தேடுதல்

கொக்கு கொக்கு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-8 தீமையகற்றி நன்மை செய்வோம்

தீமைகள் விலக்கி, நன்மைகள் செய்து, நமது அழியாத செல்வமாகிய ஆண்டவராம் கடவுளின் இறையாட்சியை உடைமையாக்கிக்கொள்வோம்.
திருப்பாடல் 37-8

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

'‘உவகை தரும் நேரிய வாழ்வு!' என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 23 முதல் 26 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்து கடந்த வார விவிலியத் தேடலில் நாம் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 27 முதல் 30 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது, அவ்வார்த்தைகளை இறையொளியில் வாசிக்கக் கேட்போம். தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். (வசனம் 27-29).  

மேற்கண்ட இந்த மூன்று இறைவசனங்களிலும் 'தீமையை விலக்கி நன்மை செய்' என்பதுதான் மையக்கருத்தாக அமைகிறது. ஒருவர் தீமையை விலக்கி நன்மை செய்தாலே போதும் அவர் நேர்மையாளராகிவிடுவார் என்றும், அவர் கடவுளால் என்றும் கைவிடப்படாத நிலையில், கடவுளின் இறையாட்சியை சொந்தமாக்கிக் கொள்வார் என்றும் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர். இந்த உலகம் தொடங்கியது முதல் இன்றுவரை மனிதருக்கு அறிவுறுத்தப்படும் மிகவும் உன்னதமான கருத்து எதுவென்றால், 'தீமையிலிருந்து விலகி நன்மை செய்' என்பதுதான். போட்டி, பொறாமை, ஆணவம் ஆகிய மூன்றும்தான் தீமைக்கு அடிப்படையான காரணங்கள் என்பதை நம் மனதில் நிறுத்த வேண்டும். இந்தத் தீமை என்பது படைப்பின் தொடக்கத்திலேயே, அதாவது, காயின்-ஆபேல் வாழ்வில் நிகழ்வதாகத் தொடக்கநூல் பதிவு செய்கிறது. ஆபேல் நன்மையின் உருவாகவும், காயின் தீமையின் உருவாகவும் எடுத்துக்காட்டப்படுகின்றனர். காயின் தன் தம்பி ஆபேலை கொலை செய்யும் அளவிற்குத் தீமைக்கு அடிமையாகிவிடுகிறான் (காண்க தொ நூ 4:1:16). ஆபேலின்மீது கடுஞ்சினம் கொண்டிருக்கும் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்று கடவுள் கூறுவதைக் காண்கின்றோம். காயின் ஆபேலின் மீது சினம் கொள்வதற்குக் காரணமே, ஆபேலின் பலியை மட்டும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்பதற்காகத்தான். ஏனென்றால், காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலோ, தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். அதனால்தான், ஆண்டவர் ஆபேலின் காணிக்கையை கனிவுடன் கண்ணோக்கினார். ஆக, அடிப்படையில் காயின் செயல்களில் தீமை மறைந்திருப்பதைப் பார்க்கின்றோம். இந்தத் தீமையின் விளைவாகப் போட்டி, பொறாமை, ஆணவம், செருக்கு, சினம், பொய்கூறல் ஆகியவை ஏற்பட்டு காயின், ஆபேலை கொலை செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றுவிடுகின்றது. நாம் வயல்வெளிக்குப் போவோம் என்று பொய்கூறி தன் தம்பி ஆபேலை அழைத்துச்சென்று அவனைக் கொன்றொழித்த பிறகு, ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டபோது, “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்று கடவுளுக்கு பதில்மொழி தருவதிலிருந்தே அவனிடம் விளங்கிய தீமையின் வீரியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஓர் ஊரில் கொக்கு ஒன்று இருந்தது. அது ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம், “ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப்படுத்துகிறாய்? நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. கடவுளே என்று நான் ஒரு ஓரமாகத்தானே இருக்கின்றேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'” என்று கேட்டது. அதற்குக் கொக்கு, “நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் யாருக்கும் எவ்விதப் பயனும் இல்லை. நான் பல இடங்களுக்குத் தன்னிச்சையாகப் பறந்து திரிபவன். நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்" என்று இறுமாப்புடன் பதில் சொன்னது. அதைக் கேட்ட கல் கடகட வெனச் சிரித்து விட்டு சொன்னது “அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனது திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். நீ எப்போதுமே தன்னிச்சையாகப்  பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் புதுப் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. எனவே நான்தான் கடவுளின் உருவிலுள்ள இறைவன். நீ அந்தக்  கடவுளுக்குக் கட்டுப்பட்ட ஆன்மா என்பதை மறந்துவிடாதே. நீ இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் ஆன்மா. உன் இயக்கம் நின்று விட்டால் என்னைப் போல நீயும் கல்லாகிவிடுவாய். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் என்னை நீ ஏளனம் செய்யமாட்டாய்” என்றது. கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய் உணர்வு பெற்ற கொக்கு, தன் ஆணவத்தையும் கர்வத்தையும் உணர்ந்து கல்லை வணங்கி விட்டுச் சென்றது. ஆக, ஆணவமும், செருக்கும், கர்வமுமே தீமைக்கு ஆணிவேர் என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இதுவரை நாம் தியானித்து வரும் இத்திருப்பாடலில், தீமை செய்வோர் வேரறுக்குக்கப்படுவர், அதாவது, அழிந்துபோவர் என்றும், எளியோர் கடவுளின் நிலத்தை உரிமையாக்கிக்கொள்வர் என்றும் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுகின்றார் தாவீது அரசர். இதன் காரணமாகத்தான், தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு (திபா 34:14) என்று அறிவுறுத்தும் தாவீது அரசர், ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார் (திபா 121: 7-8) என்றும், பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்; உம் கண்ணாலேயே நீர் காண்பீர். ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்; உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர்  கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர் (திபா 91:8-12) என்றும் வேறுசில திருப்பாடல்களிலும் கூறுவதன் வழியாக, தீமையை விலக்கி நன்மை செய்வோரைக் கடவுள் கண்ணின் மணியெனக் காப்பார் என்றும், தீமையாளர்களை முற்றிலும் அழித்தொழித்துவிடுவார் என்றும் எடுத்துக்காட்டுகிறார். மேலும், நன்மை செய்வதில் நீங்கள் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர் யார்? நீதியின்பொருட்டுத் துன்புற வேண்டியிருப்பினும் நீங்கள் பேறு பெற்றவர்களே. யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம் (1பேது 3:13-14) என்று பேதுருவும் தனது திருமடலில் எடுத்துக்காட்டுகின்றார்.       

