தேடுதல்

ஆசிய ஆயர் பேரவை - பாங்காங் (கோப்புப்படம்) ஆசிய ஆயர் பேரவை - பாங்காங் (கோப்புப்படம்) 

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஆசியத் திருஅவை

கலந்துரையாடல்கள், அமைதியைக் கட்டியெழுப்புதல், ஒப்புரவு, இணக்க வாழ்வு போன்ற துறைகளில் ஆசியத் திருஅவையின் செயல்பாடுகள் குறிப்பிடும்படியானவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆசியக் கண்டத்தில் சிறுபான்மையாக இருந்தாலும், கல்வி, நலத்துறை, சமுதாயத் திட்டங்கள் போன்றவைகள் வழியாக ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே தலத்திருஅவைகள் சிறப்புப் பங்காற்றி வருவதாக அக்கண்டத்தின் ஒன்றிணைந்த திருஅவை ஏடு உரைக்கிறது.

திருஅவை மக்களின் ஒருங்கிணந்த பயணம் குறித்த உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தின் ஒரு பகுதியாக  தாய்லாந்தின் பாங்காக்கில் கூடி விவாதித்த ஆசிய ஆயர்கள் வெளியிட்ட இறுதி அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.

17 ஆயர் பேரவைகள், இரு கீழை வழிபாட்டுமுறை ஆயர் மன்றங்கள் இணைந்து கடந்த மாதம் பிப்ரவரி 24 முதல் 26 வரை தாய்லாந்தில் கூடி விவாதித்ததன் இறுதி அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.  

460 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஆசியக் கண்டத்தில் 3.31 விழுக்காட்டினரே கத்தோலிக்கர்களாக இருக்கின்றபோதிலும், ஆசியக் கண்டத்தில் பல்வேறு சமுதாய முன்னேற்றத் துறைகளில் தலத்திருஅவைகள் ஆற்றிவரும் பணி மிகப்பெரிய அளவில் உள்ளன என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் உரைத்துள்ளனர்.

பல்வேறு மத நம்பிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஆசியாவில் கலந்துரையாடல்கள், அமைதியைக் கட்டியெழுப்புதல், ஒப்புரவு, இணக்க வாழ்வு போன்ற துறைகளில் கத்தோலிக்க திருஅவையின் செயல்பாடுகள் குறிப்பிடும்படியானவை என்பதை எடுத்துரைக்கும் இவ்வேடு, திருஅவையில் பொதுநிலையினரின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

ஆசியத் திருஅவைகளில், கத்தோலிக்கர்களை சீரிய பயிற்சி வழி உருவாக்குதல், உள்ளடக்கமும் இன்முக வரவேற்பும், மறைப்பணிச் சீடரகள், பொறுப்புடைமையும் வெளிப்படைத்தன்மையும், இறைவேண்டல், வழிபாடு, சுற்றுச்சூழல் என பல்வேறு தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் கருத்துக்களை இவ்வேட்டில் வடித்துள்ளனர் ஆசிய ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2023, 14:30