தேடுதல்

சமாரியப் பெண்ணுடன் உரையாடும் இயேசு சமாரியப் பெண்ணுடன் உரையாடும் இயேசு  

தவக் காலம் 3-ஆம் ஞாயிறு : வேற்றுமைகளை வேரறுப்போம்!

வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவ சமுதாயம் பேண நம்மை அழைக்கிறார் இயேசு என்பதை உணர்வோம்.
ஞாயிறு சிந்தனை 11032023

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. விப 17: 3-7    II.  உரோ 5: 1-2, 5-8     III.  யோவா 4: 5-42)         

தவக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இரண்டு கருத்துக்களை மையப்படுத்துகின்றன. முதலாவதாக, முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் ‘கடவுளே நிலைவாழ்வு அளிக்கும் நீரூற்று’ என்று எடுத்துக்காட்டுகின்றன. மிகவும் கொடுமையான அடிமைத்தளையில் சிக்கித்தவித்த இஸ்ரயேல் மக்களை இரக்கமுள்ள இறைத்தந்தை பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு நடத்திச் செல்கின்றார். ஆனால், நன்றி மறந்து அவரைச் சோதிக்கும் விதமாக மோசேயை கடிந்துகொள்கின்றனர். எந்தளவுக்கு என்றால், தன்மீது இந்த மக்கள் கல்லெறிவார்களோ என்று மோசேயே பயம்கொள்ளும் அளவிற்கு அவர்களின் நன்றி மறந்த நடவடிக்கைள் இருந்தன என்பதைப் பார்க்கின்றோம். அவர்கள் இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர். மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை. இதனால் மக்கள் மோசேயிடம் வாதாடி, ‘குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்’ என்று கேட்டனர். மோசே அவர்களை நோக்கி, “நீங்கள் என்னோடு வாதாடுவது ஏன்? ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள்?” என்றார். அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, “நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், “இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!” என்று கதறினார் என்று இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இதன் பிறகு இறைத்தந்தை அவர்களுக்கு பாறையைப் பிளந்து தண்ணீர் கொடுக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில்  சமாரியப் பெண்ணிடம் “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்று கூறுவதன் வழியாக, இயேசு தன்னை வாழ்வளிக்கும் ஊற்றாக எடுத்துக்காட்டுகின்றார்.  

இரண்டாவது கருத்தாக நாம் காண்பது, இயேசு வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவ சமுதாயம் பேண விரும்புகின்றார் என்பதே. அதாவது, தான் எல்லாருக்குமான மெசியா என்றும், தான் யூதராக இருந்தாலும் வேறுபாடுகளைக் கடந்த கடவுளின் மெசியா என்பதை ஆணித்தரமாகச் சமாரியப் பெண்ணிடம் எடுத்துரைக்கின்றார். நமது தமிழ் சமூகத்தில் இருப்பது போன்று யூதச் சமுதாயத்தில் சாதிய வேற்றுமைகள் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ‘தூய்மை-தீட்டு’ என்ற வேற்றுமை நிலவியது. அதாவது, யூத இனத்திற்குள்ளேயே திருமணம் செய்து கொண்டவர்கள் அனைவரும் தூய்மையான யூதர்கள் என்றும், வேற்றினத்தாரோடு திருமணம் செய்துகொண்ட யூதர்கள் தீட்டானவர்கள் அதாவது சமாரியர்கள் என்றும் கருதி வெறுத்தொதுக்கப்பட்டனர். இதனை நாம் கலப்புத் திருமணம் என்று அழைக்கின்றோம். இந்தக் கலப்புத் திருமணம் என்பது பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேம் மீது படையெடுத்து வந்து அதனைத் தாக்கி இஸ்ரயேல் மக்களை அவனது நாட்டிற்குச் சிறைபிடித்துச் சென்றபோது தொடங்கி இருக்கலாம். அதுமட்டுமன்றி, அம்மன்னன் எருசலேமை விட்டு போவதற்கு முன்பு தன்னுடன் வந்த சிலரையும் அங்கு விட்டுச் சென்றதாகவும், இதுவும் யூதர்கள் கலப்புத் திருமணம் செய்துகொள்வதற்கு வழிவகுத்தது என்றும் வரலாற்று ஏடுகள் சுட்டுகின்றன.

