தடம் தந்த தகைமை – எகிப்தில் குடியேறிய இஸ்ரயேல் என்னும் யாக்கோபு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர். கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு, யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார். எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.
கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள். யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார். அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!” என்றார்.
பார்வோன் கட்டளையிட்டிருந்தபடி, யோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார். மேலும், யோசேப்பு தம் தந்தை, தம் சகோதரர், தம் தந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் அவரவர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவளித்து அவர்களைப் பேணிக் காத்துவந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்