இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் மணிலா தலத்திருஅவை
மெரினா ராஜ் - வத்திக்கான்
மணிலாவில் ஏறக்குறைய 300 இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் அரசாங்கத்தின் உதவி கிடைக்காத பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கத்தோலிக்க தலத்திருஅவை நகரின் பள்ளிகளில் குறைந்த விலை உணவு சேவையை அமைத்து உதவிவருகின்றது.
அண்மை நாட்களில், MetroManila எனப்படும் பெருநகர் மணிலாவின் பொதுப்பணித் துறையானது, கலூக்கன் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டுக் கட்டிடங்களை இடித்து நெடுஞ்சாலை அமைப்பதற்கு வழிவகை செய்யத் தொடங்கியுள்ள நிலையில் அவர்களில் 74 பேர் மட்டுமே தேசிய வீட்டு வசதி ஆணையத்தின் (NHA) நிதி உதவி மற்றும் வீட்டு உதவிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும், மற்றவர்கள், அத்தகைய ஆதரவைப் பெறத் தகுதியற்றவர்கள், என்றும் மணிலா நகர அரசு கூறியுள்ளது.
மணிலா மறைமாவட்டத்தின் சமூக நடவடிக்கை, நீதி மற்றும் அமைதிக்கான செயலகம், நகர்ப்புற ஏழைகளின் பிரச்சனையை எடுத்துக்காட்டி, அனைத்து கத்தோலிக்க மக்களையும் அரசு அதிகாரிகளையும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்க அழைப்புவிடுத்துள்ளதுடன், குறுகலான பகுதிகள் மிகவும் ஏழையான மக்களின் சமையலறை, குளியலறை, பொழுதுபோக்கு இடம், மற்றும் விளையாட்டு மைதானங்களாகவும் செயல்படுவதால், தீ அல்லது மோசமான வானிலை ஏற்பட்டால், விரைவாக பாதிக்கப்படுகின்றன என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், உதவிக்காக அழைக்கும் பாதிக்கப்பட்ட மக்களாக அவர்களைக் கருதி, அன்புடனும், கருணையுடனும் அவர்களை வரவேற்க வேண்டுமென்று கூறியுள்ள தலத்திருஅவை அமைப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகரின் பள்ளிகளில் குறைந்த விலை உணவு சேவையை அமைத்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கானப் பொருள்களை வழங்கியும் உதவி வருகின்றது.
சிறிய அல்லது மிகப் பெரிய சேரிப்பகுதிகளில் வாழும் நகர்ப்புற ஏழைகள் நகரின் எல்லை முழுவதும் பரவி, பாலங்களின் கீழும், ஓடைகள், ஆற்றங்கரைகள் மற்றும் பயிரிடப்படாத நிலத்திலும் குடிசைவீடுகள் கட்டி வாழ்கின்றனர். நகர் தரவுகளின்படி, பெருநகர் மணிலாவில், மொத்த மக்கள் தொகையான 1,30,00,000 பேரில், 50 இலட்சம் மக்கள், சட்டவிரோதமான முறையில் சீரற்ற முறையில் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர்.
சமூகவியல் ஆய்வுகளின்படி, மணிலாவின் புறநகர்ப் பகுதிகளில், நகர்ப்புற ஏழை குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வருமானமின்றி, பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் பிச்சையெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில் பெரியவர்கள் முறைசாரா தொழிலாளர்களாக தெருவோரக்கடைகள், ஆபத்தான தினசரி வேலைகளைச் செய்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்