ஈராக் போர் சூழல்களில் திருஅவை எப்போதும் மக்களுடன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
குண்டுவீச்சுக்கள் மற்றும் தற்கொலைப் படைகளின் தாக்குதல்கள் ஈராக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அங்கு திருப்பீடத் தூதராகச் செயலாற்றிக் கொண்டிருந்த கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், ஈராக் போரின் 20 ஆண்டுகள் நினைவு நாளில் அக்கால நிகழ்வுகள் இன்னும் பசுமையாக உள்ளன என தெரிவித்தார்.
2001ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈராக் மற்றும் ஜோர்டானுக்கான திருப்பீடத் தூதராக இருந்த தனக்கு, 2003ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடு ஈராக்கை ஆக்ரமித்ததும், அதைத் தொடர்ந்த காலக்கட்டமும், வாழ்வின் மிகச்சிரமமான காலமாக இருந்ததாகத் தெரிவித்தார் கர்தினால்.
மத்தியக் கிழக்குப் பகுதியின் இம்மோதல் குறித்து திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் அடிக்கடிப் பேசியதையும், பேச்சுவார்த்தைகளின் வழி அமைதித் தீர்வுக்காண அவர் தொடர்ந்து வலியுறுத்தியதையும் நினைவூட்டினார் கர்தினால் பிலோனி.
ஈராக் போரின் அனைத்துச் சூழல்களிலும் திருஅவை எப்போதும் மக்களுடனேயே இருந்து வந்துள்ளது என்பதை எடுத்துரைத்த கர்தினால் பிலோனி அவர்கள், போர் மிகத் தீவிரமாக இடம்பெற்ற காலத்திலும் திருஅவை அதிகாரிகள் மக்களைக் கைவிட்டு வெளியேறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமிய நாடான ஈராக்கில் மத சுதந்திரத்தை கிறிஸ்தவர்கள் முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கப்படவில்லையெனினும், தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்ற அவர்களுக்கு உரிமை இருந்தது, அதாவது, மறைப்போதகப் பணிகள் அனுமதிக்கப்படவில்லையெனினும், விரும்பிய மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் இருந்தது, மற்றும் அவர்கள் மதிக்கப்பட்டார்கள் என்றார் கர்தினால்.
சதாம் ஹுசைனின் ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர், கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதும், கிறிஸ்தவக் கோவில்கள் இடிபாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டதும் தொடர்ந்தது என்பதையும் நினைவுகூர்ந்தார் கர்தினால் பிலோனி.
ஈராக்கில் கிறிஸ்தவக் கோவில்கள் மீண்டும் கட்டியெழுப்பபட்டு வருகின்றபோதிலும், பெருமெண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதால் போருக்கு முன்பிருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது பாதியாக குறைந்துள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார் கர்தினால்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்