விவிலியத் தேடல்: திருப்பாடல் 38-1 'மதிகேட்டினால் விளைவது பாவம்!'
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நெருக்கடியில் காக்கும் கடவுள்!’ என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 39 முதல் 40 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம் அதனை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 38-வது திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்குவோம். 'துன்புற்றவரின் மன்றாட்டு' என்ற தலைப்பில் அமைந்துள்ள இத்திருப்பாடல் மொத்தம் 22 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இத்திருப்பாடல் மொத்தம் மூன்று பகுதிகளைக் உள்ளடக்கியுள்ளது. முதலாவதாக, தான் அனுபவிக்கும் துயரங்கள் மற்றும் வேதனைகள் குறித்து கதறி அழும் தாவீது அரசர், அதெற்கெல்லாம் காரணம் தனது பாவங்கள்தாம் என்று கூறி அவற்றை இறைவனிடம் அறிக்கையிடுகின்றார். இரண்டாவதாக, இத்தகைய பாவச் செயல்களால் தனது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் தனது எதிரிகளால் தான் வெறுத்தொதுக்கப்பட்டுள்ளதாக இறைவனிடம் முறையிடுகிறார். மூன்றாவதாக, இத்தகைய நெருக்கடியான வேளையிலும் கடவுளால் மட்டுமே தான் மீட்கப்பட முடியும் என்றும் கூறி அவரிடம் முழுவதும் சரணடைகின்றார். இப்போது இத்திருப்பாடலின் முதல் 5 இறைவசனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். முதலில் தியானச் சிந்தனையுடன் அவ்வார்த்தைகளை வாசிப்போம். ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்; ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன; உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது. நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை; என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை. என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன. என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன; என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம். (வசனம் 1-5)
நாம் தியானிக்கும் இந்த இறைவார்த்தைகள் தாவீதின் பழைய பாவ வாழ்வை நமக்கு நினைவூட்டுகின்றன. அவர் பத்சேபாவுடன் மேற்கொண்ட பாவத்தின் விளைவாகவே இப்படிக் கூறுகிறார் என்பதை நாம் உணர்ந்த கொள்ளலாம். முதலாவதாக, கடவுளின் சீற்றமும் சினமும் பாவத்திற்கான தண்டனையைத் தரக்கூடியது என்கிறார். பழைய ஏற்பாட்டின் காலத்திலே கடவுள் எகிப்திலிருந்து தான் அழைத்து வந்த மக்கள்மேல் கடும் சினம் கொள்வதைக் காண்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளைப் புரிந்துகொள்ளாமல் அவரது நன்மைத்தனத்திற்கு எதிராகச் செயல்பட்டபோதெல்லாம் அவர்கள்மீது சீற்றமும் கடும்சினமும் கொள்கின்றார். குறிப்பாக, உணவின்றி, தண்ணீரின்றி அவர்கள் தாகத்தால் தவித்தபோதும், சீனாய் மலையில் கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளைப் பெற்றுவர மோசே தாமதம் செய்தவேளை அவர்கள் பொன்கன்று குட்டி செய்து கடவுளுக்கு எதிராக வழிபட்டபோதும், கடவுளின் சினம் பொங்கியெழுவதைப் பார்க்கின்றோம். குறிப்பாக, கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக அவர்கள் வெகுண்டெழுந்தபோது கடவுள் கொள்ளிவாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர் (காண்க எண் 21:4-9) என்று வாசிக்கின்றோம். ஆனால், மேற்கண்ட எல்லா நிகழ்வுகளிலும் ஒன்றை நாம் கவனிக்க மறந்துவிடக்கூடாது. அதாவது, கடவுள் இஸ்ரயேல் மக்களின் பாவச் செயல்களுக்காக