நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறாருக்கு உதவும் அருள்சகோதரிகள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இனிப்புக்களின் வழியாக அன்பைப் பகிர்ந்து தேவையில் இருக்கும் சிறாருக்கு உதவுவதாகவும், அர்த்தமுள்ள இத்தொண்டுப் பணியின் காரணமறிந்து ஏராளமான தன்னார்வலர்கள் உதவ முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி Maria Kim Min-ji.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் உள்ள 65 இலட்சம் சிறாருக்கு உதவும் பொருட்டு இனிப்புகளை விற்பனை செய்து நிதி திரட்டும் பணியினை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் கொரியாவைச் சார்ந்த சலேசிய சபை அருள்சகோதரி Kim Min-ji.
தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள சலேசிய அருள்சகோதரிகள், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள சிறாருக்கு உதவ நிதிதிரட்டும் ஒரு பகுதியாக தெருவில் இனிப்புகளை விற்கத் தொடங்கியுள்ளனர். சியோலின் சிங்கில்-டாங்கில் உள்ள சலேசிய கல்வி மற்றும் ஆன்மீக மையம் மார்ச் மாத தொடக்கத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றான ஜப்பானிய மீன் வடிவ உணவான தையாகியின் விற்பனையைத் தொடங்கியது.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடமேற்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 6 அன்று ஏற்பட்டு ஏராளமான இறப்புக்களையும், பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறாருக்கு உதவும் பொருட்டு இந்த நிதி திரட்டும் பணியினை கொரிய நாட்டு சலேசிய சபை அருள்சகோதரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானிய இனிப்பான தையாகி என்னும் மீன் வடிவ இனிப்புக்களைத் தயாரித்து அதைத் தெருக்களில் விற்பனை செய்து நிதி சேகரிக்கும் இப்பணியில் அருள்சகோதரிகளோடு ஏராளமான தன்னார்வலர்களும் பங்கேற்கின்றனர்.
வரலாற்றின் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படும் இந்நிலநடுக்கத்தினால் 1,25,000க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர், மேலும், 24 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கி மற்றும் சிரியாவில் ஏறக்குறைய 8,50,000 சிறார் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனமான UNICEF தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே, மோதல்கள் காரணமாக பல இலட்சம் சிறார் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ucan)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்