ஒரு நாள் புத்தர் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் சீடர்கள், அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள். புத்தர் தம் சீடர்களை நோக்கி, “ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்” என்று கேட்டார். எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருப்பினும் அவர்கள் அதற்குப் பதில்மொழி கூற விழைந்தனர். அப்போது, “எழுபது ஆண்டுகள்“ என்றார் ஒரு சீடர். “தவறு“ என்றார் புத்தர் “அறுபது ஆண்டுகள்“ என்றார் இன்னொரு சீடர். “தவறு“ என்றார் புத்தர் “ஐம்பது ஆண்டுகள்“ என்றார் மூன்றாமவர். மீண்டும் “தவறு“ என்றார் புத்தர். “இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன” என்று திகைத்தனர் சீடர்கள். சில வினாடிகள் அமைதியாக இருந்த புத்தர், பிறகு “அது ஒரு மூச்சு“ என்றார்! “வெறும் மூச்சுவிடும் நேரம்தானா?” என்று கேட்டார் ஒரு சீடர். “அப்படியல்ல. வாழ்வு என்பது ஒரு கணமன்று.! ஆனால், அதனை ஒவ்வொரு கணமாக வாழவேண்டும்! ஒவ்வொரு கணப்பொழுதிலும் அதனை முழுமையாக வாழவேண்டும். சிலர் நேற்றைய நினைவில் மூழ்கி இறந்த காலத்தில் வாழ்கிறார்கள். சிலர் அறியப்படாத எதிர்காலத்தில், எதிர்காலக் கனவில், எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்கிறார்கள். அதனால், அவர்கள் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறார்கள்” என்றார் புத்தர்.

ஆக, வாழ்க்கையின் அர்த்தத்தையும் அழகையும் அறிந்து அதனை ஒவ்வொரு கணமாக சுவைத்து வாழாத மனிதர்கள்தாம், போட்டி, பொறாமை, கர்வம், ஆணவம், அகந்தை, செருக்கு ஆகிய தீமைகளைக் கொண்டு, பிறரை அழிக்க முற்பட்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றனர். மன்னர் சவுல் தனக்கு எதிராகச் செய்த அத்தனை தீமைகளையும் ஏற்றுக்கொண்டு அவருக்கு நன்மையை மட்டுமே செய்தார் தாவீது. ஆனால், இறுதியில், மன்னர் சவுல் தனது தீமையாலே அழிந்துபோனார் என்பதை நாம் அறிவோம். எனவே, தீமைகள் விலக்கி, நன்மைகள் செய்து, நமது அழியாத செல்வமாகிய ஆண்டவராம் கடவுளின் இறையாட்சியை உடைமையாக்கிக்கொள்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் இறைவேண்டல் எழுப்பி மன்றாடுவோம்.                     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2023, 13:19