தேடுதல்

ஆயி நகரம் ஆயி நகரம்  

தடம் தந்த தகைமை - ஆயி நகரைக் கைப்பற்றல்

யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அவர்கள் முன் தோற்றவர்கள்போல் பாலைநிலம் நோக்கி ஓடினார்கள். நகரில் இருந்த மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவர்களைத் துரத்தினர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆண்டவர் யோசுவாவிடம், “அஞ்சாதே, கலங்காதே; உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள். ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்! இதோ! ஆயியின் மன்னனையும், அதன் மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்வாய்; கைப்பற்றப்பட்ட பொருள்களையும் கால்நடைகளையும் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். நகருக்குப் பின்புறத்தில் ஒரு பதுங்கிடம் அமை” என்றார்.

யோசுவா ஏறக்குறைய ஐயாயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு சென்று பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் நகருக்குக் கிழக்கே பதுங்கிடத்தில் தங்கச் செய்தார். மக்கள் நகருக்கு வடக்காகவும், பள்ளத்தாக்கிற்குக் கிழக்காகவும் இருந்த இடத்தில் பாளையம் இறங்கினார்கள். ஆயியின் மன்னன் இதைக் கண்டதும், அந்நகர மக்கள் காலையில் விரைந்து எழுந்து இஸ்ரயேலுடன் போரிட வெளியே வந்தனர். யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அவர்கள் முன் தோற்றவர்கள் போல் பாலைநிலம் நோக்கி ஓடினார்கள். நகரில் இருந்த மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவர்களைத் துரத்தினர். அவர்கள் யோசுவாவின்பின் ஓட, நகரிலிருந்து பிரிக்கப்பட்டனர். அனைவரும் நகரைத் திறந்துவிட்டபடியே வெளியேறி இஸ்ரயேலின் பின்னே ஓடினர். பதுங்கியிருந்தவர் வேகமாகத் தம் இடத்திலிருந்து எழுந்தனர். அவர்கள் வேகமாக ஓடிவந்து நகரினுள் புகுந்து அதைக் கைப்பற்றி விரைவாக அந்நகரை நெருப்பால் எரித்தனர். ஆயியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதோ நகரினின்று எழும்பிய புகை விண்ணை நோக்கிப் போவதைக் கண்டனர். எப்பக்கமும் தப்பியோட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பாலைநிலம் நோக்கி ஓடிய இஸ்ரயேல் மக்கள் தங்களைத் துரத்தியவர்மீது திரும்பிப் பாய்ந்தனர். இந்நேரத்தில் பதுங்கியிருந்தோரும் நகரிலிருந்து வெளியே வந்து அவர்களைத் தாக்கினர். எனவே, இருபக்கமும் இஸ்ரயேலருக்கு இடையே அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களுள் ஒருவனும் உயிரோடு தப்பிக்காதபடி அவர்கள் தாக்கப்பட்டனர். இஸ்ரயேலர் ஆயியின் மன்னனை உயிருடன் பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2023, 13:07