தடம் தந்த தகைமை – பாஸ்கா கடத்தல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள். அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள். அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்கவேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.
நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா’. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்