விவிலியத் தேடல்: திருப்பாடல் 37-10, இழிவானவர் இல்லாதொழிவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நல்லாரின் வழியா? பொல்லாரின் வழியா?' என்ற தலைப்பில் 37-வது திருப்பாடலில் 30 முதல் 33 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 34 முதல் 36 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறையொளியில் அவ்விறைவார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். ஆண்டவருக்காகக் காத்திரு; அவர்தம் வழியைப் பின்பற்று; அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய். வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன். ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்; அந்தோ! அவர்கள் அங்கில்லை; தேடிப் பார்த்தேன்; அவர்களைக் காணவில்லை (வசனம் 34-36).
நாம் தியானிப்பதற்கு இரண்டு முக்கியமான காரியங்களை இன்றைய இறைவார்த்தைகளில் வலியுறுத்துகிறார் தாவீது அரசர். முதலாவது, நாம் ஆண்டவருக்கு உரிய வழிகளைத் தேடவேண்டும், அமைதியாகவும் பொறுமையாகவும் காத்திருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் கடவுள் நமக்கு அருளும் விண்ணகக் கொடையான நிலைவாழ்வை உடைமையாக்கிக்கொள்ள முடியும் என்று உரைக்கின்றார். நான் படித்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியினுடைய உண்மைக் கதை ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகின்றது. ஒரு இளைஞன் தன் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இந்தியக் குடிமைப்பணி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென முயற்சி செய்து படிக்கிறான். கடுமையான முயற்சிக்குப் பின் தேர்வு எழுதி முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். திடீரென ஒரு நாள் தேர்வு முடிவு வெளி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் தனது பெயர் இல்லாததைக் கண்ட அவன், விரக்தியடைந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடன் இரயில் தண்டவாளத்தின் மீது நடந்து செல்கிறான். அப்போது திடீரென ஒருவரின் குரல் பின்னால் இருந்துக் கேட்கவும், குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கிறான் அவ்விளைஞன். அங்கே தலைப்பாகை அணிந்த சர்தார்ஜி ஒருவர் அவனிடம் வந்து, “என்னப்பா, உன்னைப் பார்த்தால் ஏதோ விரக்தியில் இருப்பவன் போலத் தெரிகிறதே. என்ன காரணம்" என்றுக் கேட்டார்.” அப்போது அவ்விளைஞன் சிறிது தயக்கத்துடன் தன் கதையை சொல்கிறான். அவன் கதையைக் கேட்ட சர்தார்ஜி அவனுக்குத் தண்டவாளத்தைக் காட்டி, "இந்தத் தண்டவாளம் எத்தனையோ பேரை அவர்கள் சேரவேண்டிய இடத்திற்குக் கொண்டுபோய் சேர்க்கிறது. ஆகவே, நற்செயலின் அடையாளமாக அமைந்துள்ள இந்தத் தண்டவாளத்தில் நீ உன் வாழ்வை முடித்துக் கொள்ளக்கூடாது; ஒரு புது வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் தொடங்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் எந்தயொரு வெற்றியும் நாம் விரும்பிய உடனேயே கிடைத்துவிடாது. கடவுள் நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும் நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அத்துடன் முயற்சியையும் உழைப்பையும் எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக் கூடாது" என்று அறிவுறுத்தியதுடன் தன் கையில் போட்டிருந்த காப்பு ஒன்றை அவனது கையில் கட்டிவிட்டு, "எப்போதெல்லாம் உனக்கு விரக்தி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதைப் பார்த்து தன்னம்பிக்கையோடு செயல்படு; கண்டிப்பாக வெற்றி பெறுவாய்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அந்த வார்த்தைகள் அந்த இளைஞரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதன் பிறகு, அவர் கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் கொண்டு உழைத்ததன் பலனாக அடுத்தமுறை வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றார். பல்லாண்டுகள் பணியாற்றி இன்று பணி ஓய்வு பெற்று சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதில் குறிப்பிடும்படியான விடயம் என்னவென்றால், தனக்கு நம்பிக்கையளித்த அந்த சர்தார்ஜியை இறுதிவரை அவர் பார்க்கவே இல்லை என்பதுதான். ஆனால், அவர் நினைவாக இன்றுவரை அந்தக் காப்பை தன் கையில் கட்டியிருக்கின்றார்.
