திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தையர் 13ஆம், 14 ஆம் கிளமென்ட்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கண்பார்வை இழந்தும் காரியத்தில் கருத்தாய் இருந்து, 10 ஆண்டுகள் திருஅவையை செவ்வனே வழிநடத்திய திருத்தந்தை 12ஆம் கிளமென்ட் குறித்தும், அமைதியின் திருத்தந்தையாக இருந்து, தன் அணுகுமுறையால் எதிரிகளையும் கவர்ந்த திருத்தந்தை 14ம் பெனடிக்ட் குறித்தும் கடந்த வாரம் கண்டோம். இவர்களைத் தொடர்ந்து பொறுப்பேற்றவர் திருத்தந்தை 13ஆம் கிளமென்ட். 1693ஆம் ஆண்டு இத்தாலியின் வெனிஸ் நகரைச் சேர்ந்த செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் Carlo della Torre Rezzonico என்ற இயற்பெயருடன் பிறந்த இத்திருத்தந்தை, 1758ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி, திருஅவையின் (இவ்வுலக) தலைமைப் பதவிக்கு கர்தினால்களால் தேர்வு செய்யப்பட்டார். இவர் பதவிக்கு வந்த காலம் இயேசு சபையினர் பல்வேறு அரசுகளிடம் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வந்த காலம். இவர் இயேசு சபையினரின் நெருங்கிய நண்பராக இருந்தமையால், இவரும் சில முடிவுகளை எடுப்பதில் சிரமப்பட்டார். ஐரோப்பிய நாடுகளால் ஆக்ரமிக்கப்பட்ட நாடுகளில், பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இயேசு சபையினரை வெறுத்தனர் ஐரோப்பிய அரசுத்தலைவர்கள், குறிப்பாக இஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் பிரான்ஸ் தலைவர்கள். போர்த்துக்கல் நாட்டில் இயேசு சபையினர் மன்னரைக் கொலை செய்ய சதி தீட்டுவதாக பிரதம மந்திரியே குற்றஞ்சாட்டினார். அதே வேளை பிரான்ஸ் மன்னரோ, இயேசு சபையினர் செய்யாத குற்றங்களைக் கூறி அவர்களை வெறுத்தார். ஒருவர் ஸ்பெயின் மன்னர் மூன்றாம் சார்லஸிடம் சென்று, யேசு சபையினர் அவரை, மன்னருக்கு திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தை என கூறிவருவதாக பொய் சொல்லி இயேசு சபையினர் மீது வெறுப்பை மூட்டினார். இவ்வாறு ஐரோப்பா முழுவதும் இயேசு சபையினர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துவந்த காலம் அது.
ஆனால் இயேசு சபையினரோ, எளிமையான, புனித வாழ்வை மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்று போதித்தும், கற்பித்தும் வந்தனர். அவர்கள் சொத்தும் சேர்க்கவில்லை, திருஅவையில் பெரும் பதவிகளையும் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை, திருஅவையின் அருள்பணியாளர்களுள் அதிகம் கல்வி கற்றவர்களாக இருந்தது மட்டுமல்ல, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் என கல்விக் கூடங்களைத் திறந்து பணியாற்றி வந்தனர். ஆனால், ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இயேசு சபையினரை ஒழிக்கவேண்டும் என திட்டமிட்டனர். இயேசு சபையினருக்கு எதிரான நடவடிக்கைகளை முதலில் எடுத்தது போர்த்துக்கல் நாடே. பல அருள்பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். மூவர் தூக்கிலிடப்பட்டனர், இயேசு சபையினரின் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு பலர் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸிலிருந்து இயேசு சபையினர் வெளியேற்றப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டனர். இஸ்பெயின் நாட்டில் புனித இஞ்ஞாசியாரின் வழியைப் பின்பற்றிய அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு மொத்தமாக 6000 இயேசு சபையினர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் செய்தும் ஐரோப்பியத் தலைவர்கள் திருப்தியடையவில்லை. திருத்தந்தை 13ஆம் கிளமென்டிடம் இயேசு சபையை முற்றிலுமாக ஒடுக்கவேண்டும் என விண்ணப்பித்தனர். ஆனால் திருத்தந்தை அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. இதனால் கோபமுற்ற ஐரோப்பிய மன்னர்கள் திருத்தந்தை 13ம் கிளமென்டை பணிய வைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தாலியை நோக்கி படையெடுத்து வந்தனர். இயேசு சபையை திருத்தந்தை முற்றிலுமாகத் தடை செய்யாவிடில் பிரான்ஸ், இஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகள் திருஅவையிலிருந்து விலகி தங்களுக்கென தனித் திருஅவையை உருவாக்கிக் கொள்ளும் என அறிவித்தனர். திருத்தந்தையால் எதுவும் செய்ய முடியவில்லை. நல்லப் பணிகளை திறம்பட ஆற்றிவந்த இயேசு சபையினரைக் கைவிட அவர் தயாராக இல்லை. என்ன செய்வது என அவரும் குழம்பிப்போய் மனவேதனையுற்ற காலத்தில் மரணம் அவரைத் தேடிவந்தது. ஆம், 1769ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாமலேயே உயிரிழந்தார் திருத்தந்தை 13ஆம் கிளமென்ட்.
