விவிலியத் தேடல்: திருப்பாடல் 38-2, மனித வலிமையை அழிக்கும் பாவம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘மதிகேட்டினால் விளைவது பாவம்!’ என்ற தலைப்பில் 38-வது திருப்பாடலில் 01 முதல் 05 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 06 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிப்போம். நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்; நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன். என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று; என் உடலில் சற்றேனும் நலம் இல்லை. நான் வலுவற்றுப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப்போனேன்; என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன். என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்; என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை. என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது; என் வலிமை என்னைவிட்டு அகன்றது; என் கண்களும்கூட ஒளி இழந்தன. (வசனம் 06-10)
அவன் ஒரு பாவி! அவனுக்கு ஒரு நாள் தான் ஒரு புனிதனாக வேண்டும், அக ஒளி பெற்றவனாக, தூய்மை நிறைந்த மனம் படைத்தவனாக மாறவேண்டும் என்ற ஆசை வந்தது. எல்லாருக்கும் நல்வழி காட்டும் துறவி ஒருவர் காட்டுக்குள் வாழ்வதாக அவன் அறிந்து, அந்தத் துறவியைத் தேடி காட்டுக்குள் சென்றான். அவரிடம் சென்று, "சாமி, நான் ஒரு பெரிய பாவி! என் பாவங்கள் எப்போதும் என் கண்முன்னே வருவதால் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை, நிம்மதியாக இருக்க முடியவில்லை, ஒரே பதட்டமாக இருக்கிறது. நான் இப்போது வலுவற்றவனாக மாறிவிட்டேன். இதனால் எனது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது. நான் விரைவில் இறந்துபோய்விடுவேனோ என்று மிகவும் பயமாக இருக்கிறது. எனக்கு உதவுங்கள். நான் மனம் திரும்பி நல்லவனாக வாழ ஆசைப்படுகின்றேன். எனக்கு நல்வழி காட்டுங்கள் சாமி” என்றான்.
அப்போது அந்தத் துறவி அவனிடம், "நீ போய் ஒரு வெங்காயத்தாமரைச் செடியைக் கொண்டு வா" என்றார். அவனும் போய்க் கொண்டு வந்தான். “உடனே, இந்தச் செடியைக் கொண்டு போய் கடலில் எறிந்து விட்டு வா” என்றார் அந்தத் துறவி. அதை எடுத்துக்கொண்டு அவன் கடற்கரைக்குச் சென்றான். அவன் எத்தனை முறை அந்தச் செடியை கடலுக்குள் எறிந்தாலும் அத்தனை முறையும் அந்தச் செடியைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தன அந்தக் கடலலைகள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்தோடு அவரிடம் திரும்பி வந்த அந்தப் பாவி நடந்ததை அந்தத் துறவியிடம் கூறினான். அதற்கு அந்தத் துறவி, “மகனே! அந்த வெங்காயத்தாமரைச் செடி தன்னுள் புகுந்தால் போதும்! அது வளர்ந்து, படர்ந்து தன்னை, முழுவதுமாக அடைத்துவிடும். இதனால் தன்னில் வாழும் உயிரினங்களும் தனது பெருமைமிக்க வளமும் பாதிக்கப்படும் என்று அந்தக் கடலுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அந்தச் செடி உள்ளே வராதபடி அதன் அலைகள் அதைத் தூக்கி எறிந்திருக்கின்றன. ஆகவே, உன் மனம் முழுவதையும் தீமையால் நிரப்ப ஒரு சிறு பாவம் போதும்! ஆகவே, இனிமேல் ஒரு சிறு பாவம் கூட உனக்குள் நுழையாமல் பார்த்துக்கொள். பாவம் உன் பக்கத்தில் வரும்போது அதைத் தூக்கி எறிந்துவிடு" என்றார். அவனும் அவ்வாறே செய்தான், புனித வாழ்வு வாழ்ந்து கடவுளுக்கு ஏற்புடையவனானான். இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட இந்த 5 இறைவார்த்தைகளிலும் ஒடுங்கிப்போதல், துயருறுதல், உடல்நலத்தை இழத்தல், வலுவற்றிருத்தல், கதறி அழுதல், வலிமை இழத்தல், உள்ளம் வேதனையால் துடித்தல் ஆகியவற்றை பாவத்தின் விளைவுகளாக எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர்.
01 நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்
குடம் காலியான பிறகு குதிப்பதால் பயன் ஒன்றும் இல்லை. காற்று இருக்கும்போதே தூற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்டு பிறகு கதறி அழுது என்னப் பயன்? தேவையானது கையில் இருக்கும்போதே கவனத்துடன் காரியங்களை நிகழ்த்துபவர்களே இன்பத்தை துய்க்கிறார்கள். இருப்பதைப் பயன்படுத்தத் தெரியாதவர்களும் இறுமாந்து இருப்பவர்களும் இறைவன் தரும் இன்பத்தை அடைவதில்லை. நாம் அனுமதிக்காமல் எந்தவிதமான பாவமும் நம்மில் நுழைய முடியாது. ஆகவே, பாவம் நம்மில் நுழைய நாம் அனுமதிக்கும்போது அது நம்மை முற்றிலுமாக ஒடுக்கிவிடுகிறது. எல்லாமே நான்றாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு பாவச் செயல் நம் வாழ்வையே பாழ்படுத்திவிடும் பேராபத்து நம் வாழ்வில் நிகழ்ந்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது. தாவீதுக்கு எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆண்டவரின் அரவணைப்பில், பாதுகாப்பில், அவர் தந்த வலிமையில் எல்லாவற்றையும் சாதித்துக்கொண்டிருந்த தாவீதின் எண்ணத்தில் உதித்த அந்தப் பாவ எண்ணத்தால் அவர் சறுக்கி வீழ்ந்தார். இதன் காரணமாகவே, தாவீது தனது பாவத்தால் மிகவும் ஒடுங்கிப்போனதாகப் புலம்பி அழுகின்றார். இதனை மனதில்கொண்டுதான், ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது (யாக் 1:14-15) என்று பாவம் உருவாகும் வழியை எடுத்துக்காட்டுகின்றார் திருத்தூதரான யாக்கோபு.
02. நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்
இரண்டாவதாக, பாவத்தில் விழுந்த ஒரு மனிதர் நிம்மதியையும் அமைதியையும் தொலைத்துவிட்டு துயரத்தில் துவண்டுகொண்டு இருப்பார். ஒரு மனிதரின் வாழ்வில் பாவம் நுழையும்போது அது அம்மனிதரைக் கடவுளிடமிருந்து முற்றிலுமாக அந்நியப்படுத்தி அவரை முழுமனிதத்தன்மை அற்றவராக மாற்றிவிடுகிறது. இதனால் ஏற்படும் கொடுந்துயரம் அவர் வாழ்வை ஒட்டுமொத்தமாக சிதைத்து விடுகிறது. இதன் காரணமாவே, “நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்” என்று கதறுகிறார் தாவீது அரசர். ஓளிரும் வாழ்க்கையை அடைய வேண்டுமெனில் இருளை விளைவிக்கும் பாவத்தில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. அதனால்தான், “உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்" (உரோ 6:12-13) என்று புனித பவுலடியாரும் வலியுறுத்திக் கூறுகின்றார்.
03. நான் வலுவற்று முற்றிலும் நொறுங்கிப்போனேன்
‘அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் அப்படியே நொறுங்கிப்போய்ட்டேன். அந்தக் காரியத்தை நான் செய்திருக்கவே கூடாது. அதனை இப்போது நினைத்தாலும் என் உள்ளம் அப்படியே நொறுங்கிப்போகின்றது’ என்று அடிக்கடி பலர் கூற நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். தாவீது அரசரும் தான் செய்த பாவச் செயலுக்குப் பிறகு, “என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்” (திபா 51:3-4) என்று வேதனையில் விம்மி அழுகிறார். ஆக, பாவம் நம்மில் வலுவற்ற நிலையை ஏற்படுத்தி, உடல் வலிமையை இழக்கச் செய்து, நமது ஒட்டமொத்த வாழ்வையும் நொறுக்கிவிடுகிறது. இதன் காரணமாகவே, “என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று; என் உடலில் சற்றேனும் நலம் இல்லை. நான் வலுவற்றுப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப்போனேன்; என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்” என்கிறார் தாவீது. ஒரு மனிதரின் உடலுக்குள் ஒவ்வாத ஒன்று தொடர்ந்து உள்ளே போய்க்கொண்டிருந்தால் நாளடைவில் அவரது குடல் செயலிழந்து அழுகிப்போய் நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும். அவ்வாறே, ஒரு மனிதரின் உள்ளத்தைப் பாவம் தொடர்ந்து ஆக்கிரமிக்கும்போது அவரது உள்ளம் பாழ்பட்டு வாழ்வு முற்றிலும் செயலழிந்து போகும் என்பதை எடுத்துக்காட்டவே, ‘குடல் செயலிழந்து அழுகிப்போய் நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும்’ என்று குறித்துக் காட்டுகின்றார் தாவீது. மேலும் ஒரு மனிதர் தொடர்ந்து மதுபானங்கள் அருந்தும்போது அவருடைய குடல் வெந்துபோகிறது. தொடர்ந்து புகைபிடிக்கும்போது, அவரது நுரையீரல் பாழடைந்துபோய்கிறது. இதனால், அம்மனிதர் விரைவில் மரணத்தைச் சந்திக்கின்றார் என்பதை நாம் அறிந்துகொள்வோம்.
04. என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.
இரத்தக் கொதிப்புப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அது என்ன உள்ளக் கொதிப்பு? நமது வாழ்வில் பலர் இரத்தக் கொதிப்பினால் உயிர் துறப்பதைப் பார்க்கின்றோம். அதுவும் இன்றைய காலங்களில், உணவுக் கட்டுப்பாடின்மை, மன அழுத்தம், மனக்கசப்பு, மனத்துயரங்கள் ஆகியவற்றின் விளைவாக இரத்த அழுத்தம் அதிகமாகி இரத்தக் கொதிப்பு ஏற்பட்டு பலர் உயிர் துறக்கின்றனர் என்பதுதான் மருத்துவம் சொல்லும் காரணமாக இருக்கின்றது. இரத்தக் கொதிப்பு ஏற்படும் வேளை, அதன் வலி மிகவும் கொடியதாக இருக்குமாம். இந்த வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில்தான் அந்த நபர் சட்டெனெ இறந்துபோகின்றார். ஆக, நம்மில் இருக்கும் பாவம் இத்தகைய உள்ளக்கொதிப்பை ஏற்படுத்தி உயிரை மாய்த்துவிடும் அளவிற்குக் கொடியது என்பதை, 'என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்' என்ற தாவீதின் வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம்.
“அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்” (1 யோவா 1:7) என்கின்றார் திருத்தூதரான புனித யோவான். ஆகவே, தாவீதின் வழியிலே நம் பாவங்களுக்காக நாமும் மனமுருகி கண்ணீர்விட்டழுது மன்னிப்பு வேண்டுவோம். அப்போது இயேசுவின் இரத்தத்தினால் நாமும் கழுவப்பட்டு தூய்மையாவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்