சீறியெழுந்தாலும், சில மணித்துளிகளிலேயே சினம் தணிந்து அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார். ஆக, இந்த மீட்பின் வரலாற்றைத் தாவீது நன்கு அறிந்திருந்தபடியால்தான், ‘என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்’ என்கின்றார். இரண்டாவதாக, ‘உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன’ என்கின்றார். அம்பு என்பது வில்லின் நானில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஒரு சிறிய ஆயுதம் எனலாம். அதன் கூர்மையின் தன்மை கொண்டே தொடக்க கால கவிஞர்கள் பார்வையின் தன்மையை அம்புகளுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். ஆக, ஒரு மனிதரையோ, பறவையையோ, விலங்கினையோ அல்லது பொருளினையோ சரியான விதத்தில் குறிபார்த்து அம்பு எய்யப்படும்போது அது வீழ்த்தப்படும். அவ்வேளையில், அவற்றில் பாய்ந்துள்ள அம்மை பிடுங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. காரணம், மிகவும் வலிமையுடன் எறியப்பட்டதால், அவ்வம்பு அதனுள் ஆழப் பதிந்துவிடும். அவ்வாறே பாவம் செய்யும் மனிதர்மேல் கொள்ளும் கடவுளின் சினத்திற்கும் வலிமை இருக்கும் என்பதை மனதில் கொண்டவராக, ‘உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன’ என்கின்றார் தாவீது. மூன்றாவதாக, ‘உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது’ என்கிறார். அப்படியென்றால், கடவுள் நேரிடையாக வந்து அவரை அழுத்திக்கொண்டிருப்பதாக நாம் பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, அவரது பாவத்தின் விளைவாகக் கடவுளின் கோபப்பார்வை தன்னை அழுத்துவதாக எடுத்துரைக்கின்றார் தாவீது. நான்காவதாக, ‘நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை; என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை.’ நான் செய்த பாவம்தான் என்னை இப்படி நடைபிணமாகிவிட்டது என்று சிலர் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம். சிலர் இளமையில் செய்த பாவங்களின் விளைவாக முதுமையில் வலுவிழந்து, கூனிக் குறுகி, எலும்புகள் எல்லாம் நெக்குவிட்டுப்போய், ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா’ என்ற நிலையில் மண்ணுக்குள் மடிவத்தையும் கண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட மனநிலையில் தானும் இருப்பதாகப் புலம்புகிறார் தாவீது அரசர்.
ஐந்தாவதாக, ‘என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன’ என்கின்றார் தாவீது. நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே நோயாளி ஒருவரின் முழங்காலுக்குக்கீழ் புண் இருந்தது. அது அழுகிய நிலையில் இருந்தது. அதிலிருந்த புழுவை அந்த மருத்துவர் அகற்றிக்கொண்டிருந்தார். அப்போது வலி தாங்க முடியாமல், ‘ஐயோ...! நான் என்ன பாவம் செய்தேனோ தெரியலையே... எனக்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று அந்நோயாளி கதறி அழுதுகொண்டே இருந்தார். தாவீது கூறும் இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது, நான் மருத்துவமனையில் பார்த்த அந்தக் காட்சி இப்போது என் கண்முன்னால் விரிகிறது. ஆக, ஒரு மனிதரின் வாழ்வில் பாவங்கள் ஊற்றெடுக்கும்போது, உடலில் உள்ள புண்கள் அழுகி நாற்றமெடுப்பதுபோல் அவரது வாழ்வது மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இங்கே, தான் செய்த பாவத்தால் மனதில் ஏற்பட்ட ஊனம் என்னும் புண்ணால் அல்லது மனவேதனை என்னும் புண்ணால் தனது வாழ்வு அழுகி நாற்றமெடுக்கின்றது என்ற