இந்தியாவில் துயருறும் கிறிஸ்தவம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மத்தியப் பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்திலுள்ள புனித மரியன்னை பள்ளியின் முதல்வர் R B Dionysius அவர்கள், அப்பள்ளியில் நடத்தப்பட்ட இந்தியக் குழந்தைகள் உரிமை ஆணையத்தின் சோதனைக்குப் பிறகு கைதுசெய்யப்பட்ட நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறக்கு நீதிமன்றத்தில் பிணைய விடுதலை பெற்றுள்ளார்.
அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பணியில் இருக்கும் ஒரு பொது ஊழியருக்கு எதிராகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், மார்ச் 28, இச்செவ்வாயன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
குவாலியர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அருள்பணியாளர் R B Dionysius அவர்கள், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதாக, இப்பள்ளியின் வளர்ச்சி குறித்து நன்கு அறிந்த பொதுமக்கள் பலரும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கை அருள்பணியாளரையும் அந்தப் பள்ளியையும் களங்கப்படுத்துவதற்கான நன்கு திட்டமிடப்பட்ட செயலின் ஒரு பகுதி என்றும், இப்பள்ளி உள்ளூரில் நற்பெயரைப் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ள இம்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவர், இப்பள்ளியில் ஏறத்தாழ 1,800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றும், ஆனால், பெற்றோரோ அல்லது மாணவரோ யாரும் இதுவரை ஒரு புகார் கூடத் தெரிவித்ததில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குவாலியில் வாழும் 6,098,000 மக்களில், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் 23 விழுக்காடாக இருக்கும் இங்குள்ள கிறிஸ்தவப் பள்ளிகளை மட்டுமே மாநில குழந்தைகள் ஆணையமும், மாவட்ட அதிகாரிகளும் குறிவைப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார் அவ்வருள்பணியாளர்.
பள்ளியில் மதம் சம்மந்தமான பொருள்களை வைத்திருப்பதைக் கூட குழந்தை உரிமை ஆணையம் ஒரு குற்றமாகக் கருதுகிறது என்றும், அதன் உறுப்பினர்கள் பள்ளிகளுக்கு எதிராக மதமாற்றம் செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார் அவ்வருள்பணியாளர்.
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரான நிவேதிதா சர்மா தலைமையில், அரசு அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து மார்ச் 25, இச்சனிக்கிழமையன்று, அருள்பணியாளர் R B Dionysius அவர்கள் கைது செய்யப்பட்டார். (UCA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்