நாட்டின் நன்மைக்காகவும் எதிர்காலத்திற்காகவும், இந்தப் படுகொலையின் போது என்ன நடந்தது என்பதை குடிமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் : கர்தினால் இரஞ்சித்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்களின் போது 200-கும் அதிகமானோர் கொல்லப்பட்டதன் நினைவாக, மனித சங்கிலிப் போராட்டத்தை உருவாக்குமாறு கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

ஏப்ரல் 17, இத்திங்களன்று, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் பெரும் சதி இருப்பதாக முன்னாள் அரசுத் தலைமைச் சட்ட அதிகாரி கூறியது தங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது என்று உரைத்த கர்தினால் இரஞ்சித், யஹபாலன அரசால் அப்போது நியமிக்கப்பட்ட பாராளுமன்ற ஆணைக்குழுவின் அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாவும் கூறினார்.

நாட்டின் நன்மைக்காகவும் எதிர்காலத்திற்காகவும், இந்தப் படுகொலையின் போது என்ன நடந்தது என்பதை குடிமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய கர்தினால் இரஞ்சித், தீமையின் செயல்களை வெளிப்படுத்தும் முயற்சிகளை ஒருபோதும் நிறுத்த மாட்டோம் என்பதை காட்டுவதே எங்களின் இந்தப் போராட்டம் என்றும், இதனைக் கைவிட்டால், நாட்டிற்கு மோசமான முன்னுதாரணமாகி விடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்த நாடு இப்போது ஊழல் நிறைந்த அரசியல் அதிகார தளத்தைக் கொண்டுள்ளது என்றும், இப்படிப்பட்டச் சூழ்நிலையில், அதிகாரத்தை அடைவதற்காக அல்லது தக்கவைத்துக் கொள்வதற்காக எதிர்காலத்தில் குற்றச் செயல்களும் மேற்கொள்ளப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார் கர்தினால் இரஞ்சித்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கும், இதற்குப் பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும் இது அவசியமான சூழல் என்பதையும் எடுத்துரைத்தார் கர்தினால் இரஞ்சித்.

எனவே இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து குடிமக்களும் ஏப்ரல் 21-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கொழும்பு - நீர்கொழும்பு முக்கிய வீதியின் இருபுறமும் அமைதியான முறையில் ஒன்று கூடி இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள், மற்றும் மூன்று தங்கும் விடுதிகள் சேதமடைந்ததுடன் 250 பேர் உயிரிழந்தனர் என்பதும் 500 பேர் படுகாயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2023, 13:56