இதன் காரணமாகவே, தங்களைத் தூய்மையான யூதர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் சமாரியர்களை மிகவும் கொடுமையாக நடத்தினர். எந்தளவுக்கு என்றால் அவர்கள் வாழும் ஊர்கள் வழியாக செல்வதே தீட்டு என்று கருதினர், அவர்களோடு பேசுவதையும் உரையாடுவதையும் உறவாடுவதையும் தவிர்த்தனர். இதனால்தான், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்" என்று இயேசு சமாரியப் பெண்ணிடம் கேட்டபோது, “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று பதில்மொழி தருகின்றார் அப்பெண். இந்த நீண்ட உரையாடலில் சமாரியப் பெண் இயேசுவை, முதலாவதாக சாதாரண மனிதராகவும் (“நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?”) இரண்டாவதாக, இறைவாக்கினராகவும் (“ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்) மூன்றாவதாக, மெசியாகவும் (அவர் மெசியாவாக இருப்பாரோ!) கண்டுகொள்கின்றார். நான்காவதாக, அங்கு வரும் சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு அவரை மீட்பராக (அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்”) அறிந்துகொள்கின்றனர். மேலும், சமாரியப் பெண்ணுடனான இந்த நீண்ட உரையாடலில் இயேசு, தன்னை ஒரு உண்மை மெசியாவாகவும், எல்லாருக்குமான மீட்பராகவும், அதாவது, அனைத்துலக மீட்பராகவும் வெளிப்படுத்துகின்றார்.

சமாரியப் பெண், கானானியப் பெண், நூற்றுவர் தலைவர், நோயாளர்கள், வரிதண்டுவோர், ஆகியோருடனான தனது அணுகுமுறைகள் வழியாக, தான் சமத்துவ சமுதாயம் பேணவே வந்தேன் என்பதை எடுத்துக்காட்டுகிறார் இயேசு. யூதர்களால்  வெறுத்தொதுக்கப்பட்ட சமாரியர், கடவுளின் பார்வையில் மிகவும் உயர்ந்தவர் என்பதை எடுத்துக்காட்டவே நல்ல சமாரியர்’ உவமையைக் கையாள்கிறார் இயேசு (காண்க லூக் 10:25-37). அவ்வாறே, ‘பத்துத் தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்’ என்னும் நிகழ்வில் (காண்க லூக் 17:11-19), குணம் பெற்ற பத்து பேரில், சமாரியர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி கூறுகின்றார். அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார். பின்பு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்று கூறும் இயேசுவின் வார்த்தைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. 'அந்நியராகிய உம்மைத் தவிர' என்ற இயேசுவின் வார்த்தைகள், தங்களை மட்டுமே தூய்மையானவர்களாகக் காட்டிக்கொண்ட யூதர்கள் சமாரியர்களை எந்தளவுக்குத் தீண்டத்தகாதவர்களாக அதாவது, அந்நியராகக் கருதினர் என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்வில், இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள் என்றே பதிவு செய்கின்றார் லூக்கா நற்செய்தியாளர். அப்படியென்றால், தொழுநோய் பீடித்த பிறகு யூதர் என்றும் சமாரியர் என்றும் பேதமில்லாமல் அந்தப் பத்து பெரும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மனிதர் வாழும்போது ஏற்படும் பேதங்கள், நோய்நொடிகளின் போதும், இயற்கைப் பேரழிவுகளின் போதும் இருப்பதில்லை என்பதை வரலாறும் பதிவு செய்கிறது. இதனைக் குறித்து சிந்திக்கும்போது அண்மையில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்படுத்திய பெரும் பாதிப்புகளும் பாடங்களும் நமது நினைவுக்கு வருகின்றன. அந்நேரத்தில், அதுகுறித்து காணொலிப் பதிவு ஒன்று இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தது. ஏற்கனவே துருக்கியும் சிறியவும் போராலும் பிரிவினையாலும் சிதிலமடைந்துள்ள நிலையில், இந்த நிலநடுங்கங்களில் இறந்தவர்கள் அனைவரும் ஒருசேர புதைக்கைப்பட்டனர் என்பதுதான். அதுவும் இறந்தவர்களின் உடல்கள் தன்னார்வப் பணியாளர்களால் சவக் குழியில் தூக்கி வீசப்படும் காட்சி நம்மை விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. ‘இவ்வளவுதானா நம் மனித வாழ்க்கை’ ‘இதற்காகவா இத்தனை பிரிவுகளையும் பிணக்குகளையும் சுமந்தலைந்திருக்கிறோம்’ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அடக்கமாகும் வரை நாம் அடக்கமாய் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்,  சாதி, மதம் இனம் மொழி ஆகிய பேதங்களை களைந்தெறிய வேண்டும், எதுவும் எதையும் விட உயர்ந்தது அல்ல, யாரும் யாரை விடவும் உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல,  மனிதர் என்பவர் மனிதம் கொண்டிருந்தால் மட்டுமே, அவர் உயர்ந்தவராக இருக்க முடியும், இல்லையேல் மண்ணுக்குப்  போகும்போது கண்ணீர் சிந்த கூட மற்றவர்கள் உடனிருக்க மாட்டார்கள் என்பவற்றை தான் துருக்கியும் சிரியாவும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நம் தமிழகத்தில் சாதிய வேற்றுமைகளை அழித்தொழிக்க முற்பட்டதில் பெரியாரின் பங்கு மிகவும் போற்றுதற்குரியது. அவருடைய வைக்கம் போராட்டம் இன்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் நிலவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். 1924-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 30-ஆம் தேதியன்று, கேரள காங்கிரஸ் ஆதரவில் தொடங்கிய இப்போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டுத் தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. அப்போது, இப்போராட்டத்தை வழிநடத்த வரும்படி காந்தி, இராஜாஜி, மற்றும், பெரியாருக்குக் கடிதம் எழுதினார் ஜார்ஜ் ஜோசப். முதல் இருவரும் கோரிக்கையை நிராகரித்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெரியார் கேரள அழைப்பை ஏற்று வைக்கம் சென்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அந்தஸ்திலேயே அவர் சென்றதால், தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக இராஜாஜியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். பெரியார் வைக்கம் சென்ற 1924-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13-ஆம் தேதி முதல், 1925-ஆம் ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி அவர் தலைமையில் வெற்றி விழா நிகழ்ந்தது வரையிலான காலத்தில் பெரியார் இப்போராட்டத்துக்குப் பெரிதும் பங்களித்தார்.  

ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா?  நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது மகிழ்ச்சி அடைகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகத் தெளிவாகப் பேசினார் பெரியார். அவருடைய முயற்சி, அதற்கான பயிற்சி, போராட்டத்தில் அவர் காட்டிய எழுச்சி இந்த மூன்றும் அவருக்கு வெற்றியை பெற்றுத்தந்தது என்று நாம் உறுதியாகக் கூறமுடியும். மேலும் பெண் உரிமைக்காகவும் பெரியார் தனது இறுதிநாள்வரை போராடினார். அவர் வலியுறுத்திய பெண் உரிமைகள்தாம் இன்றைக்கு இந்தியாவில் பெண்களுக்கான கல்வி, பெண் சமத்துவம், வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவை கிடைப்பதற்கான அடித்தளமாக இருந்திருக்கின்றது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

"எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும் பாடும் பாடல் கூ கூ, எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு. ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா? தேசம் எது பார்த்துவிட்டு மண்ணில் மழை வருமா? உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே" என்று கவிஞர் பழனி பாரதி எழுதுகின்றார். நாம் அனைவரும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகள், அவர் எல்லாருக்கும் சொந்தமானவர், அவரது பார்வையில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது, அவர் எல்லாரையும் மீட்பதற்காகத் தன் மகனை அனுப்பியவர், ஆகவே,  இவ்வுலக வாழ்வு நிரந்தரமில்லை, வான்வீடுதான் நமக்கு என்றும் நிரந்தரம். அதுவே நமக்கு நிலைவாழ்வு அருளும் இடம் என்பதை எடுத்துக்காட்டி வேற்றுமைகளை வேரறுத்து சமத்துவ சமுதாயம் பேண நம்மை அழைக்கிறார் இயேசு என்பதை உணர்வோம். நிலையற்ற இவ்வுலகில் நிலையான இறைவனைப் பற்றிக்கொண்டு வாழ்வோம். அதற்கான இறையருளை இறைவனிடம் இந்நாளில் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2023, 12:51