தேடுதல்

தவக்கால செயல்பாடுகள் தவக்கால செயல்பாடுகள் 

நேர்காணல் – பயன்தரும் தவக்கால பக்தி முயற்சிகள்

தவக்கால பக்தி முயற்சிகள் கிபி 303 ஆம் ஆண்டில் உரோமையை ஆண்டு வந்த கான்ஸ்டண்டைன் என்ற பேரரசரின் தாயான அரசி ஹெலன் என்பவரால் முதன் முதலில் கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடின உழைப்பின்றி இன்பமாக வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள், துன்பங்களைக் கண்டு விலகி ஓடுகின்றனர். ஒன்றை இழந்து தான் மற்றொன்றைப் பெற முடியும் என்பது உலக வழக்கு. இதை அறியாதவர்கள், அதன் பயனை உணர்வதில்லை. விதைகள் தன்னை பிளந்தால் தான் விருட்சங்கள் எழ முடியும். மெழுகு தன்னை உருக்கினால் தான் மேன்மையான ஒளியைத்தர முடியும். இப்படி எல்லாமே தன் இயல்பை, விருப்பை இழந்தால் தான் சிறப்பான ஒன்றைப் பெற முடியும். இறைமகன் என்னும் இயல்பை நமக்காகத் துறந்து மனித உரு ஏற்று மரித்ததால் உயிர்ப்பின் இறைவனாக நம்மோடு என்றும் வாழ்கின்றார் இயேசு. இத்தகைய இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றை தியானித்து நமது பழைய பாவ இயல்புகளைக் களைந்து புதிய வாழ்விற்குள் நம்மை உட்புகுத்த தயாரிக்கும் காலமாம் இத்தவக்காலத்தில் சில பல தவக்கால பக்தி முயற்சிகளைச் செய்து வாழ அழைக்கப்படுகின்றோம். நமது மனித இயல்பில் புரியும் பாவச்செயல்களைக் களைந்து புனிதத்தில் நம்மை நாம் உருமாற்ற வலியுறுத்தப்படுகின்றோம்.   

இத்தவக்கால பக்தி முயற்சிகள் கிபி 303 ஆம் ஆண்டில் உரோமையை ஆண்டு வந்த கான்ஸ்டண்டைன் என்ற பேரரசரின் தாயான அரசி ஹெலன் என்பவரால் முதன் முதலில் கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. புனித பூமியான எருசலேம் திருப்பயணத்தின் போது இயேசு சுமந்து சென்ற சிலுவையைக் கண்டெடுத்து அதனை ஓர் இடத்தில் நிறுவி வணக்கம் செலுத்த வழிவகை செய்தார். அதன்பின் படிப்படியாக இயேசு நடந்து சென்ற பாதைகள், ,அதன் நிலைகள் சந்தித்த நபர்கள், என ஒவ்வொன்றையும் மக்கள் தியானித்து வழிபடத்துவங்கினர். இது போன்று இயேசு தனது 33 ஆண்டு கால வாழ்வில் செய்த நற்செயல்கள், போதனைகள் புதுமைகள் போன்றவை வலியுறுத்தும் விழுமியங்களை இத்தவக்காலத்தில் செய்ய மக்கள் முயற்சித்தனர்.

அன்று முதல் இன்று வரை பல்வேறு வடிவங்களில் இத்தவக்கால பக்தி முயற்சிகள் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய பயன்தரும் தவக்கால பக்தி முயற்சிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்பவர் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் மறைப்பணியாளர் சபையைச் சார்ந்த அருள்பணி ரமேஷ் ஜார்ஜ். வேலூர் மறைமாவட்டம் உதயேந்திரத்தை சொந்த ஊராகக் கொண்ட அருள்பணி ரமேஷ் ஜார்ஜ் அவர்கள் 2011 அன்று அருள்பொழிவு பெற்று Bastora இளம்குருமாணவர் இல்லத்தில் பணியாற்றியுள்ளார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டத்தையும், பெங்களூரில் உள்ள பாப்பிறைக் குருத்துவக் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு முன்னதான உயர்படிப்பை விவிலிய இறையியலிலும், முடித்தவர்.  சபையின் ஜோதி தர்ஷன் இளம்குருமாணவர் இல்லத்தின் உதவி அதிபர் தந்தை, அருள்பணியாளர்களுக்கான பொறுப்பாளர், மேய்ப்புப்பணியாளர் என் பல பொறுப்புக்களை திறமையாக செய்தவர். தற்போது மும்பையில் உள்ள koperkhairane, என்னுமிடத்தில் பங்குப்பணியாளராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். சிறந்த சிந்தனையாளர் கருத்தாளமிக்கவர். தனது மறையுரைக் கருத்துக்களை வலைதளங்களின் வழியாக பகிர்ந்து நற்செய்திப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.  

பயன் தரும் தவக்கால பக்தி முயற்சிகள் - அருள்பணி ரமேஷ் ஜார்ஜ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2023, 13:00