தேடுதல்

இஸ்ரயேல் நிலப்பகுதி இஸ்ரயேல் நிலப்பகுதி   (AFP or licensors)

தடம் தந்த தகைமை - யோசுவாவுக்கு அழைப்பு

ஒற்றர்கள் யோசுவாவிடம், “நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்” என்றார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யோசேப்பின் வழியாக எகிப்தில் குடியேறி பல்கிபெருகிய இஸ்ராயேலர், மோசே வழியாக ஆண்டவரின் துணையுடன்  எகிப்திலிருந்து வெளியேறி வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிச் சென்றனர். நாட்டையடையும் முன்னரே மோசேயும் இறந்துவிட, மோசேயின் உதவியாளராகிய யோசுவாவிடம் பேசுகிறார் ஆண்டவர். யோசுவாவும் மக்களை வழிநடத்துகிறார்.

நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பி, அவர்களிடம், “நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்” என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர். சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது. உடனே அவன், “உன் வீட்டுக்கு வந்து உன்னோடு தங்கியிருக்கும் ஆள்களை வெளியே கொண்டுவா. ஏனெனில், அவர்கள் நாடு முழுவதையும் உளவறிய வந்துள்ளனர்” என்று இராகாபிடம் சொல்லுமாறு ஆள் அனுப்பினான். அப்பெண் அவ்விருவரையும் அழைத்து ஒளித்துவைத்தபின், “சில மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. இருட்டியபின் வாயில் கதவு சாத்தப்படும்பொழுது அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்” என்றார். அவர் அவர்களை மாடியில் ஏற்றி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்தார். அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர். தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது.

விலைமாதால் காப்பாற்றப்பட்ட அவர்கள் தங்கள் சொந்த இடம் திரும்பி யோசுவாவிடம், “நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்” என்றார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2023, 13:22