‘சீனாய் மலையருகில் இஸ்ரயேலர்!’
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தைச் சென்றடைந்தனர். இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர். ஆனால், மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார். அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, “யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்லவேண்டியதும் இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியதும் இதுவே: “நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள். நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை” என்றார்.
உடனே மோசே வந்து, மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்” என்று மறுமொழி கூறினர். மக்களின் பதிலை மோசே ஆண்டவரிடம் சமர்ப்பித்தார். ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார் மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்