கின்ஷாசாவிற்கு அருகில் மாணவர்களுக்கு உணவோடு கூடிய கல்வி
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் கின்சாசாவின் புறநகர்ப் பகுதியில் மாணவர்களுக்கு உணவோடு கூடிய கல்வி அளிக்கப்பட்டு வருவதாகவும் கத்தோலிக்க அருள்சகோதரிகள் மற்றும் இத்தாலிய ஆயர்களின் நிதி உதவியுடன் முறையாக இது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் Luca Bondi.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள கின்ஷாசாவின் புறநகர்ப் பகுதியான மிகோண்டோ, பாலைவனத்தில் ஒரு சோலைவனமாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் இயங்கும் இக்கல்வி அமைப்பானது மாணவர்களுக்கு பள்ளிப்படிப்போடு ஊட்டச்சத்துக்களையும் வழங்கி உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார் அமைதியின் விதைகள் என்னும் அமைப்பின் தலைவர் Luca Bondi.
கடுமையான நிதிச் சிரமங்களைத் தாங்கும் நூற்றுக்கணக்கான காங்கோ குடும்பங்களுக்கு ஒரு புள்ளியாக மாறியுள்ள இவ்வமைப்பு, கற்றல் மற்றும் சத்துணவு வழங்கும் மையமாகத் திகழ்கின்றது என்றும் எடுத்துரைத்த Bondi, 16 வயதுக்குட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் இடைநிலைக் கல்வியை முடிக்க வகுப்புகளுக்குச் செல்கிறார்கள் என்றும், பலர் பல்கலைக்கழகத்தில் சேரும் நம்பிக்கையில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
கல்வி மற்றும் ஊட்டச்சத்து
மாணவர்களுக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட கல்விப் பாடத்திட்டத்தையும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முழு உணவையும், சுகாதாரம், மாண்பு, மரியாதை பற்றிய படிப்புகளையும் இவ்வமைப்பு வழங்குகிறது என்று கூறியுள்ள Bondi, காலை உணவு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்" என்றும் நாளினை சிறந்த முறையில் தொடங்கவும், தெளிவாக சிந்திக்கும் திறனையும் இவ்வுணவு வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கடினமான பொருளாதார நிலை
மிக்கோண்டோவில், அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் உள்ள வசதிகள் இளம் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை என்று கூறியுள்ள Bondi, பெரும்பாலான குடும்பங்கள் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும், சில பெற்றோர்கள் எந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், பெரும்பாலும் பெண்களைக் காட்டிலும் ஆண்களைக் கல்விக்காக அனுப்பத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
அமைதியின் விதைகள் என்று அழைக்கப்படும் ஒரு இத்தாலிய இலாப நோக்கற்ற இவ்வமைப்பு, இயேசுவின் பாடுகள் மற்றும் அன்னை மரியாவின் துயரத்தின் புதல்விகள் என்று அழைக்கப்படும் சபை சகோதரிகளுடன் இணைந்து கின்ஷாசாவை தளமாகக் கொண்டு இயங்குகின்றது
வாழ்க்கைக்கான கல்வி
கின்சாசா அருள்சகோதரிகள் மற்றும் மறைப்பணியாளர்களால் 2007 ஆம் ஆண்டு முதல், 5 முதல் 10 வயது வரையிலான சிறாருக்கு தொடக்கப் பள்ளிக் கல்வி, உணவு மற்றும் தங்குமிடம் கொடுக்கப்பட்டு வளமான வாழ்க்கைக்கல்வி அளிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்