நேர்காணல் – நீதிமானான தூய யோசேப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
கற்பின் காவலனாய், திருக்குடும்பத்தின் பாதுகாவலராய், கல்விக்கும் உழைப்பிற்கும் அரணாய் அன்னைமரியின் கணவராய், அன்பர் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாய் திகழ்பவர் புனித யோசேப்பு. இத்தகைய சிறப்பு மிகுந்த யோசேப்பின் திருநாளினை மார்ச் மாதம் 19 ஆம் நாள் திருஅவைக் கொண்டாடி சிறப்பிக்க இருக்கின்றது.
உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல்
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண்மலர் பூத்தமையால்
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே. என்னும் தேம்பாவணி பாடல்கள் தூய யோசேப்பின் வாழ்வைப் பற்றி எடுத்துரைக்கின்றன. "துறவறம் கடைப்பிடிக்க எண்ணிய யோசேப்பு, கடவுளின் திட்டப்படி மரியாவை மணக்க வேண்டிய நிலை பற்றிய எண்ணத்தில் ஆழ்ந்திருந்த பொழுதே அவர் உயர்த்திப்பிடித்திருந்த கோலில் தேனும் மணமும் பொழியும் அழகிய இதழ் விரியும் செழுமையான வெண்ணிற லீலி மலர்கள் பூத்தமையால் பரவுகின்ற வாசனை எருசலேம் கோவில் முழுவதும் நிறைந்தது. என்று எடுத்துரைக்கின்றார் வீரமாமுனிவர். அன்று மணந்த தூய யோசேப்பின் லீலிமலர் இன்று வரை அவரது மறைந்த வாழ்வாலும், செயலாலும் நற்பண்புகளாக மணம் வீசுகின்றது. இத்தகைய நற்குணங்கள் மிக்க தூய யோசேப்பின் திருவிழா பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி கிரகோரி. வேலூர் மறைமாவட்டம் பெருமணம் பங்கில் பிறந்த அருள்பணி கிரகோரி அவர்கள், அமலமரி தியாகிகள் சபையைச் சார்ந்தவர். உரோமையில் உள்ள இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் அறநெறி இறையியலில் முதுகலைப் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் பெற்றவர். சென்னையில் உள்ள திரு இருதயக் கல்லூரியிலும் பூனாவில் உள்ள ஞான தீபத்திலும் அறநெறி இறையியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். அமலமரி தியாகிகள் சபையின் குரு மாணவர்களின் பயிற்சியாளராகவும், மாநில ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது உரோமையில் OMI சபை தலைமையக, அனைத்துலக அருள்பணித்துவ மாணவர்கள் பயிலும் இல்லத்தின் அதிபராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி கொண்டிருக்கின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்