Notre-Dame ஆலயம் மறுசீரமைப்பு பணிகள் விரைவில் முடிவு
மெரினா ராஜ் – வத்திக்கான்
பாரிஸில் உள்ள Notre-Dame பேராலயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தீ விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட நிலையில் ஆலயத்தின் மறுசீரமைப்புக்கள் முடிவடைந்து 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் 860 ஆண்டுகள் பழமையான Notre-Dame பேராலயம் தீ விபத்துக்குள்ளாகி, ஆலயத்தின் கோபுரம், மேற்கூரை, கடிகாரம், நற்கருணைப் பேழையின் ஒரு பகுதி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2024ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் 8ஆம் நாள் அன்னையின் அமலஉற்பவ திருவிழாவன்று திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் மக்ரோன்.
ஆலயம் செல்லுதல், மெழுகுதிரிகள் ஏற்றுதல், புனித நீர் பெறுதல் போன்ற ஆன்மிக வாழ்க்கைக்கான அடையாளங்கள் இக்காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்றும் கிறிஸ்துவின் பாடுகளின் அடையாளமான முள்கீரீட நினைவுச்சின்னம் பேராலயத்தின் முக்கியமானதாக அமையும் வகையில் சீரமைப்புப் பணிகள் செய்யப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் பேராலயத்தின் பொறுப்பாளர் பேரருள்திரு Olivier Ribadeau Dumas.
பாரிசிலுள்ள புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தைவிட, இந்தப் பேராலயத்துக்கு ஒவ்வோர் ஆண்டும், 1கோடியே 20 இலட்சம் மக்கள் கூடுதலாக வருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
Île de la Cité எனப்படும் இடத்தில், அரசர் 7ஆம் லூயிஸ் ஆட்சி காலத்தில், 1163ஆம் ஆண்டில் கோதிக் கலை வண்ணத்தில் இப்பேராலயக் கட்டடப் பணிகள் தொடங்கின. இது, 1991ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய சொத்துப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தீவிபத்திற்கு முன்னர், ஒவ்வோர் ஆண்டும் 1கோடியே 20 இலட்சம் மக்களை திருப்பயணிகளாகக் கொண்ட ஐரோப்பாவின் பழமையான Notre-Dame பேராலயம் இவ்வாண்டு அதன் கட்டுமானத்தின் 860 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்