விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-11, ‘சான்று பகரும் சான்றோர்!’
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘இழிவானவர் இல்லாதொழிவர்!' என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 34 முதல் 36 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 37 முதல் 38 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது வாழ்வளிக்கும் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். சான்றோரைப் பார்; நேர்மையானவரைக் கவனி; அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர். அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர் (வசனம் 37-38). நாம் தியானிக்கும் இந்த இரண்டு இறைவசனங்களிலும் சான்றோர் யார், அநீதியாளர் யார், என்பதை எடுத்துக்காட்டி நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களை நமக்கு எடுத்துக்காட்டுகின்றார் தாவீது.
அக்காலத்தில், ஜனகர் என்னும் பெயர் கொண்ட மாமன்னர் ஒருவர் விதேகபுரி நாட்டை ஆட்சி செய்து வந்தார். அவரது அரசவையில் புகழ்பெற்ற பேரறிஞர்களும், பெரிய ஞானிகளும் இருந்தனர். ஆதலால், அச்சபையில் எப்போதும் ஞான அமுதம் பெருகி வழிந்தோடியது. நல்ல விடயங்களைக் கேட்பதற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் அறிவார்ந்த பல தகவல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும், பல சான்றோர்கள் ஜனகரின் சபைக்கு வருவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஒரு நாள் அவரது அரண்மனை வாசலில் ஒரு பெரிய ஞானி வந்திருப்பதாக, வாயில் காப்பாளன் வந்து சொன்னான். அந்நேரத்தில் ஜனகரும், அவரது சபையைச் சேர்ந்த சான்றோர்களும் அரசவையில் கூடியிருந்தனர். அப்போது வந்திருப்பது யார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஜனகருக்கு ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக உள்ளே அனுமதிக்கும்படி காவலனிடம் கூறினார். வந்தவர் மிகப்பெரிய ஞானி, அஷ்டவக்ரர். அந்த மாமுனிவரின் உடலில் எட்டு இடங்களில் வளைவுகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர், ‘அஷ்டவக்ரர்’ என்று பெயர் பெற்றார். அவர் அரசவைக்குள் நுழைந்ததும், அஷ்டவக்ரரின் வளைந்த தோற்றத்தைக் கண்ட, அவையில் கூடியிருந்த சான்றோர்கள் அனைவரும் பலமாக சிரித்தனர். ஜனகருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. ஏனென்றால், அவர், அஷ்டவக்ரரின் பெருமையை ஏற்கனவே நன்கு உணர்ந்திருந்தார். சபையோரின் பலத்த சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆனது. அவர்கள் அனைவரின் சிரிப்பொலியும் அடங்கியபிறகு, பன்மடங்கு பலமாக ஒரே ஒரு சிரிப்பொலி மட்டும் அங்கே ஒலிக்கத் தொடங்கியது. அந்த சிரிப்பொலிக்குச் சொந்தக்காரர் யார் என்றால், அவர் அஷ்டவக்ரர்தான். ‘இவர் எதற்காக சிரிக்கிறார்?’ என்று சபையோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். ஜனகருக்கும் அதே எண்ணம்தான். ஆகவே, அவர் தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து, அஷ்டவக்ரரின் காலில் விழுந்து வணங்கினார். “தவ முனியே! அவையோர் அறியாமையால் சிரித்தனர் சரி... ஆனால் தாங்கள் சிரித்ததன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லையே?” என்று கேட்டார். அப்போது அஷ்டவக்ரர், "ஜனகரே! உங்களுடைய சபையில் ஞானியரும், அறிவிற்சிறந்தோரும் சூழ்ந்திருப்பார்கள், அவர்களுடன் பல நல்ல விடயங்களைப் பற்றி பேசி ஆனந்தம் அடையலாம் என்று எண்ணி வந்தேன். ஆனால் உமது சபையில் உள்ளவர்கள், அகத்தில் உள்ளதைப் பார்க்கத் தெரியாதவர்களாகவும், புறத்தை மட்டுமே மதிக்கும் கீழானவர்கள் போல் அல்லவா நடந்துகொள்கின்றனர். இதனைக் கண்டுதான் எனக்குப் பெருஞ்சிரிப்பு வந்தது” என்றார் அஷ்டவக்ரர். அப்போது அவையில் இருந்த அனைவரும் வெட்கத்தால் தலைகுனிந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜனகரின் சபை, உண்மையான ஞானத் தேடலுக்கான அவையாக விளங்கத் தொடங்கியது
நாம் தியானிக்கும் மேற்கண்ட இறைவசனங்களில் சான்றோரை நேர்மையாளராக, அமைதியை நாடுபவராகக் காட்டுகின்றார் தாவீது அரசர். சற்றும் முன் நாம் வாசித்த கதையில் வரும் அஷ்டவக்ரர் என்பவர் ஒரு சான்றோராகப் போற்றப்படுகின்றார். அதுமட்டுமன்றி, ஒரு சான்றோர் என்பவர் புறத்தை மட்டுமல்ல அகத்தை நோக்கக்கூடியவராக இருக்கவேண்டும் என்பதை அவருடைய வார்த்தைகளிலேயே கூறக்கேட்டோம். அக அழகு, புற அழகு என்று நாம் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றோம். சான்றோர் என்பவர் ஒரு மனிதரை உள்ளும் புறமும் நோக்கக் கூடியவர். அதிலும் குறிப்பாக, அக அழகைவிட புற அழகிற்கே அவர் முக்கியத்துவம் கொடுப்பார். அக அழகு அழிவில்லாதது. ஆனால், புற அழகு அழியக்கூடியது. வர்த்தகமயமாகிப்போன இன்றைய உலகில் 80 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் புற அழகிற்கே மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால்தான் பெரும்பாலும் பிரச்சனைகளும், உறவு முறிவுகளும், நம்பகத்தன்மையற்ற நிலையும் ஏற்படுகின்றன. இன்று மாற்றுத் திறனாளிகள் அனைவரிடமும் புற அழகைவிட அக அழகே அதிகம் இருப்பதைப் பார்க்கின்றோம். தாவீதை அருள்பொழிவு செய்வதற்காகப் பெத்லகேமைச் சேர்ந்த ஈசாயிடம் இறைவாக்கினரான சாமுவேல் அனுப்பப்படுகிறார். அங்குச் செல்லும் சாமுவேல், ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார். அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். ஆனால், ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில், நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார் (காண்க 1 சாமு 17:7).
