தேடுதல்

ஐயா நல்லகண்ணு ஐயா நல்லகண்ணு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-7 உவகை தரும் நேரிய வாழ்வு!

தாவீது அரசர், ஆண்டவராம் கடவுள்மீது கொண்டிருந்த நேரிய உள்ளத்தின் காரணமாக அவருடைய எதிரிகளின் வீழ்ச்சியைக் காணச் செய்தது.
திருப்பாடல் 37-7

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘இறையாசீர் பெற்றோர் மகிழ்வர்!' என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 20 முதல் 22 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 23 முதல் 26 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இறைவன்மீது நமது பார்வையைப் பதித்தவர்களாய், இப்போது அவ்வார்த்தைகளை பக்தியுணர்வுடன் வாசிக்கக் கேட்போம். தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மையாளர்  கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்; அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர் (வசனம் 23-26)

இந்த இறைவார்த்தைகளைக் குறித்துச் சிந்திக்கும்போது நம் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மாபெரும் மனிதரைக் குறித்த நினைவு எனக்கு வருகின்றது. ஐய்யா நல்லகண்ணு பற்றி நாம் அறிந்திருக்கின்றோம். 1929-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர், தனது 15-வது வயதில் தன்னை கம்யூனிச சித்தாந்தத்தோடு இணைத்துக் கொண்டார். அவரது எளிமையான வாழ்வும், தேசப்பற்றும் பிறர்நலப்பணியும் என்றும் போற்றத்தக்கவை. ஒருகாலத்தில் இவர் தமிழக முதல்வராக வரவேண்டும் என்றெல்லாம் மக்கள் விருப்பம் கொண்டிருந்தனர். ஆனால், வயது மூப்பின் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு அவர் ஆசைபடவுமில்லை. தனது பிறரன்பு பணிகளுக்காகப் பல விருதுகளை வென்றவர். ‘தகைசால் தமிழர்’ என்ற விருது தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்டபோது, அவ்விருதுடன் சேர்த்து அளிக்கப்பட்ட ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையுடன், தன்னுடைய நிதியான ரூபாய் 5 ஆயிரத்தையும் சேர்த்து, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கினார். அந்தளவுக்கு பணத்தின்மீது பற்றற்ற நிலை கொண்டவர். தன் வாழ்நாள் முழுதும் நாட்டு மக்கள் பிரச்சனைக்காக எந்த ஒரு “சுய விளம்பரமும்” இல்லாமல் போராடியவர். ஒரு தலைவன் எப்படி எளிமையாக, ஒழுக்கமாக, கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு  சிறந்த எடுத்துக்காட்டு. 1968-ஆம் ஆண்டில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை ‘தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் ‘சங்கத்தின் செயலாளராக இருந்தவர். பின் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார், 2005-ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். நான்கு வேட்டி சட்டையை மட்டும் வைத்துக் கொண்டு, கட்சி தரும் சம்பளத்தில் மிக எளிமையாக வாழ்பவர். அவரது 80-வது பிறந்தநாளில் அவரது வாழ்நாள் தியாகத்தைப் போற்றும் விதமாக, கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா முழுவதும் நிதி திரட்டி கொடுத்த ஒரு கோடி ருபாய் பணத்தை அதே மேடையில் கட்சிக்காகவே திருப்பி கொடுத்த மாபெரும் தலைவர். ஒரு முறை அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர மேடையில் பேசுவதற்கு அவரை அழைத்த போது, 'நாட்டின் துயரத்தை இத்தனை அலங்கார விளக்குப் போட்டா பேசுவது’ என்று கட்சியினரைக் கடிந்துகொண்டவர். பல சமயங்களில் ‘விளம்பரம்’ இல்லாமல் மக்கள் பிரச்சனைக்காக களத்தில் இறங்கி போராடியவர். இவ்வளவு நற்குணங்களைக் கொண்டிருந்தபோதிலும் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலிலிலும் ஐய்யா நல்லக் கண்ணு தோல்வியுற்றார். ஆனாலும் தோல்வி குறித்து சிறிதும் கவலை கொள்ளாமல் தனது மக்கள் நலப்பணியைத் தொடர்ந்தார். இலஞ்சம், ஊழல், என்று எதிலும் ஈடுபடாத காரணத்தினால் ஊடகங்களும் இவரை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. ஒரு தலைசிறந்த தலைவருக்குரிய  எல்லாவிதமான தகுதிகளுடனும் 96 வயதைக் கடந்து இன்றும்  நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கின்றார் ஐய்யா நல்லகண்ணு.