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு (திபா 27:14) என்றும், நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவமரக்கன்றுபோல் இருக்கின்றேன்; கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்; உம் அன்பரின் முன்னிலையில், உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்; இதுவே நன்று (திபா 52:8-9) என்றும், வேறுசில திருப்பாடல்களிலும் நம்பிக்கையோடும், பொறுமையோடும், அமைதியோடும் ஆண்டவருக்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் தாவீது அரசர். அவ்வாறே வேற்றினத்தாரிடையே நாடுகடத்தப்பட்ட இஸ்ரேல் மக்கள் நபிக்கையற்று மனம் தளர்ந்து சோர்வுற்றிருந்தபோது, என்றுமுள்ள இறைவனின் பரிவுள்ளதை எடுத்துக்காட்டி நம்பிக்கையோடு காத்திருக்க அழைப்புவிடுக்கின்றார் இறைவாக்கினரான எசாயா. உள்ளதை வருடும் அந்த இறைவார்த்தைகளை இப்போது கேட்போம். அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார் (எசா 40:29-31)
இரண்டாவதாக, நமக்குத் துரோகங்களும் துன்பங்களும் இழைக்கும் எதிரிகளின் வீழ்ச்சையைக் குறித்து அதிகம் நாம் கவலைப்படக் கூடாது என்றும், அவர்களின் தீவினைக்கான பயனை அவர்கள் விரைவில் அறுப்பார்கள் என்றும் நமக்கு நம்பிக்கை தருகின்றார் தாவீது. ‘அப்பப்பா... என்னடா உலகம் இது... அநியாயம் செய்யுற அத்தனை பெரும் ரொம்ப நல்ல இருக்காங்களே... அவர்களுக்கு ஒரு அழிவு கூட வருவதில்லையே...! பட்ட காலுலேயே படும்.. கெட்டக் குடியே கெடும்... என்று நம் முன்னோர்கள் சொன்னதுபோல, நாம்தானே தொடர்ந்து துயரங்களை அனுபவித்துக்கொண்டே வருகிறோம்’ என்று மக்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கின்றோம். ஏன் பல நேரங்களில் நாமும் கூட புலம்பி அழுதிருக்கின்றோம். இம்மாதிரியான நேரங்களில் நாம் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது என்றுதான் தாவீது நம்மிடமும் வேண்டுகிறார். வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன். ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்று கூறுவது மட்டுமல்ல, அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர் என்றும் கூறுகின்றார் தாவீது. இன்றைய உலகில் இருப்பவர்கள் இல்லாதவர்களை எப்படியெல்லாம் ஒடுக்குகிறார்கள் என்பதையும் அவர்களின் நிலபுலன்களையும் தங்குமிடங்களையும் தங்களின் அடாவடித்தனங்களால் அபகரித்துக்கொள்கிறார்கள் என்பதையும் கேள்விப்படுகிறோம்.
ஆந்திர மாநிலம், போடுவானிபாலத்தைச் சேர்ந்த சுதாராணி என்பவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டுக்குச் செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வீட்டிற்குச் செல்ல வழி இன்றி தவிப்பதாகக் கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர். மனு அளித்த பிறகும் பிரச்சினை தீரவில்லை. இதையடுத்து சுதாராணி தனது மகன், மகளுடன் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றார். அவரைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு ஒன்றை அவர் கொடுத்தார். அதில், “நான் ஏற்கனவே அளித்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆகவே, தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கூறி இருந்தார். மனுவை படித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியையின் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இன்றைய உலகம் மிதமிஞ்சிய செல்வப்பற்றில் மூழ்கிக் கிடக்கிறது. பணமிருந்தால் போதும் எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்கின்றது. இதன் காரணமாக எல்லாமே வர்த்தகமயமாகிவிட்டது. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் இன்று வர்த்தகப் பொருளாகிவிட்டனர். மனிதர் செய்யும் தீமையின் உச்சம் இது. எங்கு நோக்கினும் நன்மையைக் காட்டிலும் தீமைகளே அதிகம் நிறைந்திருக்கின்றன. ஆனாலும், நாம் இறைவன்மீது நம்பிக்கை கொண்டு தாவீது அரசரைப் போல நேரிய வழியில் பயணித்தால் நமது ஆன்மாவை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். அதேவேளை, தீமை விளைவித்த தீயவர்களின் பேரழிவையும் நாம் காண முடியும். இத்தகைய அருளுக்காக இறைவனிடம் இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்