யோசேப்பின் குழந்தைகளுக்கு யாக்கோபு ஆசி வழங்குதல் யோசேப்பின் குழந்தைகளுக்கு யாக்கோபு ஆசி வழங்குதல் 

தடம் தந்த தகைமை - யோசேப்பின் குழந்தைகளுக்கு ஆசி வழங்குதல்

இஸ்ரயேல் தம் கைகளைக் குறுக்காக நீட்டி வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும் இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

“உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்” என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

யாக்கோபு, யோசேப்பின் புதல்வர்களைக் கண்டு, “அவர்களை என் அருகில் கொண்டு வா; நான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன்” என்றார். ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக, அவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார். யோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன் அவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார். பின்னர், யோசேப்பு அவர் மடியிலிருந்த தம் பிள்ளைகளை இறக்கிவிட்டு, தரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார். பின்பு, யோசேப்பு எப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும், மனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும் இருக்கும்படி அழைத்து வந்து இருவரையும் அவர் அருகில் நிறுத்தினார். ஆனால், இஸ்ரயேல் தம் கைகளைக் குறுக்காக நீட்டி வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும் இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.

தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை மனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார். யோசேப்பு தம் தந்தையை நோக்கி, “தந்தையே! இது சரியன்று; இவன் தான் தலைமகன். இவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்” என்றார். ஆனால், அவர் தந்தை மறுத்து, “தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான். ஆனால், இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான். அவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்” என்று கூறினார். இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.

யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2023, 13:56