ஆன்மிக உரையாடல் முறையைப் பின்பற்றும் ஆப்ரிக்க ஆயர் பேரவை
மெரினா ராஜ் -வத்திக்கான்
"சினோடல் செயல்முறையைப் புரிந்துகொள்வது என்பது தூயஆவியானவர் நம்மிடம் பேசுவதற்கு நம் இதயங்களைத் திறந்து, திருஅவையின் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பதைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார் பேராயர் Lucio Muandula.
மார்ச் 1 புதன்கிழமை முதல் 5 ஞாயிற்றுக்கிழமை வரை எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் ஆப்ரிக்க கண்டத்திற்கான ஆயர் பேரவை நடைபெற்று வரும் வேளையில் அதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ளார் ஆப்ரிக்க ஆயர் பேரவையின் முதல் துணைத்தலைவர் பேராயர் Lucio Muandula.
"ஆப்ரிக்காவில் உள்ள அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றாகப் பயணிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் செவிமடுக்க வேண்டும் என்றும் அதனால்தான், இந்த ஒன்றிணைந்த ஆயர் பேரவைப் பயணத்தில் இணைந்து பயணிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார் பேராயர். Muandula.
ஆன்மீக உரையாடலின் மூன்று படிகள்
ஆன்மீக உரையாடல் எனப்படுவது, தளத்தைத் தேர்ந்தெடுத்தல், மற்றவர்களுக்கும் இடம் கொடுத்தல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் என்னும் மூன்று முக்கிய படிகளை உள்ளடக்கியது என்று வலியுறுத்தி அதனைப்பற்றிய விளக்கங்களையும் அளித்துள்ளார் ஆப்ரிக்க ஆயர் பேரவை தலைமைச் செயலகத்தின் ஆலோசகர், அருள்பணி Giacomo Costa,
"ஆன்மீக உரையாடல் முறை விளைவுக்கு உத்தரவாதம் அளிக்காது, ஆனால் அது ஒன்றாக பயணம் செய்வதற்கான வழியை வழங்குகிறது," என்று எடுத்துரைத்துள்ள Costa, "இந்த உரையாடல் முறை ஒருவருக்கொருவர் பங்களிப்பை வழங்க, பிறர் குரலைக் கேட்கவும், நற்செய்தி பணியைப் பார்ப்பதற்கான புதிய வழிகளை நமக்கு வழங்கும் தூயஆவியானவருக்கு நம் இதயங்களைத் திறப்பதற்கு உதவியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
செபத்தில் தொடங்கி செபத்தில் முடியும் ஆன்மிக உரையாடல் முறை வாழ்க்கை அனுபவத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்று, எம்மாவூஸுக்குச் செல்லும் சீடர்களைப் பற்றி குறிப்பிட்ட அருள்பணி Costa, திருத்தந்தை பிரான்சிஸின் அப்போஸ்தலிக்க அறிவுரையான Christus vivit தொடர்புபடுத்தி பேசியுள்ளார்
சீடர்கள், தங்களின், அவர்களின் கவலைகளையும் சிரமங்களையும் வெளிக்கொணர்ந்து, வாழ்க்கை அனுபவத்திலிருந்து தொடங்கும்படி இயேசு கேட்டுக்கொண்டது போல, நாம் வாழ்கிறோம் என்ற சூழலை உருவாக்கி எதார்த்தத்துடன் தொடர்புகொள்வதே முதல் படி என்றும், "ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கதை மற்றும் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதை பகிர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அருள்பணி
அனுபவத்தில் ஆழமாகச் செல்லுதல், நம்பிக்கையின் மறைபொருளை புரிந்து கொள்ளுதல், உயிர்த்த இயேசுவுடன் நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல், என்பவற்றைப்பற்றி விளக்கிய அருள்பணி Costa, 'நான், எனது புரிதல்' என்பதிலிருந்து 'நாம், நமது புரிதல் என்ற இணக்கமான சூழலுக்கு மாறுவது தூய ஆவியின் குரலுக்கு செவிமடுப்பதன் வழியாக சாத்தியமாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்