பல்மதத் தலைவர்கள், பர்மிங்காம் பல்மதத் தலைவர்கள், பர்மிங்காம்  

நம்பிக்கை தொடர்பானவற்றை பொதுவில் வெளிப்படுத்துகிறோம்

‘இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது’ என்ற இயேசுவின் வார்த்தைகள், இன்றைய மனித வாழ்வின் உண்மை இயல்புக்கு நம் கண்களைத் திறக்கிறது : பேராயர் Longley.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பர்மிங்காம் மிகவும் பெருமைக்குரிய ஒரு நகரம் என்றும், அது பல்வேறு நம்பிக்கைச் சமூகங்கள் வாழும் மேன்மையான இடம் என்றும் கூறியுள்ளார் அந்நகரின் பேராயர் Bernard Longley

''மரணத்திற்குப் பிறகு மறுவாழ்வு?' (‘Eternity – What’s Next?’) என்ற தலைப்பில் சிந்திக்க, ஆறு வெவ்வேறு மத மரபுகளைச் சேர்ந்த நம்பிக்கைத் தலைவர்கள் ஏப்ரல் 27, இவ்வாயாழனன்று பர்மிங்காமில் ஒன்று கூடும் வேளை, இவ்வாறு கூறியுள்ளார் பேராயர் Longley.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில், மதங்களுக்கு இடையிலான உரையாடலின் முக்கியத்துவம் மற்றும் 'என்றுமுள்ள நிலை' (Eternity) என்ற தலைப்பில் அவர் வழங்கவிருக்கும் சிந்தனைகள் குறித்தும் பேசியுள்ளார் பேராயர் Longley.

கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டெம்பர் 9-ஆம் நாள் நியூயார்க்கில் தீவிரவாதிகள் நிகழ்த்திய இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாகப் பர்மிங்காம் பலமத நம்பிக்கைத் தலைவர்கள் குழு நிறுவப்பட்டது என்றும், இது இன்றுவரை செயலில் உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் Longley.

நம்முடைய நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும், அதேவேளையில், மற்றவர்களின் நம்பிக்கைகளைப் பற்றி ஏதாவது கற்றுக்கொள்வதற்கும், அது எவ்வாறு நம்முடன் இணைகிறது என்பதை அறிந்துகொள்வதற்கும் இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Longley.

நாங்கள் நிச்சயமாக எந்த விததத்திலும் மதமாற்றம் செய்ய முற்படவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவே விரும்புகிறோம் என்றும், இந்த ஆறு பல்சமயத் தலைவர்களும் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கைத் தொடர்பான பகிர்வுகளை எல்லாருக்கும் பொதுவில் வெளிப்படுத்த விரும்புகிறோம் என்றும் தெளிவுபடுத்தினார் பேராயர் Longley.

இந்நிகழ்வில் யூத, பௌத்த, இந்து, சீக்கிய, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின் பிரதிநிதிகள் உரைநிகழ்த்தவுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2023, 14:01