இப்படி ஒரு பெரும் பிரச்சனை ஐரோப்பாவை உலுக்கிக் கொண்டிருந்த காலத்தில், அடுத்து யாரை தேர்வு செய்வது என கர்தினால்களுக்குள் குழப்பம். இதனால் தேர்தல் கூட்டம் 3 மாதங்கள் நீடித்தது. 1769ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி பிரான்சிஸ்கன் சபையின் கர்தினால் Lorenzo Ganganelliயை தேர்வுச் செய்தனர் கர்தினால்கள். அதே ஆண்டு ஜூன்மாதம் 4ஆம் தேதி 14ஆம் கிளமென்ட் என்ற பெயருடன் பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய திருத்தந்தை. இயேசு சபையினர் குறித்த பிரச்சனை மீண்டும் தலைதூக்கியது. இஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதிகள் திருத்தந்தையை அணுகி, இயேசு சபையினரை தடை செய்யும்படி வேண்டினர். ஆனால் புதிய திருத்தந்தையும் இயேசு சபையினரை தண்டிக்க விரும்பவில்லை. ஆனால் அவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏற்கனவே இங்கிலாந்தும், ஜெர்மனியின் ஒரு பகுதியும் திருஅவையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ள நிலையில், கத்தோலிக்க நாடுகளான பிரான்ஸ், இஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லையும் இழக்க விரும்பவில்லை திருத்தந்தை 14ம் கிளமென்ட். இயேசு சபையினர் குற்றமற்றவர்கள் என அவர் தெரிந்திருந்ததால், நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இருப்பினும், தன் மனதை கல்லாக்கிக் கொண்டு இயேசு சபையை தடை செய்தார் திருத்தந்தை(1773). இயேசு சபையினரை அவர் குற்றம் சாட்டவில்லை. மாறாக, திருஅவையின் ஒன்றிப்பை மனதிற்கொண்டு இம்முடிவை மனவருத்தத்துடன் எடுப்பதாக அறிவித்தார். அவ்வேளையில் இயேசு சபையில் 26,000 அங்கத்தினர்கள் இருந்தனர். ஆனால் எவ்வித எதிர்ப்புமின்றி திருத்தந்தையின் கட்டளைக்கு அவர்கள் பணிந்தனர். திருத்தந்தையின் நிலையையும் அவர்கள் புரிந்திருந்தனர். இயேசு சபையினரின் அதிபரை சிறைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்தபோது அவர் சிரித்துக்கொண்டே உடன் சென்றார். இதில் வேடிக்கை என்னவென்றால், கத்தோலிக்க நாடுகள் இயேசு சபையினரை எதிர்த்த அதேவேளை, கத்தோலிக்கரல்லாத நாடுகளான, அப்போதைய Prussiaவும் (இப்போதைய ஜெர்மனியின் ஒரு பகுதி) இரஷ்யாவும், இயேசு சபையினருக்காக திருத்தந்தையை எதிர்த்ததுடன், இயேசு சபையினரை தங்கள் மண்ணில் காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்தனர். அப்போது Prussiaவை Frederickம் இரஷ்யாவை காத்தரீனும் ஆட்சிச் செய்துவந்தனர். இயேசுசபையினர் குறித்தத் தீர்மானத்தில் தான் தவறு செய்துவிட்டதாகவே மனம் வருந்தினார் திருத்தந்தை 14ஆம் கிளமென்ட். அதேவேளையில், இயேசு சபையினர் தடைசெய்யப்பட்ட 14 மாதங்களில், அதாவது 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இறைபதம் அடைந்தார் பாப்பிறை 14ஆம் கிளமென்ட்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்