பிலிப்பீன்சில் Marillac விழாவில் தெருவோரக் குழந்தைகளுக்கு உணவு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சமூகப் பணியாளர்களின் பாதுகாவலரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புனித Louise de Marillac பெருவிழாவின்போது உணவு மற்றும் நிவாரணப் பொருள்களைப் பெற்றுச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான தெருவோரக் குழந்தைகள் மார்ச் 15 இப்புதனன்று, பிலிப்பீன்சில் குவிந்தனர் என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புனித Louise தொண்டு நிறுவனத்தின் அழைப்பைப் பெற்ற இக்குழந்தைகள் அனைவரும் பிலிப்பீன்ஸ் நாடு முழுவதிலும் 1,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அனுப்பப்பட்டு இவ்விருந்துக்கு அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த பட்சம் ஒரு சில வாரங்களுக்குத் தேவைப்படும் அளவிற்கு அரிசி மற்றும் மீன்கள் இவ்விருந்திபோது தனக்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது என்றும், இது போதும் என்று கூறக்கூடிய அளவிற்குத் தனக்குத் திருப்தியை அளிக்கிறது என்றும் தலைநகர் மணிலாவைச் சேர்ந்த தெருவோரக் குழந்தையான ஜோவன் இஸ்ரேல் யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறினான்.
முதலில் வாழைப்பழக் கடையில் உதவியாளராகப் பணிபுரிந்தேன் என்றும், ஆனால் நான் தெருவோரக் குழந்தை என்பதையும், எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதையும் தெரிந்துகொண்ட அக்கடையின் உரிமையாளர், என்னை மாலை வரை குறைந்த சம்பளத்துடன் வேலை செய்யச் சொன்னார் என்றும் தனது வேதனையை கவலையுடன் அச்செய்தி நிறுவனத்திடம் எடுத்துரைத்தான்.
ஊடக அறிக்கைகளின்படி, 11 கோடி மக்கள்தொகை கொண்ட பிலிப்பீன்ஸ் நாட்டில் 45 இலட்சம் வீடற்ற மக்களில், 2,50,000 க்கும் அதிகமானோர் வீடற்ற தெருவோரக் குழந்தைகளாக உள்ளனர். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்