தடம் தந்த தகைமை – இஸ்ரயேல் மக்களின் புலம்பல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பார்வோன் நெருங்கி வந்து கொண்டிருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர். அவர்கள் மோசேயை நோக்கி, “எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே! ‘எங்களை விட்டுவிடும்; நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம்’ என்பது தானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில், பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்’ என்றனர். மோசே மக்களை நோக்கி, “அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்” என்றார்.
ஆண்டவர் மோசேயை நோக்கி, “ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்