தேடுதல்

ஆண்டவரின் தூதர் முன் கிதியோன் ஆண்டவரின் தூதர் முன் கிதியோன்  

தடம் தந்த தகைமை - மிதியானியர் கையிலிருந்து விடுதலை

மிதியானியரை முன்னிட்டு, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்ட பொழுது, ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் ஒருவரை அனுப்பினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார். மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். எனவே, மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமைத்துக் கொண்டனர். இஸ்ரயேல் மக்கள் பயிரிட்டதை மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்களும் அழித்து வந்தனர். மிதியானியரிடம் மிகவும் சிறுமையுற்ற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.

இவ்வாறு, மிதியானியரை முன்னிட்டு, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்ட பொழுது, ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் ஒருவரை அனுப்பினார்.

பின்பு, ஆண்டவரின் தூதர் ஒபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடும்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார். ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, “உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?” என்றார். கிதியோன், “உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும். நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்” என்றார். அவரும், “நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.

கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு, அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும், எடுத்துக்கொண்டு அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார். கடவுளின் தூதர் அவரிடம், “இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறைமீது வைத்துக் குழம்பை ஊற்று” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2023, 11:53