சான்றோர் என்றால் படிப்பறிவைவிட பட்டறிவு பெற்றவர், வாழ்க்கையில் எல்லாம் பட்டு அறிந்தவர், அனுபவசாலி, கடந்து வந்த நல்வாழ்க்கைக்குச் சான்றாக, சாட்சியாக நிற்பவர் என்று பொருள் கொள்ளலாம். மேலும் சான்றோர் என்பவர் உயர்கல்வி கற்றவர். என்பதல்ல, உயர்சாதியைச் சேர்ந்தவரும் அல்ல. இவைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நற்குணங்கள் கொண்ட, மனசாட்சிக்குப் பயப்படக்கூடிய எவருமே சான்றோர் தான். சான்றோர் என்றால் நேர்மையாளர், வீரர் என்றும் பொருள் கொள்ளலாம். முக்கியமாக, சான்றோர் எவரையும் எதற்காகவும் பழிக்குப் பழி வாங்கித் துணியமாட்டார்கள். அவர்களிடத்தில் உண்மையான அன்பு மிளிரும். பொறுமை, நிதானம், பிறர் சொற்களுக்கு மதிப்பளித்தல், மனித மாண்பு, மன்னித்து ஏற்றல், பொறுத்துக் கொள்ளுதல், பிறர் நலன், சமுதாய அக்கறை ஆகிய நற்குணங்கள் வெள்ளமென பாய்ந்தோடும். இத்தகைய குணங்களை தாவீதிடமும் நாம் காண்கின்றோம். தன்னைக் கொல்லத் தேடிய சவுல் மன்னரை, பழிதீர்ப்பதற்கு இரண்டுமுறை வாய்ப்புகள் கிடைத்தும், அவர் ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்பதற்காக அவரை மன்னித்து விட்டுவிட்ட பெருந்தன்மையான மனிதர்தான் தாவீது. மேலும் சவுல் இறந்தபோது, தன் எதிரி ஒரேடியாக ஒழிந்தான் என்றெண்ணி மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் அவர் இறப்புக் குறித்து மிகுந்த மனவேதனை அடைந்தவர். இப்படியாக, சான்றோருக்குரிய நற்குணங்களை தாவீது அறிந்திருந்ததால், யாரெல்லம் சான்றோர், நேர்மையாளர், பேறுபெற்றோர் என்று அவரே எடுத்துக்காட்டுகிறார். நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார் (திபா 1:1-3).
இரண்டாவதாக, அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர் என்றும் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர். அநீதியாளர்களைப் புறப்பார்வை மட்டும் கொண்டவர்களாக நாம் கருதலாம். அப்படியென்றால் புறப்பார்வை மட்டும் கொண்டவர்கள் சான்றோராகக் கருதப்பட தகுதியற்றவர்கள் என்பது பொருளாகிறது. இவர்கள் அநீதியாளர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், அமைதிக்கு எதிராகக் கலகத்தை விளைவிப்பவர்களாகவும் கருதப்பட முடியும். அதனால்தான், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்; பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார் (திபா 1:4-5) என்று பொல்லாரைச் சாடுகின்றார் தாவீது.
‘கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு’ (குறள் 981) என்ற குறளில் ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் சான்றோருக்கு உரிய நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும் என்கின்றார் வள்ளுவர். மேலும் சான்றாண்மைக்குப் பல நற்குணங்கள் வேண்டும். இல்லையேல் ஐந்து நற்குணங்களாவது வேண்டும் என்றும், அவை எல்லோரிடத்தும் அன்பாயிருத்தல், பழி பாவங்களுக்கு அஞ்சி வாழ்தல், எவரையும் உற்ற உறவாய்க் கொள்ளுதல். இயன்றவரையில் எளியவர்க்குதவுதல், எப்போதும் உண்மையே பேசி மகிழ்தல் என்பன என்றும் சுட்டிக்காட்டுகின்றார் திருவள்ளுவர். ஆகவே, தாவீதின் வழியில் சான்றோருக்கு உரிய நற்குணங்களை கொண்டு நானிலம் போற்ற வாழ்வோம். இவ்வருளுக்காக இறைவனிடத்தில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்