தேடுதல்

புருண்டி ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Bonaventure Nahimana. புருண்டி ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Bonaventure Nahimana. 

குடும்பத்திற்கு முதலிடம் கொடுப்பதே முக்கிய நோக்கம்

தங்களைச் சுற்றியிருக்கும் ஏழைகளோடு தங்களுக்குள்ளதை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உயரிய குணத்தை உணர்ந்து புருண்டி கிறிஸ்தவக் குடும்பங்கள் செயல்படுகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

புருண்டி நாட்டில் 125 ஆண்டுகளுக்கு முன்னர் நற்செய்தி அறிவித்ததிலிருந்து குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே தலத்திருஅவையின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்றார் அந்நாட்டின் ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Bonaventure Nahimana.

கடந்த 125 ஆண்டுகளில் ஏறக்குறைய 300 பங்குதளங்களுடன் 8 மறைமாவட்டங்களைக் கொண்டு செயல்பட்டுவருவதாக உரைத்த பேராயர் நஹிமானா அவர்கள், கல்வி நிலையங்கள், நல ஆதரவு மையங்கள், இளையோருக்கான சந்திப்பு மையங்கள் என பல்வேறு வகைகளில் மக்களுக்கு சேவையாற்றிவரும் திருஅவையின் தூண்களாக துவக்கக் காலத்திலிருந்தே செயல்படுபவர்கள் குடும்பங்களே எனவும் தெரிவித்தார்.

திருஅவையின் முக்கிய இடமாகக் குடும்பங்கள் இருப்பதால் அங்கிருந்தே நற்செய்தி அறிவிப்பு, குடும்பங்களுக்குள்ளும் சுற்றியிருப்பவர்களுக்கும் இடம்பெறுகிறது என்ற பேராயர், தங்களைச் சுற்றியிருக்கும் ஏழைகளோடு தங்களுக்குள்ளதை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உயரிய குணத்தை உணர்ந்து கிறிஸ்தவக் குடும்பங்கள் செயல்படுகின்றன என்ற மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

போரால் நாட்டை விட்டு வெளியேறி தற்போது நாட்டிற்குள் திரும்பிக் கொண்டிருக்கும் புருண்டி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் கிறிஸ்தவக் குடும்பங்கள் முன்னணியில் உள்ளன என்பதையும் குறிப்பிட்டார் புருண்டி ஆயர் பேரவைத்தலைவர்.

தலத்திருஅவையின் நீதி மற்றும் அமைதி அவைகளின் வழியாக, மக்களின் உதவியுடன், போருக்குத் தீர்வுகாணும் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் கூறினார் பேராயர் நஹிமானா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2023, 15:00