ஐயா நல்லகண்ணு
ஐயா நல்லகண்ணு

நாம் தியானித்துக் கொண்டிருக்கும் இந்த நான்கு இறைவசனங்களிலும் இரண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார் தாவீது அரசர். முதலாவதாக, 'தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின்' என்ற வார்த்தையை இங்கே பயன்படுத்துகிறார். அப்படியென்றால், நேரிய வாழ்வையும் இலட்சியத் தெளிவையும், சமுதாய அக்கறையையும் கொண்டு வாழும் மனிதர்கள், தங்களைக் குறித்தே உவகை கொள்வார்கள், அதாவது, மகிழ்வார்கள் என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறுகின்றார் தாவீது. மேலும் இப்படிப்பட்டவர்கள் தங்களின் இலட்சியத்திற்காகத் துயருறும் வேளையில் கடவுள் அவர்களை உறுதிப்படுத்துகின்றார் என்றும் தெளிவுபடுத்துகிறார். இவ்விடத்தில், ‘தான் எவ்வளவோ நற்செயல்கள் செய்தும் கூட மன்னர் சவுல் தன்மீது இந்தளவுக்குக் காழ்ப்புணர்வு கொண்டு தன்னைக் கொல்லத் தேடுகிறாரே’ என்பதை நினைவு கூர்ந்து, தன்னையும் கூட உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட
ஒரு மனிதராக எடுத்துக்காட்டி இருக்கலாம். இதன் காரணமாகவே, ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண் (திபா 18:2) என்றும், ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார் (திபா 55:22) என்றும் வேறு சில திருப்பாடல்களிலும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. மேலும், ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன் (விப 15:2) என்று தன் வழியாக இஸ்ரயேல் மக்கள் பெற்ற விடுதலைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றார் மோசே. ஆக, எந்தயொரு கடினமான சூழ்நிலையிலும் தங்களின் நேரிய வாழ்வை காத்துக்கொள்ள விரும்பும் அனைவரையும் இறைவன் உறுதிப்படுத்துகின்றார் என்பது மிகவும் தெளிவாகிறது. எகிப்திலிருந்து கானான் நாட்டிற்கு இஸ்ரயேல் மக்களை வழிநடத்திச் செல்லும் வழியில் மோசே எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்தார் என்பதையும் நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக, தனது சொந்த மக்களாலேயே பலமுறை மிகுந்த வேதனைக்கு ஆளாக நேரிட்டது என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஆனாலும் இந்த நெருக்கடிகளின்போது அவர் சற்றும் மனம் தளராமல் கடவுளுக்கு இறுதிவரை மிகவும் பிரமாணிக்கமாக நடந்துகொண்டார்.

இரண்டாவதாக, ‘நேர்மையாளர் கைவிடப்படுவதில்லை, அவர்கள் வழிமரபினர் பிச்சை எடுப்பதில்லை, அவர்கள் மனமிரங்கி கடன் கொடுப்பர் என்றும், அவர்கள் வழிமரபினர் ஆசிபெற்றவராய் இருப்பர்’ என்றும் கூறுகின்றார் தாவீது. இந்த வரிகளிலும் கூட தன்னை ஒரு நேர்மையாளராகவும் கடவுளால் கைவிடப்படாதவராகவும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. இதனைக் கருத்தில் கொண்டுதான், உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை (திபா 9:10) என்றும், ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார் (திபா 94:14) என்றும் எடுத்துரைக்கின்றார்.

I.K. குஜ்ரால் (இந்திர குமார் குஜ்ரால்) அவர்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம். இந்திய நாட்டின் 12-வது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டவர் இவர். உண்மையில் அப்பழுக்கற்ற ஒரு நேர்மையான மனிதர் இவர். அனைத்துத் தரப்பினராலும் மதித்துப் போற்றப்பட்டவர். தனக்குக் கிடைத்த பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தன் நேர்மையான கொள்கைகளை யாருக்காகவும் எப்போதும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தான் இருந்த கட்சியின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முரண்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட நற்குணங்கள் கொண்ட இவர், 1997-ஆம் ஆண்டு நாட்டின் 12-வது பிரதமர் ஆனபோது, கட்சியின் தலைமை அவரை ஆட்டுவிக்க முயற்சி செய்ததால், வெறும் 11 மாதங்களில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று, நம் இந்திய நாட்டில் பதவிக்காகப் பல்வேறு பொய்யான வேடங்களைப் போடும் புல்லுருவிகள் மத்தியில், மக்களுக்காக மட்டுமே பணியாற்றவேண்டும் என்ற தனது இலட்சியம் சிதைந்துபோய்விடக்கூடாது என்பதற்காக அவ்வுயர் பதவியையே தூக்கியெறியத் துணிந்த நேரிய மனிதர். இவர் விடுதலைப் போராட்ட தியாகிகள் குடும்பத்தில் பிறந்ததால், இளம் வயதிலேயே இவருக்குச் சுதந்திர உணர்வு அதிகம் காணப்பட்டது. சிறுவர்கள் அமைப்பை வழிநடத்திச் சென்றதற்காகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதோடு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திலும் கலந்துகொண்டு சிறைச் சென்றவர். இந்திரா காந்தியின் அமைச்சரவையில் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இந்தியாவின் மிகச் சிறந்த வெளியுறவு அமைச்சர் என்பது இவரது உழைப்புக்கும் நேர்மைக்கும், கண்ணியத்திற்கும் கிடைத்த மணிமகுடம். இவர் பிரதமராக இருந்தபோதுதான் அன்னை தெரசா இறைபதம் சேர்ந்தார். அப்போது, அந்நாளை தேசிய துக்க நாளாக  அறிவித்ததுடன், அவரது  உடல் கொல்கத்தாவில் நல்லடக்கம் செய்யப்பபட்டபோது, ​​அவருக்கு அரசு மரியாதையை அளிக்க உத்தரவிட்டார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. நேர்மையாளர்கள் வீழ்ந்தாலும் மக்களின் மனங்களில் விதையாய் விழுந்து விருட்சமாகி எழுவர் என்பதற்கு I.K. குஜ்ரால் அவர்களின் வாழ்வு ஒரு சான்றாக அமைகின்றது.

நமது தாவீது அரசர் இந்நாள்வரை போற்றப்படுவதற்கு அவரது நேரிய வாழ்வே காரணமாக அமைகின்றது. தனது வாழ்க்கைப் பயணத்தில் தனக்கு வந்த அனைத்து துன்ப துயரங்களையும் நேரிய உள்ளத்துடன் தாங்கிக்கொண்டு இறுதிவரை கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருந்தார். அதனால்தான் அவரது எதிரிகளின் வீழ்ச்சியை அவரால் காண முடிந்தது. ஆகவே, நாமும் தாவீதைப் போல மனம் கொண்டவர்களாக வாழ்வதற்கான அருளை ஆணடவர் இயேசு இந்நாளில் நமக்கு வழங்கிட இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2023, 13:14