பெண்களுக்கு ஆதரவளிக்கும் வங்கதேச தலத்திருஅவை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வங்கதேசத்தில் உள்ள கத்தோலிக்கத் தலத்திருஅவையானது, பெண்கள் தங்கள் வீடுகள், பணியகங்கள் மற்றும் பிற இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் முறைகேடுகளைத் தவிர்க்க ஒரு குழுவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியுள்ளார் Rita Roselin Costa.
பெண்களுக்கு எதிரான முறைகேடுகளைத் தவிர்க்க வங்கதேசத்தின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் மகளிர் பணிக்குழுவின் தலைமையில் ஒரு குழுவை அமைக்கக் கத்தோலிக்க ஆயர்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அதன் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான Costa.
எந்தவொரு பெண்ணும் எந்த விதமான பாலியல் முறைகேட்டிற்கு ஆளாகும்போதும் அவருக்கு உதவும் விதத்தில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு ஒரு குழுவை அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் மார்ச் 29, இப்புதனன்று, யூக்கான் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் Costa.
இந்தக் குழுவில் எட்டு மறைமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், இது அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் விளக்கியுள்ளார் Costa.
ஏறத்தாழ 72 விழுக்காட்டுப் பெண் தொழிலாளர்கள் மனரீதியான பாலியல் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும், 74 விழுக்காட்டுப் பேர் வாய்மொழி வழியாகப் பாலியல் முறைகேடுகளையும், 31 விழுக்காட்டுப் பேர் உடல் ரீதியான வன்முறை மற்றும் 6 விழுக்காட்டுப் பேர் பாலியல் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும் மார்ச் 28, செவ்வாயன்று, தலைநகர் டாக்காவில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்