கண்ணோட்டத்தில் தாவீது அரசரும், இப்படிக் கூறுவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். இறுதியாக, ‘என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்’ என்று கூறி ஆண்டவராம் கடவுளிடம் பாவ அறிக்கை செய்கின்றார். மதிகேடு என்பது அறிவற்றதனம், பொறுப்பற்றத்தனம், சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றையும் குறிக்கும். இவற்றை உணர்ந்துதான், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன் (திபா 51:3,4,) என்று உள்ளம் திறந்த நிலையில் கடவுளிடம் தனது பாவங்களை எடுத்துரைத்து மன்னிப்பு வேண்டுவதைப் பார்க்கின்றோம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்திலே பாம்பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். தன்னிடமிருந்த ஒரு மலைப் பாம்பைக் கொண்டு வேடிக்கைக்காட்டி அதன் மூலம் வரும் பணத்தால் வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தார். பொது மக்கள் கூடுகின்ற இடத்திற்குச் சென்று அப்பாம்பிடம் தன்னை சுற்றிக் கொள்ளவும், தன் மேல் ஏறவும் இறங்கவும் கட்டளையிடுவார். அவர் சொற்படியே பாம்பும் செயல்படும். மக்கள் இதை வியப்புடன் கண்டு மகிழ்ந்து காசு பணம் கொடுப்பார்கள். இதனைக் கண்ட இவரது நண்பர்கள் அனைவரும், "பாம்போடு விளையாடாதே, அது என்றாவது ஒருநாள் அதன் குணத்தைக் காட்டிவிடும். வேறு ஏதாவது நல்ல தொழிலை செய்து பிழைக்கப் பார்" என்பார்கள். ஆனால், அவரோ அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் வழக்கம் போல செய்து வந்தார். ஒரு நாள் மக்கள் மத்தியில் பாம்போடு வேடிக்கைக் காட்டி தன்னைச் சுற்றிக் கொள்ளுமாறு பாம்பிற்குக் கட்டளையிட்டார். அதுவும் அவரது கால்களில் எறி கழுத்து, தலை வரை சுற்றிக் கொண்டது. அதோடு அவர் மக்களை மகிழ்விக்க நடனமாடினார். சில நிமிடங்கள் கழித்து கீழே இறங்குமாறு பாம்பிடம் கட்டளையிட்டார். ஆனால், அது ஆக்ரோஷமாக அவரை இறுக்கியது. எலும்புகள் நொறுங்கின. வாயிலிருந்து இரத்தம் வடிய அவர் துடிதுடித்து இறந்துபோனார். பாம்பை கண்டு ஓடுவதுபோல பாவத்தைக்கண்டு ஓடவேண்டும் என்பார்கள். நம் ஆதிப்பெற்றோரை பாம்பு எப்படி ஏமாற்றி பாவத்தில் விழச்செய்தது என்பதை நாம் அறிவோம். 'ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது' (காண்க தொநூ 3:1) என்று பாம்பின் இயல்பு குறித்து நாம் தொடக்க நூலில் வாசிக்கின்றோம். ஆக, பாம்புகளைப் போல பாவங்களும் ஆபத்தானவை.
தாவீதுக்குக் கடவுள் எப்போதும் ஒருகுறையும் வைத்திருந்ததில்லை. அவருக்கு எல்லாவற்றையும் நிறைவாக அளித்திருந்தார் (காண்க 2 சாமு 12:7-10). ஆனாலும், தனது மதியீனத்தால் அவர் மிகப்பெரும் பாவத்தில் வீழ்ந்தார். இருப்பினும், தாவீதிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், மிகப்பெரும் இஸ்ரயேல் அரசர் என்ற நிலையில், தான் எதையும் செய்ய அதிகாரம் இருந்தும் கூட, அதையெல்லாம் விடுத்து, தன் நிலையிலிருந்து கீழிறங்கி தனது பாவங்களுக்காக ஆண்டவராம் கடவுளிடம் மன்னிப்பு வேண்டினார். இத்தகைய மனநிலை நம்மிடமும் துலங்கவேண்டும். நாம் மனத்தாழ்மையுடன் நமது பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டும்போது, இறைவன் மனமிரங்கி நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார். ஆகவே, நம் பலவீனங்களால் பாவத்தில் விழ நேரிடும் தருணங்களில் எல்லாம் இறைவனின் அருள்கர உதவி வேண்டி மன்றாடுவோம். இறைவன் இந்நாளில் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்